தி.வி.க. பொறுப்பாளர் பாரூக் படுகொலை: மாற்று கருத்தை அடியோடு அழிக்க முற்படும் மத அடிப்படைவாதிகளுக்கு இந்த மண்ணில் இடமில்லை. இரும்புக்கரம் கொண்டு அடக்கவேண்டும்! – சீமான்

10

மாற்று கருத்தை அடியோடு அழிக்க முற்படும் மத அடிப்படைவாதிகளுக்கு இந்த மண்ணில் இடமில்லை. இரும்புக்கரம் கொண்டு அடக்கவேண்டும்! – சீமான்

இதுகுறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

திராவிட விடுதலை கழகத்தைச் சேர்ந்த அருமைத்தம்பி பாரூக் அவர்கள் நேற்றிரவு படுகொலை செய்யப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியினையும், வேதனையினையும் அளிக்கிறது. இந்தப் படுகொலை வன்மையான கண்டனத்திற்குரியது. பாரூக்கை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு இரங்கலைத் தெரிவித்துக் கொண்டு அவர்களது குடும்பத்துயரத்தில் நானும் பங்கேற்கிறேன்.
அண்மைக்காலமாகத் தமிழகத்தின் அரசியல் பிரமுகர்கள் படுகொலை செய்யப்பட்டு வரும் போக்கு அதிகரித்தவண்ணம் இருக்கிறது. பொதுவாழ்வில் ஈடுபடுவோர்க்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தவும், எதிர்க்கருத்தை ஏற்க முடியாதவர்கள் தங்கள் இயலாமையைப் போக்கிக்கொள்ளவுமே இதுபோன்ற கொடும் வன்முறைச்சம்பவங்களில் ஈடுபடுகின்றனர். மாற்று இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் தங்கள் கருத்துகளின் மூலம் மோதிக்கொள்வதும், தங்களது தத்துவ நிலைப்பாட்டை எடுத்துரைத்து தர்க்கரீதியான விவாதத்தில் ஈடுபடுவதும் சனநாயகத்தின் அடிப்படைக்கூறுகளாகும். அது யாவற்றையும் ஏற்காதவர்களே இந்தப் படுகொலைகளை நிகழ்த்துகின்றனர். இதில் அந்த மதம் இந்த மதம் என்ற எந்தப் பாகுபாடுமில்லை..எல்லா மத அடிப்படைவாதிகளும் இச்ச்செயல்களில் ஈடுபடுகிறார்கள்..

கருத்தினைக் கருத்தினால்தான் எதிர்கொள்ள வேண்டுமே ஒழிய, வன்முறை அதற்கு எந்தவகையிலும் தீர்வல்ல! எதிர்கருத்தினைக் கொண்டிருப்பவர்களைக் கொலைசெய்வதும், அவர்களை ‘தேச விரோதிகளாக’ சித்தரிப்பதுமான விரும்பத்தகாத நிகழ்வுகளை நாம் ஒருபோதும் அனுமதிக்க முடியாது. இந்தப் படுகொலைகள் யாவும் மராட்டியத்தில் கோவிந்த் பன்சாரே, தபோல்கர், கர்நாடகத்தில் கல்புர்கி போன்றோர் படுகொலை செய்யப்பட்டதன் நீட்சிதானோ என்ற ஐயம் நமக்கு வலுவாக எழுகிறது. “எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு” என்று தான் தமிழ்மறை பறைசாற்றுகிறது. அவ்வழியே தமிழகம் எப்பொழுதுமே மாற்றுக்கருத்துகளை ஜனநாயக வழியில் எதிர்கொண்டு அதை அங்கீகரித்தும் வந்திருக்கிறது. மாற்று கருத்தை அடியோடு அழிக்க முற்படும் மத அடிப்படைவாதிகளுக்கு இந்த மண்ணில் இடமில்லை..
கொலைசெய்யப்பட்ட பாரூக்கின் மரணத்தால் கோவையில் தேவையற்ற பதற்றமும், பீதியும் உருவாகியிருக்கிறது. அது எதற்கும் வழிவிடாமல் தமிழ் மண்ணிற்கே உரித்தான சமத்துவமும், சகோதரத்துவமும் எப்போதும்போலத் தழைத்தோங்க தமிழக அரசானது உரிய பாதுகாப்பு முன்னேற்பாடு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். மேலும், பொதுவாழ்க்கையில் ஈடுபடுவோர்க்கான பாதுகாப்பை அரசு உத்திரவாதப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மத அடிப்படைவாத சக்திகளை இரும்புக்கரம் கொண்டு அடக்கவேண்டும். இத்தோடு, தம்பி பாரூக்கைக் கொலை செய்தவர்களைத் தனிப்படையின் மூலம் உடனடியாகக் கண்டறிந்து கொலையாளிகளின் பின்னால் இருக்கும் அனைவரையும் கைதுசெய்ய வேண்டும்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.