நாம் தமிழர் கட்சியின் மாநிலப் பொதுக்குழுக்கூட்டம் கூடுவாஞ்சேரியில் நடந்தது.

42

நாம் தமிழர் கட்சியின் மாநிலப் பொதுக்குழு கூட்டம் 14-06-15 அன்று கூடுவாஞ்சேரி, என்.பி.ஆர்.திருமண அரங்கத்தில் நடைபெற்றது.

இப்பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் பின்வருமாறு:

தீர்மானம்-1
அடிமைத் தமிழ்த்தேசிய இனத்தின் மொழி மீட்சிக்காகவும், இன உரிமை மீட்சிக்காகவும் மாபெரும் அரசியல் புரட்சியினை முன்னெடுத்து தமிழின வரலாற்றில் முதல் முறையாக இன எழுச்சி அரசியல் மாநாட்டினை இரண்டு இலட்சத்திற்கும் மேலான நம் இன உறவுகளைக் கூட்டி வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளோம். மாநாட்டின் மகத்தான வெற்றிக்காக அரும்பாடுபட்டு உழைத்த அனைத்து உறவுகளுக்கும், வியர்வைத்துளியினை உதிரமாக சிந்தி தாங்கள் சிறுகச்சிறுகச் சேர்த்த பொருளை நன்கொடையாக கொடுத்து உதவிய அனைத்து உறவுகளுக்கும் நாம் தமிழர் கட்சி புரட்சிகரமான வாழ்த்துகளையும், நன்றிகளையும் தெரிவித்துக்கொள்கிறது.
தீர்மானம்-2
தமிழ்நாட்டு சிறைக்கூடங்களில் ஆயுள் தண்டனை பெற்று பத்து ஆண்டுகளுக்கு மேலாக வாடுகின்ற சிறைவாசிகளை நன்னடத்தை, உடல்நிலை, வயது போன்ற காரணங்களை கொண்டு சிறைவிதிகளின்படி உடனடியாக விடுதலை செய்ய வலியுறுத்தியும், அகதிகளாக வாழ்வுரிமைத்தேடி தமிழகம் வந்த ஈழ உறவுகளை எவ்வித விசாரணையுமின்றி சித்திரவதை செய்து தனிமைச்சிறையில் அடைத்து, சிறப்பு முகாம் என்ற பெயரில் நடக்கிற வதை முகாம்களை உடனடியாக மூட வலியுறுத்தியும் வருகிற சூலை 10-ஆம் தேதி சனிக்கிழமை காலை 10 மணிக்கு தமிழகத்தின் முக்கியச்சிறைச்சாலைகளாக உள்ள மதுரை, கோவை, திருச்சி, வேலூர் மற்றும் புழல் ஆகிய நடுவண் சிறைச்சாலைகளை நாம் தமிழர் கட்சி முற்றுகையிடுகிறது. அந்தப் போராட்டத்தில் தாய்த்தமிழ் உறவுகள் பெருமளவில் பங்கெடுக்க வேண்டும் என நாம் தமிழர் கட்சி கேட்டுக்கொள்கிறது.
தீர்மானம்-3
இந்தியத்தேர்தல் நடைமுறை என்பது மிகவும் சனநாயகமற்ற முறையில் உள்ளது. இந்த நடைமுறை ஆண்டாண்டு காலமாக அரசியல் கட்சி நடத்தி வருகிற பெரிய கட்சிகளுக்கு சார்பாக ஒருதலைபட்சமாக உள்ளது. 60 ஆண்டுகாலமாக ஒரே சின்னத்தைப் பயன்படுத்தி தேசிய மற்றும் பெரும்பாலான பிற கட்சிகள் தேர்தலை எதிர்கொள்வதும், புதிதாக சனநாயக உரிமையின்படி தேர்தலில் போட்டியிடுபவர்களுக்கு புதிதாகச்சின்னங்களைக் கொடுத்து தேர்தலில் நிற்கச்சொல்வதும், மிகப்பெரிய சனநாயகப்படுகொலையாகும். சின்னம் ஒதுக்குதல் என்ற நடைமுறையை அறவே நீக்கி