மாணவர்களின் மரணத்திற்கு நீதிவிசாரணை கோரி ‘நாம் தமிழர் கட்சி’ இளைஞர் பாசறை மற்றும் மாணவர் பாசறை நடத்திய கண்டன ஆர்ப்பாட்டம்

35

ஐதராபாத் மாணவர் ரோகித் வெமுலாவின் தற்கொலைக்குக் காரணமானவர்களைக் தண்டிக்கக் கோரியும்,விழுப்புரம் மாணவிகளின் மர்ம மரணத்திற்கு நீதிவிசாரணை கோரியும் நாம் தமிழர் கட்சியின் இளைஞர் பாசறை மற்றும் மாணவர் பாசறை சார்பாக நேற்று (30-01-16) சென்னை, வள்ளுவர் கோட்டத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. இதில் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் கண்டன உரையாற்றினார்.

இதில் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் செய்தியாளர்களிடம் பேசியதாவது,

ஒரு நாட்டின் எதிர்காலம் வகுப்பறையில்தான் தீர்மானிக்கப்படுகிறது என்று சொல்கிறார்கள். ஆனால், வகுப்பறையில் தீர்மானிக்கப்படுகிற அளவுக்கா கல்வியின் தரம் இங்கு இருக்கிறது? பொறியியல் கல்லூரி, மருத்துவக்கல்லூரி என எங்கு போனாலும் 10 இலட்சம், 20 இலட்சம் என பேரம் பேசுகிறார்கள். வேலைக்குப் போகும்போது அதனை எடுத்துக் கொள்ளலாம் என மக்கள் எண்ணுகிற அளவுக்கு முதலீடாக கல்வி மாறிப் போயிருக்கிறது. எஸ்.வி.எஸ். கல்லூரியில் மூன்று மாணவிகள் மர்ம முறையில் இறந்திருக்கிறார்கள். கல்வி வணிகமாக்கப்பட்டதுதான் இந்த மாணவிகளின் மரணத்திற்கு காரணம். ‘அது கொலை’ என அந்தக் கல்லூரியின் தாளாளர் வாசுகியே சொல்கிறார். ஆனால், அதற்கான முறையான விசாரணை நடந்திருக்கிறதா? எதுவும் இல்லை. காவல்துறையிலே இருந்து இறந்துபோன விஷ்ணுப்ரியாவின் மரணத்திற்கே முறையான விசாரணை இல்லையே.
‘எஸ்.வி.எஸ். கல்லூரிக்கும், எங்களுக்கும் எந்தத் தொடர்புமில்லை’ என்கிறார் எம்.ஜி.ஆர். மருத்துவக்கல்லூரியின் பொறுப்பாளர். தொடர்பு இல்லாமலா இவ்வளவு ஆண்டுகளாக அந்தக்கல்லூரியின் தேர்வுத்தாள்களை இவர்கள் திருத்தினார்கள்? எனவே, அந்தக் கல்லூரியை அரசுடைமையாக்கி மாணவிகள் கல்வியைத் தொடர அரசு வழிவகுக்க வேண்டும். மாணவிகள் மரணம் குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும்.

ஐதராபாத் மாணவர் ரோகித் வெகுலாவின் மரணம் குறித்து பாரதப்பிரதமர் ஐயா மோடி, ‘பாரதத்தாய் தனது மகனை இழந்துவிட்டார்’ என்கிறார். இதனை ரோகித் வெமுலா இறந்த அன்றைக்கு சொல்லிருக்கலாமே! யாகூப் மேனன் விடுதலைக்குப் போராடியதற்காக ரோகித்தை தற்கொலை செய்துகொள்கிற அளவுக்குத் தள்ளியிருக்கிறார்கள். தனக்கு சரியென பட்ட கருத்தை சொல்வதற்கு உரிமையில்லை என்றால், இங்கு சனநாயகம் எங்கு இருக்கிறது? ரோகித் சமூகத்துக்காகப் போராடுகிற அளவுக்கு ஒரு அறிவார்ந்த பிள்ளை. அவன் தற்கொலை செய்துகொள்கிறான் என்றால் எந்தளவுக்கு அவனுக்கு அழுத்தத்தை கொடுத்திருப்பார்கள்? அவன் தற்கொலைக்குக் காரணமான மத்திய அமைச்சர் பண்டாரு தத்ரேயா, மத்திய அமைச்சர் ஸ்மிருதி ராணி ஆகியோர் மீது இன்றைக்குவரை எந்த நடவடிக்கையும் இல்லை. தற்கொலைக்கும் முறையான நீதிவிசாரணையும் நடைபெற வில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.