கிராமப் பூசாரி மாநாட்டுத் தீர்மானங்கள்

84

வீரத்தமிழர் முன்னணி ஆகஸ்ட் 30 அன்று திருப்பூரில் நடத்திய கிராமப் பூசாரிகள் மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட  தீர்மானங்கள்:

1. தமிழர் மரபு வழி வழிபாட்டுமுறை என்பது, நன்றி நவிழ்தல் தொடங்கி, நடுகல் முறை வழியாக முன்னோர்களையும் இயற்கையையும் மட்டுமே வணங்கி வந்துள்ளது. பழந்தமிழ் நூல்களிலோ, தமிழர் வரலாற்று சுவடுகளிலோ “இந்து” என்ற சொற்பதம் இல்லை. எனவே இந்து என்ற சொல்லும், இந்து என்ற மதமும் தமிழருடையது அல்ல. தமிழக கோவில்களை நிர்வகிக்கும் துறையின் பெயரான “இந்துசமய அறநிலையத்துறை” என்பதற்கு பதிலாக “தமிழர் மத அறநிலையத்துறை” என்ற பெயர்மாற்றத்தை வீரத்தமிழர் முன்னணி கோருகிறது.

2. அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற தமிழக அரசின் ஆணையை உடனே நடைமுறைப்படுத்த அரசு சிறப்பு சட்டம் இயற்றவேண்டும். அர்ச்சகர் தொழிலை தமிழர் மத அறநிலையத்துறையின் கீழ் இயங்கும் அரசுவேலையாகக் கருதி, மற்றைய அரசு வேலைவாய்ப்புகளில் எத்தனை விழுக்காடு சாதிவாரி இடஒதுக்கீடு முறை பின்பற்றப்படுகிறதோ அதே விழுக்காடு அளவு அர்ச்சகர் வேளையிலும் அரசு பின்பற்றவேண்டும் என்று வீரத்தமிழர் முன்னணி கோருகிறது.

3. உலகிலேயே மூத்த மொழியான எமது தமிழ்மொழிக்குத் தமிழக கோவில்களில் முழங்க தடை இன்றளவும் இருந்துவருகிறது. தமிழர் நாட்டின் கோவில்களில் “தமிழிலும் அர்ச்சனைச் செய்யலாம்” என்ற சொல்லை நீக்கி “இங்கு தமிழில் மட்டுமே அர்ச்சனைச் செய்யப்படும்” என்ற நிலை ஏற்பட அனைத்து கோவில்களிலும் தமிழில் மட்டுமே அர்ச்சனைச் செய்யவேண்டும் என்பதை கட்டாயமாக்கி தமிழர் இறையாண்மையுள்ள தமிழக அரசு அரசாணையாக நிறைவேற்றி செயல்படுத்திடவேண்டும் என வீரத்தமிழர் முன்னணி வலியுறுத்துகிறது.

4. தமிழ்நாட்டின் மண்வரலாறு, பழந்தமிழ் வீரம் இவைகளோடு கூடிய கிராம கோவில்கள் அனைத்தும் சிறுக சிறுக தமிழ் பூசாரிகளிடம் இருந்து பிராமணியர்களின் கைகளுக்கு மாற்றப்பட்டுவருகிறது. இந்நிலையை தடுக்கவேண்டும். கிராமங்களில் இருக்கும் அனைத்து குல தெய்வ கோவில்களை நிருவாகிக்கும் உரிமையினை அந்த கோவில்களை நிருவகித்துவந்த கிராம பூசாரிகளுக்கே உரியது என்றும், அந்த கோவில்களில் பணிபுரியும் கிராமபூசாரிகளுக்கு மாத ஊதியத்தைத் தொடர்புடைய துறை வழங்கவேண்டும் என்றும் வீரத்தமிழர் முன்னணி வலியுறுத்துகிறது. இதுவரைக் கோவில்களில் பணிசெய்த வயது முதிர்ந்த கிராமக் கோவில் பூசாரிகளுக்கு ஓய்வூதியத்தை அரசு வழங்கவேண்டும் என்று வீரத்தமிழர் முன்னணி தீர்மானம் நிறைவேற்றுகிறது.

