தலைநகரை மாற்றுவோம்; தமிழகத்தையே மாற்றுவோம்! | நாம் தமிழர் ஆட்சியின் செயற்பாட்டு வரைவு | மக்களரசு

509

நிர்வாக வசதிக்காவும் வளர்ச்சியைப் பரவலாக்குவதற்காகவும் தலைநகரை மாற்றுவோம்; தமிழகத்தையே மாற்றுவோம்! – நாம் தமிழர் ஆட்சியின் செயற்பாட்டு வரைவு | மக்களரசு | நாம் தமிழர் கட்சி

சென்னை தலைநகராக இருப்பதால் கல்வி, மருத்துவம், வேலைவாய்ப்பு அனைத்தும் ஒரே இடத்தில் குவிந்து இருக்கிறது. இவை அனைத்தையும் தேடித்தான் மக்கள் கிராமங்களில் இருந்து நகரத்தை நோக்கி வருகிறார்கள். அதனால் சென்னை பிதுங்கி வழிகிறது. உயிரைச் சுமந்து செல்கிற அவசர ஊர்தி கூடச் சரியான நேரத்திற்குச் செல்லமுடியாத நிலை உள்ளது.

நத்தையும், ஆமையும் மெதுவாகச் செல்லும் அளவிற்குப் போக்குவரவு நெருக்கடி உள்ளது. இந்த நிலை நீடித்தால் சென்னையின் நிலை மேலும் சிக்கலாகும். அதனால் நிர்வாக வசதிக்காக, கல்வி, மருத்துவம், வேலைவாய்ப்பு, வளர்ச்சி உட்பட அனைத்தும் பரவலாகச் சென்றடைய, நாம் தமிழர் அரசு தலைநகரை மாற்றி அமைக்கிறது.

சென்னை: திரைக்கலை, துறைமுகம், கணினி, தொழில் நுட்பத்திற்கான தலைநகராக விளங்கும்.

திருச்சி: செயலாண்மை வசதிக்காகத் தமிழ்நாட்டின் தலைநகராக மாற்றப்படும்.

  • அனைத்துக் கட்சிகளுமே திருச்சியில் மாநாடு நடத்துகிறார்கள். ஏனென்றால் மையப் பகுதியாக இருப்பதால்தான். இப்போது சென்னை சென்றுவர 2 நாள் ஆகிறது. திருச்சி என்றால் அது தமிழகத்தின் மைய நகரம். மாநிலத்தின் பல்வேறு இடங்களில் இருந்து ஒரே நாளில் சென்று திரும்பலாம்.
  • ஒரு நாட்டின் மையப் பகுதியில் தான் தலைநகரம் இருக்க வேண்டும். உலக முழுவதும் அதற்கான உதாரணங்கள் இருக்கின்றன. அமெரிக்கா போன்ற நாடுகளில், எந்தப் பெருநகரத்தையும் தலைநகராய் கொண்டிருக்கவில்லை. சீனா போன்ற நாடுகள் தன் நிர்வாக வசதிகளுக்காகப் பல்வேறு துணைத் தலைநகரை வைத்துள்ளது.

கோவை: தொழில், வர்த்தகத்திற்கான தலைநகராக விளங்கும்.

மதுரை: மொழி, கலை, பண்பாட்டிற்கான தலைநகராக விளங்கும்.

கன்னியாகுமரி: தமிழர் மெய்யியலுக்கான தலைநகராக விளங்கும்.