அரியலூர்: படுகொலை செய்யப்பட்ட நந்தினியின் வீட்டிற்கு நேரில் சென்று சீமான் ஆறுதல்

62

கடந்த சனவரி மாதம், அரியலூர் மாவட்டம் செந்துறை வட்டம் சிறுகடம்பூர் கிராமத்தைச் சேர்ந்த சிறுமி நந்தினி சில இளைஞர்களால் கூட்டு\ வன்புணர்ச்சி செய்யப்பட்டு கொடூரமாகக் கொலைசெய்யப்பட்டார். இந்த வழக்கில் இந்து முன்னணி நிர்வாகிகள் இருவர் கைதுசெய்யப்பட்டு வழக்கு விசாரணை நடைபெற்றுவருகிறது. இந்நிலையில் இன்று 10-02-2017 நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் படுகொலை செய்யப்பட்ட நந்தினியின் வீட்டிற்கு நேரில் சென்று அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.

தொடரும் பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைகளைக் கண்டித்து சீமான் இன்று 10-02-2017 வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

சென்ற மாதம் ஒரு பக்கம் நம்மின இளைஞர்கள் கூடி தமிழினத்தின் பணபாட்டைக் காக்க அறம் வழி நின்று ஒழுக்கத்தோடும், நேர்மையோடும் போராடிக்கொண்டிருந்த வேளையில் தான் இன்னொரு பக்கம் தங்கை நந்தினி சில இளைஞர்களால் சிதைக்கப்பட்ட செய்தியும் நமக்கு வந்தது. ஜல்லிக்கட்டுத் தடை நமது பண்பாட்டின் மீதான போர் என்றால் தங்கை நந்தினியின் கொடூரக் கொலை அடிப்படை மனிதத்திற்கே எதிரான போர்.

தங்கை நந்தினி வன்புணர்ச்சி செய்யப்பட்டுக் கொலைசெய்யப்பட்ட அந்தக் கோர நிகழ்வை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. அவளது வயதையும், அறியாமையையும் பயன்படுத்தி, அவளை நேசிப்பதாக ஏமாற்றியதோடு மட்டும் நில்லாமல் 16 வயதேயான அந்தப்பிள்ளையின் வயிற்றில் ஒரு குழந்தை இருக்கிறது என்றும் பாராமல் கூட்டுவன்புணர்ச்சி செய்து அவளது பிறப்புறுப்பின் வழியாகக் கருவை எடுத்து நெருப்பில் பொசுக்கி அவளோடு அவளது சிசுவையும் கொன்றுவிட்டு, உடலைக் கிணற்றுக்குள் வீசியக் கொடூரம் இதுவரை எங்குமே நடவாதது.

தான் நேசித்த ஒரு உயிரைத் தன்னால் உருவான உயிரை ஈவு இரக்கமே இல்லாமல் சிதைக்கும் மனநிலையை எங்கிருந்து பெற்றார்கள்? நம்பி வந்த பெண்ணை நண்பர்களோடு சூறையாடும் கொடூரத்தை யார் அவர்களுக்குச் சொல்லித்தந்தது? நினைக்க நினைக்க மனம் பதைபதைக்கிறது. இந்தச் சமூகம் இப்படியான மனிதர்களையா கொண்டிருக்கிறது என்பதை நினைக்கையில் எதிர்காலத்தைப் பற்றிய அச்ச உணர்வு மேலோங்குகிறது. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே ‘ஒழுக்கம் உயிரினும் ஓம்பப்படும்’ என்று உயிருக்கு மேலாக ஒழுக்கத்தைப் போதித்த சமூகத்தின் இன்றைய நிலை மிகுந்த வேதனையைத் தருகிறது.

இப்படியான கொடூரங்கள் நடக்கும் பொழுதெல்லாம் பாதிக்கப்படும் பெண்களின் வளர்ப்புமுறையைத் தவறெனச் சொல்லி, பெண்களை வெறும் சதைப்பிண்டமாகப் பார்த்து, போகப்பொருளாக அணுகும் ஆணாதிக்க உளவியலை வளர்த்தவர்களைப் பற்றி வாய்திறக்காமல் கடந்து போவதே இந்தத் தவறுகளுக்கான தொடக்கம். பெண்கள் உடுத்தும் உடைகள் பாலியல் வன்புணர்ச்சியைத் தூண்டுகிறது எனப் போதிக்கும் இச்சமூகம், 6 வயது சிறுமியும், 60 வயது மூதாட்டியும் தான் உடுத்தும் ஆடையால்தான் வன்புணர்ச்சிக்கு உள்ளாக்கப்படுகிறார்களா என்ற கேள்விக்குப் பதில் சொல்ல விளைவதில்லை. ஒருதலைக்காதல் என்ற பெயரில் கொலைசெய்யப்படும் பெண்களின் ஒழுக்கம் குறித்த ஆராய்ச்சிகளை ஆண்களிடம் உட்படுத்துவதற்குத் தயாரில்லை.

