எங்கள் குலமாதர் | நாம் தமிழர் ஆட்சியின் செயற்பாட்டு வரைவு | மக்களரசு

486

எங்கள் குலமாதர் | நாம் தமிழர் ஆட்சியின் செயற்பாட்டு வரைவு | மக்களரசு | நாம் தமிழர் கட்சி

“பெண் விடுதலை இல்லையேல் மண் விடுதலை இல்லை!”
– தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன்

தமிழ்ச் சமூக அமைப்பு பெண்களை வீரம் செறிந்தவர்களாகவும், அறிவிற் சிறந்தவர்களாகவும் பதிவு செய்கிறது. இடைபுகுந்த பண்பாட்டுக் கலப்பு, பல்வேறு இனங்களின் தாக்கம் ஆகியவை பெண்ணை ஆணுக்குரிய போகப் பொருளாகக் குறுக்கியதை நாம் தமிழர் அரசு உணர்ந்து, அவர்களுக்கான சமத்துவ உரிமையை அளிக்கும்.

பிறப்பில்:

 • பெண் சிசுக்கொலை அறவே ஒழிக்கப்படும். பாலின அறிவிப்புத் தடைச் சட்டம் தீவிரமாக நடைமுறைப்படுத்தப்படும். பெண் குழந்தைகளைப் பெருஞ்சுமையாக, அவமானமாக எண்ணும் காரணிகளான வரதட்சணை, பெரும் செலவிலான திருமணங்கள், சடங்குகள் ஆகியவற்றிற்கு எதிராகத் தீவிர விழிப்புணர்வுப் பரப்புரைகள் மேற்கொள்ளப்படும்.

கல்வியில்:

 • தொடக்கக் கல்வி முதல் தொழிற்கல்வி, ஆராய்ச்சிக் கல்வி வரை பெண்கள் விரும்பும் துறையில் படிக்க ஊக்கப்படுத்தப்படுவர். அரசின் அனைத்து உதவிகளும் இவர்களுக்கு அளிக்கப்படும். கல்வி நிலையங்களில் பாலியல் விழிப்புணர்வு, உடல்நல ஆலோசனைகள், தற்சார்பு வாழ்க்கை முறை, தற்காப்புக் கலைகள், வாழ்க்கைக் கல்வி ஆகியவை சிறந்த வல்லுநர்களைக் கொண்டு சிறப்புக் கல்வியாகக் கற்றுத்தரப்படும்.

“பெண்களுக்கு அவர்களின் குழந்தைகள் மற்றும் குடும்பத்தைக் கவனிக்க, அவர்களுக்கான வேலை நேரம் ஆறு மணியாகக் குறைக்கப்படும். வீட்டிலிருந்தபடியே கணினி வழிப் பணி புரியவும் வழிவகைச் செய்யப்படும்.”

“பெண்களைப் போற்றுவோம்
பெருமைக்குரிய நாடாக மாற்றுவோம்!”
– செந்தமிழன் சீமான்

வேலை வாய்ப்பில்:

 • தமிழக அரசின் அனைத்துத் துறைகளிலும் பெண்களுக்குச் சரி பாதி (ஐம்பது சதவீத) வேலைவாய்ப்பு அளிக்கப்படும்
 • விளையாட்டில் பெண்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
 • காவற்படை, கடற்படை, சிறப்புக் காவல், விமானப் போக்குவரத்து, மென்பொருள், வன்பொருள் தயாரிப்பு, நீதித்துறை என அனைத்திலும் வாய்ப்புக் கொடுத்து, பெண்களின் பேராளுமை உறுதி செய்யப்படும்.
 • தமிழினத்தின் வீர மங்கையர்கள் பெயரில் வேலைவாய்ப்புத் திட்டங்கள் உருவாக்கப்படும்.
 • பெண்களுக்கு அவர்களின் குழந்தைகள் மற்றும் குடும்பத்தைக் கவனிக்க, அவர்களுக்கான வேலை நேரம் ஆறு மணியாகக் குறைக்கப்படும். வீட்டிலிருந்தபடியே கணினி வழிப் பணி புரியவும் வழிவகைச் செய்யப்படும்.

பாதுகாப்பு உறுதி:

 • பணியிடத்தில் எந்த அச்சமுமின்றி வேலை செய்ய ஏதுவாக, பாலியல் வன்கொடுமைத் தடைச்சட்டங்கள் கடுமையாக்கப்படும். புகார் அளிக்கும் பெண்களைப் பற்றிய தரவுகள் கமுக்கமாக வைக்கப்படும். நடவடிக்கைகள் விரைவாக எடுப்பதன் மூலம் பணியிடத்தில் அவர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும்.
 • ஊடகங்களில் பெண்களின் உரிமைகளைக் கொச்சைப்படுத்துவது தகுந்த சட்டங்களின் வழி அறவே தடுக்கப்படும். திரைப்படங்களில், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பெண்களைக் கொச்சைப்படுத்தும் போக்கைப் பெண்ணிய இழிவாக நாம் தமிழர் அரசு கருகிறது. நல்ல கலைஞராக, பார்வையாளராக நேர்மையான விமர்சனங்களை வைக்கலாமே ஒழிய, தனிப்பட்ட வாழ்வைக் கொச்சைப்படுத்துவதை ஏற்க முடியாது. புதிய உத்தரவுகளின் மூலம் இவற்றைத் தடுப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

கடன் தள்ளுபடி – மகளிர் சுய உதவிக்குழு:

 • மகளிர் சுய உதவிக்குழுக்கள் பெற்றிருக்கின்ற அனைத்துக் கடனும் தள்ளுபடி செய்யப்படும்.

திருநங்கைகள்:

 • பிறப்பால் ஆணாகவும், உணர்வால் பெண்களாகவும் உள்ள நம் உடன் பிறந்தவர்களை நாம் தமிழர் அரசு தன்மானத்துடனும், இயல்பு மனிதர்களுக்கு நிகராகவும் வாழ, அவர்களுக்கு எல்லாத் துறைகளிலும் பேராளுமை பெறப் பயிற்சி மற்றும் அங்கீகாரத்தை வழங்கும். அவர்களுக்கான தங்கும் விடுதிகள், கல்வி மற்றும் தொழிற் கல்வி, வேலை வாய்ப்புப் பயிற்சி மையங்கள் அமைத்துக் கொடுக்கப்படும். அவர்கள் சுயதொழில் தொடங்கத் தமிழ்த் தேசிய வைப்பகத்தில் இருந்து வட்டியில்லாக் கடன் வழங்கப்படும். இவர்களுக்கென்று தனியாக நலவாரியம் அமைக்கப்பட்டு எல்லா உதவிகளும் வழங்கப்படும்.

 

“மங்கையராய்ப் பிறப்பதற்கே – நல்ல
மாதவம் செய்திடல் வேண்டுமம்மா!”
– கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை