மியான்மர் முஸ்லிம்கள் மீதான தாக்குதலைக் கண்டித்து வரும் 5-ம் தேதி சென்னையில் ஆர்ப்பாட்டம்-நாம் தமிழர் கட்சி அறிவிப்பு

30

மியான்மரில் முஸ்லிம்கள் தாக்கபடுவதைக் கண்டித்தும் ஐ.ஐ.டி.யில் அம்பேத்கர் – பெரியார் படிப்பு வட்டத்துக்கு தடை விதிக்கப்பட்டதைக் கண்டித்தும் வரும் 5-ம் தேதி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ஆர்ப்பாட்டம் நடத்த இருப்பதாக நாம் தமிழர் கட்சி அறிக்கை வெளியிட்டு உள்ளது. இதில், செந்தமிழன் சீமான் கூறியிருப்பதாவது:

மியான்மரில் உள்ள ரோஹிங்கியா முஸ்லிம் மக்கள் புத்த மதத்தினராலும் அரசாங்கத்தினராலும் கொடூரமாகக் கொல்லப்படுவதையும் மனசாட்சியற்ற தாக்குதலுக்கு ஆளாக்கப்படுவதையும் நாம் தமிழர் கட்சி கடுமையாகக் கண்டிக்கிறது. இந்த உலகம் இசுலாமியர்களுக்கானது அல்ல என்று சொல்லி, பௌத்தம் தன் கோர முகத்தைக் காட்டி நிற்கிறது. யுத்த மதமாகவும் ரத்த மதமாகவும் புத்த மதம் மாறி நிற்கிறது. இலட்சக்கணக்கான தமிழ் மக்களைக் கொன்று ஈழத்தை முழுதாக அழித்து ஒழித்த கோரப்பசி அடங்காமல் மியான்மரிலும் அத்தகைய வெறியாட்டத்தைத் தொடர்ந்துகொண்டு இருக்கிறது புத்த வெறி. உலகம் முழுக்க உள்ள வல்லாதிக்க நாடுகளும் ஜனநாயக சக்திகளும் வாய்மூடி இதனை வேடிக்கைப் பார்த்துக்கொண்டு இருக்கின்றன. ஈழத்தை அழித்தபோது எப்படி உலகம் கண்கட்டி கண்டும் காணாமலும் போனதோ, அத்தகைய போக்கையே மியான்மர் விவகாரத்திலும் காட்டி வருகிறது.

நூற்றாண்டு காலமாகத் தொடரும் இன வெறுப்பால் மியான்மரில் வசிக்கும் ரோகிங்கியா முஸ்லிம்கள் ஆற்றொணா துயரத்துக்கு ஆளாக்கப்படுகிறார்கள். ‘ஆசையே துன்பத்துக்குக் காரணம்’, ‘உயிர்களைக் கொல்வது பாவம்’ என்றெல்லாம் சொன்ன புத்த பெருமானின் வார்த்தைகளைப் புறந்தள்ளிவிட்டு பச்சிளம் குழந்தைகளை வெட்டி வீசியும், எரிகிற தீயில் தூக்கிப் போட்டும் புத்த பிக்குகள் கொடுவாள் ஏந்தி கோர முகத்தைக் காட்டி வருகிறார்கள். ‘இது மியான்மரின் உள்நாட்டு விவாகாரம்’ எனச் சொல்லி சீனா ஒதுங்கிக் கொள்ள, வழக்கம்போல் எவ்விதக் கருத்தும் சொல்லாமல் இந்தியா மௌனம் காக்கிறது. இதனால், வங்காள தேசம், இந்தோனேசியா, மலேசியா, தாய்லாந்து உள்ளிட்ட அக்கம்பக்க நாடுகளும் அகதிகளாக வெளியேறும் மியான்மர் முஸ்லிம்களுக்கு என்ன செய்வதெனத் தெரியாமல் கைகட்டி நிற்கின்றன. அகதியாக ஏற்கக்கூட எந்த நாடும் முன்வராததால் நடுக்கடலில் பல நாட்களாகத் தவிக்கும் ஆயிரக்கணக்கான முஸ்லிம் மக்களின் கண்ணீர், உலத்தின் பார்வையால் உணரப்படாமல் இருப்பது பேரவலம் அல்லவா? ‘உலகில் மிக மோசமாக இன்னலுக்கு ஆளாக்கப்படும் அகதிகள் மியான்மரின் ரோஹிங்கியா முஸ்லிம்கள்தான்’ என ஐ.நா.சபையே அறிவித்திருக்கிறது என்றால், அந்த மக்களின் துயர் எத்தகைய கொடுமையானதாக இருக்கும்?

மியான்மர் முஸ்லிம்கள் மீதான தாக்குதலைத் தடுத்து, அந்த மக்களுக்கான விடிவை உலக நாடுகளும் ஜனநாயக அமைப்புகளும் உடனடியாக ஏற்படுத்த வேண்டும்.
இனவெறிக் கொடூரங்களுக்கு முடிவுகட்ட உலகத்தின் மனசாட்சி உடனடியாக எழ வேண்டிய நேரம் இது.