மேலைநாடுகளில் உள்ளதுபோல், எண்களையோ, வேட்பாளரின் பெயர் மற்றும் புகைப்படத்தையோ தேர்தல் நடைபெறும் சமயத்தில் மட்டும் கொண்டு வர வேண்டுமென இப்பொதுக்குழு வேண்டிக்கொள்கிறது மற்றும் தேர்தல் சின்னங்களை உடனடியாக நீக்கி உத்தரவிட வேண்டும் என இந்தியத்தேர்தல் ஆணையத்தை வலியுறுத்திக்கொள்வதோடு, இந்த சமநிலையற்ற, சனநாயகத்துக்கு முரணான தன்மையை எதிர்த்து உரிய நீதிமன்றத்தை நாடுவது எனவும் இப்பொதுக்குழு முடிவெடுத்துள்ளது.
தீர்மானம்-4
தமிழர் இன வரலாற்றில் ஒருபோதும் திராவிட, இந்தியத்தேசியக் கட்சிகளோடு தேர்தல் உடன்பாடு இல்லை என்ற நிலைப்பாட்டோடு தனித்துத் தேர்தலை எதிர்கொள்ள இன எழுச்சி அரசியல் பெரும்பயணத்தை நாம் தொடங்கத் திட்டமிட்டுள்ளோம். ‘பணநாயகத்தை வீழ்த்தி சனநாயகம் காப்போம்’, ‘எமது அதிகாரம் மக்களுக்கானது’. ஊழல், இலஞ்சம், பசி, பட்டினி, கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை, பண்பாட்டு சீரழிவு, பெண்ணடிமை, மொழிச் சிதைவு, சாதிய இழிவு, தீண்டாமை, சுரண்டல், அடக்குமுறை, ஒடுக்குமுறை, மது, வர்க்க வேறுபாடு இவைகள் எதுவுமற்ற முழுமையான உண்மையான, நேர்மையான மக்களாட்சி அமைக்க, நிலவளம், நீர்வளம், காட்டு வளம், மலை வளம், கடல் வளம், கனிம வளம் காக்க, கல்வி, மருத்துவம், குடிநீர் ஆகியவற்றை இலவசமாக பொதுமையில் வைக்க, தாய்மொழி கல்வி போற்ற, பொருளாதார, அரசியல், சமூக நீதி ஆகியவற்றைக் காத்திட, மாற்று அரசியலை முன்வைத்து, ‘மக்களிலிருந்து நாங்கள் மக்களுக்காகவே நாங்கள்’. ‘இந்த மண்ணை, மக்களைக் காக்க வானத்திலிருந்து வந்தவர்கள் இல்லை! உங்கள் வயிற்றிலிருந்து வந்த பிள்ளைகள்’ என்பதனை உணர்ந்த எமது மக்களைச் சந்திக்க வருகிற ஆகஸ்ட், செப்டம்பர், அக்டோபர் ஆகிய 3 மாதங்களில் இன எழுச்சி அரசியல் பெரும்பயணத்தை லட்சிய உறுதியோடு தொடங்கிறோம் என்பதை இப்பொதுக்குழு பெருமையுடன் அறிவிக்கிறது. ‘2016-இல் உருவாக்குவோம் புதிய அரசியல் வரலாறு’ என்ற உயரிய நோக்கத்தோடு நாம் தமிழர் கட்சி வருகிற சட்டமன்றத்தேர்தலை எதிர்கொள்கிறது. இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி. திராவிட, இந்தியத் தேசியக் கட்சிகளுக்கோ இது மற்றுமொரு தேர்தல். மாற்றத்தை எதிர்நோக்கி படைதிரட்டி நிற்கும் நாம் தமிழர் கட்சிக்கோ இது போர்க்களம் என இந்த பொதுக்குழு பிரகடனம் செய்கிறது.

முந்தைய செய்திசெல்லும் இடமெல்லாம் தமிழனைக் கொல்லும் சூழலா? — சீமான் வேதனை
அடுத்த செய்திபொதுக்குழுவில் 9 தொகுதிகளுக்கு வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்பட்டது.