விளிம்புநிலையில் இருக்கும் அடித்தட்டு சமூகத்துப் பெண்கள் மீது ஆணாதிக்க வன்முறை அதிகளவில் நிகழ்த்தப்படுகிறது என்றாலும், இத்தொடர் தாக்குதல்கள் ஒட்டுமொத்தப் பெண் சமூகத்தின் மீதே ஏவப்படுபவையே! பெண்களைச் சரிநிகராக மதிக்கத் தெரியாத, தமது வாழ்க்கையினைத் தமது விருப்பத்தின்படி அமைத்துக்கொள்ளத் உரிமைபெற்ற சக பாலினம் பெண்கள் என்ற புரிதல் இல்லாத சமூகத்தின் விளைச்சல்தான் இவையாவும்! ஒவ்வொரு ஆண்டும் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் பல்லாயிரக்கணக்கில் நிகழ்வதாக தேசிய ஆவணக்காப்பகம் கூறுகிறது. அதில் பாலியல் வன்புணர்ச்சி செய்யும் குற்றவாளிகள் பெரும்பாலும் படித்தவர்களாக இருப்பதன்மூலம் இங்குக் கற்பிக்கப்படும் கல்விமுறையையே நாம் கேள்விக்கு உட்படுத்த வேண்டியிருக்கிறது. நேற்று சென்னையில் 7 வயது சிறுமி ஹாசினியைக் கொலைசெய்த வாலிபர் மென்பொருள் படித்த பொறியாளர். பொறியியல் படித்த இளைஞன், அள்ளி எடுத்துக் கொஞ்சுகிற வயதில் இருக்கிற ஒரு குழந்தையைப் பாலியல் வக்கிரத்தோடு பார்க்கிறான் என்றால், அவன் படித்த கல்விமுறை எதனைக் கற்றுத் தருகிறது? கல்வி முறையானது பண்பாட்டையோ, ஒழுக்கத்தையோ, அற உணர்வையோ எடுத்துரைக்காமல் வெறுமனே பொருளீட்டுவதையே நோக்கமாகக் கொண்டு போதிக்கப்படுவதால் வந்த விளைவுதான் இது. வணிகமயமாக்கப்பட்ட கல்வி முறை இப்படித்தான் நீளும். அதனால்தான், கல்வியை வணிகமயமாக்கக்கூடாது; கல்வி என்பது சந்தைப் பொருள் அல்ல! நம் சிந்தையை மேம்படுத்தும் பொருள் என வலியுறுத்துகிறோம்.

பெண்கள் மீதான இத்தொடர் வன்முறைக்கு அதை மேற்கொள்ளும் வன்முறையாளர் மட்டும் காரணமல்ல! பெண்களைப் பற்றிய தவறான உளவியலையும், ஆணாதிக்கச் சிந்தனையையும் அனுமதித்த இச்சமூகத்தின் அங்கத்தினராக இருக்கிற ஒவ்வொருவரும்தான் காரணம் என்பதை மனதில்கொண்டு பெண்கள் மீது தொடுக்கப்படும் வன்முறைக்கெதிராய் போராட முன்வர வேண்டும். பெண்களை நதியாகவும், தெய்வமாக உருவகப்படுத்தி வழிபடும் நாட்டில் பெண்களுக்கு எதிரான இத்தொடர் தாக்குதல்கள் ஒவ்வொரு மனிதருக்குமான தலைகுனிவு என்பதை மனதில்கொள்ள வேண்டும்.

பெண்கள் பற்றிய சமூகத்தின் பார்வையை மாற்ற கல்வி முறை, திரைப்படம் என எல்லாவற்றிலும் சீர்திருத்தங்கள் செய்யப்பட வேண்டும். பாலியல் குற்றத்துக்கான கடும் தண்டனைகள் என்றஅறிவிப்புகள் எல்லாம் வெறும் அறிவுப்புகளோடு நின்று விடுகிறது. பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுவோர்க்குப் பிணையில் வர முடியாத அளவுக்குக் கடுங்காவல் சிறைதண்டனை பெற்றுத்தரக் கடுமையான சட்டங்கள் உடனே இயற்றப்பட வேண்டும். இச்செயலைச் செய்தால் பெருந்தண்டனைக்கு உள்ளாவோம் என்ற அச்சம் உருவாகவேண்டும். இந்தியத் தலைநகர் டெல்லியில் வன்புணர்ச்சி செய்து கொலைசெய்யப்பட்ட நிர்பயாவின் மரணம் மட்டுமல்ல, அரியலூரில் வன்புணர்ச்சிக்குள்ளாக்கப்பட்ட நந்தினியின் மரணமும் தேசிய அவமானம்தான். வேலுநாச்சியாரும், குயிலியும் உலவிய மண்ணில் நந்தினியும், ஹாசினியும் கொலைசெய்யப்படுகிறார்கள் என்பது அளவிடமுடியாப் பெருந்துயரம். பெண் பிள்ளைகள் மீதானத் தாக்குதலைத் தடுத்து நிறுத்த அணியமாவோம்! பெண்மையைப் போற்றுவோம்!

பெண் விடுதலை இல்லையேல்! மண் விடுதலை இல்லை!

– இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது

முந்தைய செய்திடெல்லி நிர்பயாவின் மரணம் மட்டுமல்ல, அரியலூர் நந்தினியின் மரணமும் தேசிய அவமானம்தான்! – சீமான்
அடுத்த செய்திஎரித்து படுகொலை செய்யப்பட்ட 6 வயது சிறுமி ஹாசினியின் வீட்டிற்கு நேரில் சென்று சீமான் ஆறுதல்