234 தொகுதிகளிலும் நாம் தமிழர் கட்சி போட்டி என்பது தோற்பதற்கல்ல! தொடங்குவதற்கு!! -சீமான்

67

நாம் தமிழர் கட்சியின் இளைஞர் பாசறை சார்பில் இன எழுச்சிக் கருத்தரங்கம் 04-04-15 அன்று சென்னை, அம்பத்தூர், எச்.பி.எம். திருமணக்கூடத்தில் நடந்தது. காலை 09 மணிக்கு அகவணக்கம், வீரவணக்கம், உறுதிமொழி ஏற்று கருத்தரங்கம் துவங்கியது.

முதல் அமர்வு காலை 09.30 மணிக்குத் தொடங்கியது. அதில் ‘ஈழ விடுதலையும், அனைத்துலக அரசியலும்’ என்ற தலைப்பில் மாந்தநேயப்போராளி முனைவர் பால் நியூமன் அவர்கள் கருத்துரையாற்றினார். இதில் உலக நாடுகள், ஏன் ஈழ விடுதலையை ஆதரிக்க மறுக்கிறது? அதில் என்ன சர்வதேசிய அரசியல் இருக்கிறது? என்பது குறித்து அவர் எடுத்துரைத்தார்.

காலை 10.15 மணிக்கு, ‘பெண் விடுதலை இல்லையேல், மண்விடுதலை இல்லை’ என்ற தலைப்பில் பாவலர் தழல் தேன்மொழி அவர்கள் கருத்துரையாற்றினார். இதில் பெண்கள் சமூகத்தில் ஆற்ற வேண்டிய பணிகள் குறித்தும், பெண்களின் சமூகப்பணிகளில் ஈடுபட வேண்டியதன் அவசியம் குறித்தும் அவர் விளக்கினார்.

காலை 11 மணிக்கு, ‘இன்றைய ஈழ நிலையும்,எதிர்கால அரசியலும்’ என்ற தலைப்பில் கருநாடாக மண்ணைச்சார்ந்த முனைவர் சுபாஷ்சந்திரா அவர்கள் கன்னடத்தில் பேச, அதனை முனைவர் பால் நியூமன் அவர்கள் தமிழில் மொழிபெயர்ப்பு செய்தார். இதில் அரசியல் கட்சிகள் மக்களின் உணர்வுகளை தங்களுக்கான வாக்கு வங்கியாக எப்படி மாற்றிக்கொள்கிறது? இதற்கு பின்புலத்திலிருக்கும் அரசியல் என்ன? ஈழப்படுகொலைக்கு எப்படி இந்த அரசியல் கட்சிகள் துணைபோனது? என்பது குறித்தும் எடுத்துரைத்தார்.

காலை 12 மணிக்கு, ‘தமிழ்த்தேசிய இனமும், மறைக்கப்பட்ட வரலாறும்’ என்ற தலைப்பில் முனைவர் ஒடிசா பாலு அவர்கள் விளக்கவுரை நிகழ்த்தினார். இதில் தமிழ்மொழி எங்கெல்லாம் பரவிக்கிடக்கிறது? தமிழர்கள் எவ்வளவு மூத்த இனத்தின் மக்கள்? அவர்கள் எப்படி தங்கள் வரலாற்றை மறந்து போனார்கள்? என்பது குறித்தெல்லாம் நீண்டவுரை நிகழ்த்தினார். இத்துடன் காலை அமர்வு நிறைவுபெற்றது.

உணவு இடைவேளைக்குப் பிறகு, இரண்டாவது அமர்வு துவங்கியது.
பிற்பகல் 02.00 மணிக்கு, ‘என் இனிய தமிழினமே’ எனும் தலைப்பில் சொல்லாய்வறிஞர் ப.அருளியார் அவர்கள் கருத்துரையாற்றினார். இதில் தமிழ்மொழியின் சிறப்பு குறித்தும், பிற மொழிகளுக்கு இல்லாத என்ன பெருமையெல்லாம் தமிழுக்கு இருக்கிறது என்பது குறித்தும் உரையாற்றினார்.

பிற்பகல் 03.00 மணிக்கு, முனைவர் ஹாஜாக்கனி அவர்கள் ‘ஏலம் போகும் காந்தி தேசம்’ எனும் தலைப்பில் கருத்துரையாற்றினார். இதில் இன்றைக்கு மத உணர்வு எப்படியெல்லாம் அரசியலாக்கப்படுகிறது? தேசிய இனங்களின் உரிமைகள் எப்படியெல்லாம் நசுக்கப்படுகிறது? நாட்டின் வளங்கள் எப்படியெல்லாம் உள்நாட்டு, வெளிநாட்டு முதலாளிகளால் சுரண்டப்படுகிறது? என்பது குறித்து விளக்கவுரையாற்றினார்.

பிற்பகல் 03.45 மணிக்கு, ‘தமிழின் எதிர்காலம்’ எனும் தலைப்பில் முனைவர் கு.அரசேந்திரன் அவர்கள் கருத்துரை நிகழ்த்தினார். இதில் தமிழ்மொழியின் சிறப்பு மற்றும் பெருமை குறித்தும், அதனை நாம் காக்க வேண்டியதன் அவசியம் குறித்தும் எடுத்துரைத்தார்.