5. கோவில் சீரமைப்பு என்ற பெயரில் தமிழரின் கட்டிட கலைகள், கல்வெட்டு ஆவணங்கள், தமிழர் பழமைக் கூறும் வரலாற்று ஆவணங்கள் அனைத்தும் சிறுக, சிறுக ஆளும் ஆரிய அதிகார வர்க்கத்தினால் அழிக்கப்பட்டு வருகிறது. எனவே கோவில் மற்றும் கல்வெட்டு சீரமைப்பிற்கு முன்னதாக அனைத்து பழைய புராதான சின்னங்களையும் ஆவணப்படுத்த வேண்டும் என்று வீரத்தமிழர் முன்னணி தீர்மானம் நிறைவேற்றுகிறது.

6. ஆறுபடை வீடுகளில் ஒன்றான பழனி முருகன் கோவிலில் போகர் வழிவந்த புலிப்பாணி சாமிகள் தொடர்ந்த வழக்கில் சுமார் 30 வருட போராட்டத்திற்கு பிறகு திண்டுக்கல் மாவட்ட நீதிமன்றத்தால், பழனி உள்விவகார துறையை நிருவாகிக்கும் பொறுப்பினைப் புலிப்பாணி சாமிகளுக்கே வழங்கி தீர்ப்பு வாங்கப்பட்டுள்ளது. இதை உடனே அரசு செயல்படுத்த வீரத்தமிழர் முன்னணி கோருகிறது.

7. தமிழர் நாட்டின் பாரம்பரியம் மிக்க தமிழ்த்தேசிய இன வீரவிளையாட்டான ஏறுதழுவுதல் எனும் சல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்டு இருக்கும் தடையை உடனடியாக நீக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இதில் நடுவண் அரசை காரணம் காட்டி தமிழக அரசு வழக்கமாக தப்பித்து கொள்வதில் இருந்து விலகி இந்த தடையை நீக்க முழுமனதோடு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று வீரத்தமிழர் முன்னணி கேட்டுக்கொள்கிறது. தவறினால் வீரத்தமிழர் முன்னணி இதுதொடர்பாக நீதிமன்றதித்தினை அணுகும் என்றும், வரும் ஆண்டில் இருந்து சல்லிக்கட்டை வீரத்தமிழர் முன்னணியே முன்னின்று நடத்தும் என்றும் வீரத்தமிழர் முன்னணி பெரு அறிவிப்புச் செய்கிறது.

8. மறம் வீழ்த்தி அறம் காத்த மானத்தமிழ் மறத்தி எங்கள் பெரும்பாட்டி கண்ணகியின் கோவில் இன்று கவனிப்பாரற்று சிதிலமடைந்து கிடக்கிறது. அந்த கோவிலுக்கு தமிழகத்தின் வனப்பகுதியின் வழியாகச் செல்ல பாதை இருந்தும் தமிழக அரசு அப்பாதையை உபயோகிக்க அனுமதிப்பதில்லை. கேரளா அரசின் எல்லைப்பகுதி வழியாக செல்லும் பாதையில் கேரளா வனசரக காவல்துறை மிகுந்த கட்டுப்பாடுகளை விதிக்கின்றது. ஆளும் அரசின் மெத்தன போக்கையும், அண்டையரசின் சர்வாதிகாரத்தையும் வீரத்தமிழர் முன்னணி வன்மையாக கண்டிக்கிறது. தமிழக வனப்பகுதிவழியாக உள்ள பாதையை தமிழக அரசு தயார்செய்து பயன்பாட்டிற்குத் தரவேண்டும் என்று வீரத்தமிழர் முன்னணி கேட்டுக்கொள்கிறது. கண்ணகியின் நினைவை போற்றும் வகையில் வருகின்ற சித்திரை முழுநிலவு நாள் அன்று கண்ணகி கோவில் நோக்கிய பெரும் பயணத்தை வீரத்தமிழர் முன்னணி மேற்கொள்ளும் என்று இந்த மாநாட்டின் வாயிலாக உறுதி ஏற்கிறது.

முந்தைய செய்திவீரத்தமிழர் முன்னணியின் கிராமப் பூசாரிகள் மாநாடு
அடுத்த செய்திகுமிடிப்பூண்டி பொதுக்கூட்டம் – சீமான் உரை- 12-09-2015