அதேபோல் சென்னையில் உள்ள‌ இந்திய தொழில்நுட்பக் கழகத்தில் செயல்படும் அம்பேத்கர் – பெரியார் படிப்பு வட்டத்துக்கு மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டுத் துறை தடை விதித்திருப்பது கருத்துச் சுதந்திரத்தின் கழுத்தை நெரிக்கிற செயல். மாணவர்களின் உரிமையையும் சுதந்திரத்தையும் நசுக்குகிற நயவஞ்சகம். கல்வி பயில்கிற இடம்தான் ஒருவனை எல்லா விதத்திலும் பண்பட்டவனாகவும் தெளிவுகொண்டவனாகவும் மாற்றுகிற இடம். வெறும் படிப்பை மட்டும் அறிந்துகொள்ளாமல் சமூகம் குறித்த அத்தனை விதமான தெளிவுகளையும் மாணவர்கள் பெற இத்தகைய படிப்பு வட்டங்கள் அவசியத் தேவை. தலைநகர் டெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு மத்திய பல்கலைக் கழகத்தில் அம்பேத்கர் – பெரியார் படிப்பு வட்டத்தைப் போன்ற நிறைய வட்டங்கள் செயல்படுகின்றன. அப்படியிருக்க சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகத்தில் அம்பேத்கர் – பெரியார் படிப்பு வட்டத்தால் தேவையற்ற பதற்றம் உருவாக வாய்ப்பிருப்பதாகச் சொல்லி கடிதம் வந்ததாகவும், அதையடுத்து அந்த படிப்பு வட்டத்துக்கு தடை பிறப்பித்திருப்பதாகவும் மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அறிவித்திருப்பது அப்பட்டமான ஜனநாயக படுகொலை. மீனவர்கள் மீதான‌ தாக்குதல் தொடங்கி நீராதார சிக்கல்கள் வரை எத்தனையோ பிரச்னைகளுக்கு தமிழக முதலமைச்சர் அடிக்கடி பிரதமருக்கு கடிதம் எழுதுகிறார். அதற்கெல்லாம் எந்த பதிலும் சொல்லாத மத்திய அரசு, பெயரைக்கூட குறிப்பிடாத ஒரு மொட்டைக் கடிதத்தை கையில் வைத்துக் கொண்டு அம்பேத்கர் – பெரியார் படிப்பு வட்டத்துக்கு தடை போடத் துடிப்பது எந்த விதத்தில் நியாயம்?. இதற்கு ஒத்து ஊதும் விதமாக‌ ‘படிக்கிற மாணவர்களுக்கு அரசியல் எதற்கு’ எனக் கேட்கிறார்கள் சிலர். அப்படியென்றால் மாணவர்களின் வாக்குகள் இவர்களுக்குத் தேவை இல்லையா? மாணவர்கள் பிரச்னையை வைத்து அரசியல் செய்வதாகவும் சிலர் குற்றம்சாட்டுகிறார்கள். மக்கள் எல்லோருக்குமான பிரச்னைக்கும் முன்னிற்பதுதான் நியாயமான அரசியலாக இருக்க முடியும். அப்படியிருக்க அரசியல் கட்சிகள் மாணவர்கள் பிரச்னை என்பதற்காக ஒதுங்கி நின்று வேடிக்கை பார்க்க முடியுமா? நாட்டின் எதிர்காலத் தலைவர்களாக இன்றைய மாணவர்களே உருவெடுக்கப் போவதாகச் சொல்பவர்கள், அதற்கான களமாக விளங்கும் இத்தகைய படிப்பு வட்டங்களுக்குத் தடை விதிப்பது எந்த விதத்தில் சரி. ஆக்கபூர்வ கருத்து விவாதங்களையும் நிலம் கையகச் சட்டம் தொடங்கி மாட்டுக்கறி விவகாரம் வரையிலான சமூகப் பிரச்னைகள் குறித்த அலசல்களையும் அம்பேத்கர் – பெரியார் படிப்பு வட்டத்தினர் நடத்தி வருவது பொறுக்காமலே, மொட்டைக் கடிதம் என்கிற பெயரில் மாணவர் ஒருங்கிணைவுக்கு தடை போடத் துடிக்கிறது மோடி அரசு. இதனைக் கண்டித்தும் அம்பேத்கர் – பெரியார் படிப்பு வட்டம் எவ்விதத் தடையும் இல்லாமல் பழையபடி இயங்க வழிசெய்ய வலியுறுத்தியும் நாம் தமிழர் கட்சி ஆர்ப்பாட்டம் நடத்த இருக்கிறது.

மியான்மர் முஸ்லிம்களைக் காப்பாற்றவும் சென்னையில் உள்ள இந்திய தொழில் நுட்பக் கழகத்தில் அம்பேத்கர் – பெரியார் படிப்பு வட்டத்தின் மீதான தடையை உடனே ரத்து செய்யவும் வலியுறுத்தி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் வரும் 5-ம் தேதி மாலை 3 மணிக்கு நாம் தமிழர் கட்சி மாபெரும் ஆர்ப்பாட்டத்தை நடத்த இருக்கிறது. இதில், தமிழ்த் தேசியப் பேரியகத்தைச் சேர்ந்த கி.வெங்கட்ராமன், தமிழக மக்கள் ஜனநாயகக் கட்சியின் கே.எம்.செரீப், மனித உரிமைச் செயற்பாட்டாளரான டி.எஸ்.எஸ். மணி, ஆதித் தமிழர் விடுதலை இயக்கத்தின் அ.வினோத், மள்ளர் மீட்புக் கழகத்தின் செந்தில் மள்ளர், இன அழிப்புக்கு எதிரான இசுலாமிய இளைஞர் இயக்கத்தின் உமர் கையான் ஆகியோர் கலந்துகொள்ள இருக்கிறார்கள். இனவெறியைக் கண்டிக்கவும், மாணவர் கருத்துரிமையை மீட்கவும் நடக்கிற இந்த ஆர்ப்பாட்டத்தில் ஒவ்வொரு தமிழ்ப் பிள்ளைகளும் தவறாது கலந்துகொண்டு தங்கள் உணர்வினை வெளிப்படுத்த வேண்டும்.

இவ்வாறு அந்த அறிக்கையில் செந்தமிழன் சீமான் கூறியுள்ளார்.