தொடர்வண்டித் துறையைத் தனியாருக்கு விடுவதா? -நாம் தமிழர் கட்சி கடும் கண்டனம்

18
நாம் தமிழர் கட்சியின் சார்பில் அதன் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

எளிய அடித்தட்டு மக்களின் பயணங்களுக்குப் பயன்படும் தொடர்வண்டித் துறையில் நூறு விழுக்காடு அந்நிய முதலீட்டுக்குள் கொண்டுவர மத்திய அரசு முடிவு செய்திருப்பது மிகவும் அபத்தமானது; ஆபத்தானது. தரைவழி தொடங்கி விமான வழியிலான பல பணிகளைத் தனியார் வசம் ஒப்படைத்திருக்கும் மத்திய அரசு, பொதுத் துறையில் இயங்கிவரும் தொடர் வண்டித் துறையையும் தனியார் வசம் ஒப்படைக்கத் துடிப்பது மக்கள் நலனுக்கு முற்றும் எதிரான செயல். தொடர் வண்டியில் பயணிக்கும் மக்கள் சொகுசான வசதிகளை அனுபவிக்க வேண்டும் என்பதற்காகவே இத்தகைய முடிவை எடுத்திருப்பதாக மத்திய அரசு சொல்கிறது. ஏழை எளிய மக்களில் எவரேனும் சொகுசுப் பயணத்துக்கு ஆசைப்பட்டது உண்டா? அத்தியாவசியப் பயணத்துக்கு அடிப்படை வசதிகள் இருந்தாலே போதும் என்கிற நிலையில், மக்களின் எண்ணத்துக்கு சற்றும் ஒத்துவராத கருத்தை முன்னிறுத்தி, தனியார் வசம் ஒப்படைக்க நினைப்பது மக்களை அடிமுட்டாளாக்கும் முடிவு. தொடர் வண்டிகளில் சொகுசான வசதிகள் இல்லை என இந்த நாட்டில் எங்கேனும் மக்கள் போராடியிருக்கிறார்களா? எதன் அடிப்படையில் மத்திய அரசு இப்படி சிந்திக்கிறது?

நாங்கள் ஊருக்குப் போகத்தான் நினைக்கிறோமே தவிர, உல்லாசம் போக நினைக்கவில்லை. தொடர் வண்டித் துறையை உலகத்தரத்துக்கு அரசு உயர்த்துகிறோம் எனச் சொல்கிறது மத்திய அரசு. நீங்கள் உலகத் தரத்துக்கெல்லாம் நடத்த வேண்டாம்; உள்ளூர் தரத்துக்கே நடத்துங்கள். அதை ஒழுங்காக நடத்தினால் எங்களுக்குப் போதும்.

தொடர்வண்டித் துறையை தனியார் வசம் ஒப்படைத்தால் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களில் எவரேனும் அங்கே வேலை வாய்ப்புப் பெற முடியுமா? பொதுத் துறையாக இருக்கும் காலகட்டத்திலேயே தமிழர்களை ஒப்பந்தக் கூலிகளாக மட்டுமே வைத்துக்கொண்டு, நிரந்தரப் பணி வாய்ப்புகளை வழங்காமல் இழுத்தடிக்கும் தொடர் வண்டித் துறை, தனியார் கைவசமானால் என்ன கதியாகும் என்பதை சொல்லித் தெரியவேண்டியதில்லை. ஏற்கெனவே கல்வி, மருத்தும் என பல துறைகளிலும் போராடிப் பெற்ற இட ஒதுக்கீட்டை நாங்கள் இழந்து வரும் நிலையில், ஒரே பொதுத்துறை நிறுவனமான தொடர் வண்டித் துறையிலும் நாம் போராடிப் பெற்ற இட ஒதுக்கீட்டை இழக்க வேண்டிய அபாயம் உருவாகும்.

ஆக்கபூர்வ வசதிகளைத் தனியார் வசம் ஒப்படைத்தால்தான் செய்ய முடியும் என மத்திய அரசு நினைக்கிறதென்றால், எதற்கு இந்த அரசாங்கம்? மாபெரும் சர்வ வல்லமை கொண்ட ஓர் அரசால் செய்ய முடியாததை தனியார் முதலாளிகள் செய்கிறார்கள் என்றால், இந்த அரசாங்கத்தின் கையாலாகாததனத்தை என்னவென்று சொல்வது? தான் செய்ய முடியாத ஒன்றைத் தனியார் செய்கிறதென்றால், அது இந்த அரசாங்கத்துக்கு இழுக்கு இல்லையா? அதனை உணராமல் சொகுசுக்கு வழி செய்கிறோம் என்கிற பெயரில் தனியார் முதலாளிகளை குட்டி அரசாங்க ஆட்களாக மாற்றும் நடவடிக்கைகள் எவ்வளவு மோசமானவை? மக்களுக்கும் பெரும் தனியார் முதலாளிகளுக்கும் இடையில் வெறும் தரகர் வேலை பார்ப்பதுதான் அரசின் வேலையா? எல்லா வேலைகளையுமே தனியாரே செய்யும் என்றால், அரசின் வேலைதான் என்ன?

சாலை மேம்பாட்டுத் திட்டங்களைத் தனியாருக்கு ஒப்படைத்ததன் மூலமாக சுங்கச் சாவடி வசூல் என்கிற பெயரில் தனியார் முதலாளிகள் நடத்தும் ஆணவத்தனமான கொள்ளைகளும் அடாவடிகளும் கொஞ்சமாநஞ்சமா? நிலைமை அப்படியிருக்க, மிகப்பெரிய பொதுத் துறையான தொடர் வண்டித் துறையைத் தனியார் வசம் ஒப்படைத்தால் கட்டணம் தொடங்கி பணி வாய்ப்புகள் வரை எத்தகைய அடாவடி நடவடிக்கைகளை மக்கள் எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்பதை மத்திய அரசு சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

இன்றைக்கும் எளிய மக்களின் பயணத்துக்கு ஒரே ஆதாரமாக இருக்கும் தொடர் வண்டித் துறையை ஒருபோதும் தனியார் வசம் ஒப்படைக்கக் கூடாது. மக்களின் மன உணர்வுகளையும் மீறி தொடர் வண்டித் துறையில் அந்நிய தலையீடு கொண்டு வரப்படுமேயானால்,மிகக் கடுமையான போராட்டங்களை முன்னெடுக்க நாம் தமிழர் கட்சி தயங்காது. மொத்த தமிழக மக்களையும் திரட்டி மத்திய அரசின் குடுமியை உலுக்கும் விதமாகக் கடுமையான போராட்டங்களை நாம் தமிழர் கட்சி நடத்தும்.

இவ்வாறு அந்த அறிக்கையில் செந்தமிழன் சீமான் கூறியுள்ளார்

முந்தைய செய்திநாம் தமிழர்கட்சி தூத்துக்குடி வடக்கு மாவட்டம் சார்பாக மாவீரர் நாள் வீரவணக்க நிகழ்வு
அடுத்த செய்திசங்கரன்கோவில் புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் 58ஆவது நினைவேந்தல்