பட்டயக்கணக்காளர் தேர்வில் முதலிடம்பெற்ற ஸ்ரீ ராமுக்கு மாணவர் பாசறை வாழ்த்து!

20

பட்டயக்கணக்காளர் (சி.ஏ) தேர்வில் முதலிடம் பெற்ற தமிழக மாணவர் ஸ்ரீ ராமுக்கு நாம் தமிழர் மாணவர் பாசறை வாழ்த்து!

இதுகுறித்து நாம் தமிழர் கட்சியின் மாணவர் பாசறை விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

பட்டயக் கணக்காளர் (சி.ஏ) தேர்வில் சேலத்தைச் சார்ந்த மாணவர் ஸ்ரீராம் இந்திய அளவில் முதலிடம் பெற்றிருப்பது மட்டற்ற மகிழ்ச்சியையும், பெருமிதத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது. அவருக்கு நாம் தமிழர் மாணவர் பாசறை பாராட்டுக்களையும், வாழ்த்துகளையும் தெரிவிக்கிறது.

2012-இல் நடந்த பட்டயக் கணக்காளர் படிப்புக்கான முதல்நிலை தேர்வில் 200க்கு 180 மதிப்பெண்கள் பெற்று சேலம் மாவட்ட அளவில் முதலிடம் பெற்ற ஸ்ரீ ராம், ‘உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல்’ எனும் வள்ளுவப்பெருந்தகையின் கூற்று போல தனது சீரிய முயற்சியாலும், கடின உழைப்பாலும் இத்தகைய உயரிய இலக்கைத் தொட்டிருக்கிறார். பட்டயக் கணக்காளர் தேர்வில் மாநிலத்தில் முதலிடம் பெறுவதே கடினம் எனும்போது ஸ்ரீராம் தேசிய அளவில் முதலிடம் பெற்று, நம்பிக்கையும், விடாமுயற்சியும் கொண்டவர்கள் தோற்பதில்லை என மெய்ப்பித்திருக்கிறார். கடந்தாண்டு நடைபெற்ற இதே தேர்வில் தமிழகத்தைச் சேர்ந்த மாணவர் ஜான் பிரிட்டோ முதலிடம் பிடித்து தமிழகத்திற்குப் பெருமை சேர்த்தார். இவ்வாண்டு ஸ்ரீராம் முதலிடம் பெற்றதன்மூலம் அந்த இடத்தைத் தக்கவைத்திருக்கிறார். அவரது இந்தச் சாதனைக்கு துணைபுரிந்த பெற்றோர்கள், ஆசிரியப் பெருமக்கள், நண்பர்கள் உள்ளிட்டவர்கள் அனைவருக்கும் பாராட்டுக்கள்!

அவர் இன்னும் மென்மேலும் வளர்ந்து தமிழகத்துக்குப் பெருமை சேர்க்கவும், சாதனைகள் பல படைத்து மாணவச் சமுதாயத்துக்கு வழிகாட்டியாக விளங்கவும் நாம் தமிழர் மாணவர் பாசறை தனது புரட்சிகரமான வாழ்த்துகளைத் தெரிவிக்கிறது.

இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.