மாலை 04.30 மணிக்கு, ‘மண்ணின் வளமும், மக்களின் நலமும்’ எனும் தலைப்பில் இயற்கைவேளாண் பேரறிஞர் பாமயன் அவர்கள் கருத்துரையாற்றினார். இதில் நவநாகரீக காலத்தில் மண் எப்படியெல்லாம் மாசுபடுத்தப்படுகிறது? மண்ணிற்கு எதிரான செயல்களில் ஈடுபட்டு, எப்படி இயற்கை விவசாயம் நம் கையைவிட்டுப் போனது? என்பது குறித்தும் விளக்கவுரையாற்றினார்.

பிறகு, 2009இல் அனந்தபுரம் போரில் தன்னுயிர் ஈந்த தீபன், மணிவண்ணன்,விதுசா, துர்கா உள்ளிட்ட மாவீரர்களுக்கு மலர்வணக்கம், வீரவணக்கம் செலுத்தப்பட்டது.
இறுதியாக, ‘வையத்தலைமை கொள்’ எனும் தலைப்பில் கருத்தரங்கு நிறைவுரையாற்றியாற்றினார் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான். அவர் பேசியதிலிருந்து…
‘தமிழன் என்றோர் இனமுண்டு; தனியே அவற்கொரு குணமுண்டு’ என்பதை உலகுக்கு உணர்த்திய தலைவன் பிரபாகரன். நாலைந்து மனைவி கட்டி, அவர்களுக்கு எல்லாம் பிள்ளை பெற்று, பெற்ற பிள்ளைகளுக்கு எல்லாம் பதவி பெற்றுக்கொடுத்து, அடித்த கொள்ளையில் வந்த பணத்தை பதுக்க, ஒதுக்க கடைசிவரை பதவியைத் தேடிய தலைவர்களுக்கு மத்தியில், தான் பெற்றெடுத்த பிள்ளைகளை களத்தில் பலிகொடுத்த தலைவர்தான், தலைவர் பிரபாகரன். இன்றைக்கு நாங்கள் பெரியாருக்கு எதிரி என்கிறார்கள். ‘எதனையும் சுயஅறிவோடு சிந்தித்து செயல்பாடு’ என்றார் பெரியார். ஆனால், இன்றைய பெரியாரியவதிகளோ, ‘சொந்தப்புத்தி வேண்டாம்; பெரியார் தந்த புத்தி ஒன்றே போதும்’ என்கிறார்கள். எல்லாவற்றிக்கும் ஆய்வுக்கு உட்படுத்து என்ற தந்தை பெரியாரை ஆய்வுக்கு உட்படுத்தவே தயங்குகிற இவர்கள் என்ன பெரியாரியவாதிகள்? 50 ஆண்டுகால திராவிட ஆட்சியில் திமுகவுக்கும், அதிமுகவுக்கும் என்ன தத்துவ மாற்றம் இருக்கிறது? இவர்களின் மொழிக்கொள்கையில் என்ன மாற்றம் இருக்கிறது? திமுக, அதிமுக என இரண்டு கட்சிகளின் ஆட்சியிலும் மணல்கொள்ளை, கனிமவள கொள்ளை, கொலை, கொள்ளை, பசி, பஞ்சம், பட்டினி,வறுமை, ஏழ்மை. அதனால்தான், முடிவுக்கு வந்தோம். திமுகவுக்கு மாற்று அதிமுக இல்லை. அதிமுகவுக்கு மாற்று திமுக இல்லை. காங்கிரசுக்கு மாற்று பாஜக இல்லை. பாஜகவுக்கு மாற்று காங்கிரசு இல்லை. நாமே மாற்று! நாம் தமிழரே மாற்று!! அதனால்தான், வருகிற சட்டமன்றத்தேர்தலில் திமுக, அதிமுக இவற்றிற்கு மாற்றாக, தனித்தே 234 தொகுதிகளிலும் போட்டியிடுவது என்று முடிவெடுத்து நாம் தமிழர் கட்சி களம் காண்கிறது. நாம் தமிழர் கட்சி, 234 தொகுதிகளிலும் தனித்தே போட்டி என்பது தோற்பதற்கல்ல! தொடங்குவதற்கு!! அதற்கு முன்பாக வருகிற மே 24, திருச்சியில் இன எழுச்சி மாநாட்டை நாம் தமிழர் கட்சி நடத்துகிறது. தமிழர் தேசிய இனத்துக்கான நாள் என அதில் ஒவ்வொரு தமிழரும் பங்கேற்க வேண்டும். தமிழர் வையத்தலைமை கொள்வதற்கு முன்பாக தான் பிறந்த மண்ணை தலைமை கொள்ள வேண்டும்.

இவ்வாறு சீமான் பேசினார்.

முந்தைய செய்திமாநாட்டு விளக்கப்பொதுக்கூட்டம் ஓசூரில் நடந்தது
அடுத்த செய்திதிருப்பூர் வெள்ளகொவிளில் நடைபெற்ற தேர்தல் பரப்புரை 5-4-2011