சேலம் மாவட்டம், கொளத்தூரை ஒட்டியுள்ள எல்லைப் பகுதியில் அடிப் பாலாறு எனுமிடத்தில் மீன் பிடிக்கச் சென்ற தமிழரை பிடித்து சித்ரவதை செய்து, துப்பாக்கியால் சுட்டுப் படுகொலை செய்துள்ள கர்நாடக வன அலுவலர் மீது கொலை வழக்குத் தொடர்ந்து, அதன் மீதான விசாரணையை மத்திய புலனாய்வுக் கழகம் மேற்கொள்ள வேண்டும் என்று நாம் தமிழர் கட்சி கேட்டுக்கொள்கிறது.
அடி பாலாறு என்கிற அந்தப் பகுதியில் உள்ள பாலம் தமிழ்நாடு – கர்நாடகம் மாநிலங்களுக்கு இடையிலான எல்லைப் பகுதியாக உள்ளது. இங்கு கடந்த 21ஆம் தேதி – தீபாவளிக்கு முந்தையை நாள் மாலை, காரைக்காடு, செட்டிப்பட்டி கிராமங்களைச் சேர்ந்த பழனி, முத்துச்சாமி, ராஜா ஆகியோர் மீன் பிடிப்பதற்காக அன்று மாலை அங்கு சென்று தூண்டில் போட்டுவிட்டு வந்துள்ளனர். தூண்டில்களில் மீன்கள் சிக்கியுள்ளதா என்பதை பார்த்துவர அன்று இரவு 10 மணியளவில் அடி பாலாறு பகுதிக்குச் சென்றபோது, அவர்களை நோக்கி கர்நாடக வனத்துறையினர் துப்பாக்கியால் சுட்டுள்ளனர். இதில் காயம்பட்ட முத்துச்சாமியும், ராஜாவும் தமிழ்நாட்டின் எல்லைப் பகுதிக்கு ஒடி வந்து தப்பிவிட, துப்பாக்கிக் குண்டு பாய்ந்து மயக்கமுற்று விழுந்த பழனியை எல்லைச் சாவடிக்கு தூக்கிச் சென்று, அவரை அடித்து, உதைத்து சித்ரவதை செய்துள்ளனர். அவருடைய தலையில் துப்பாக்கிக் கட்டையால் அடித்துள்ளனர். பழனியின் உயிர் நிலையை அறுத்து சாகடித்துள்ளனர். ஆனால், பழனியும் மற்றவர்களும் மான்களை வேட்டையாட வந்ததாகவும், அவர்களை நோக்கி துப்பாக்கியார் சுட்டதில் பழனி இறந்துவிட்டதாகவும் வழக்குப் பதிவு செய்துள்ளனர். மானை வேட்டையாட வந்தார்கள் என்றால், அவர்களிடம் துப்பாக்கி இருந்திருக்க வேண்டுமே என்று கேட்டால், அதற்கு பதில் இல்லை. மேலும் அவர்களைப் பொறுத்து ஐயம் இருப்பின், கைது செய்து நீதிமன்றத்தில் நிறுத்த வேண்டியதுதான் வனத்துறையின் கடமையே தவிர, துப்பாக்கியால் சுடுவதும், சித்ரவதை செய்வதும் எதற்காக?
கர்நாடக வனத்துறை அலுவலரான மதுசூதன் என்பவர், இரண்டு காவலர்களுடன் இணைந்து இக்கொடூரத்தை நிகழ்த்தியுள்ளார். எல்லைப் பகுதியிலுள்ள காடுகளில் சுள்ளி பொருக்கச் செல்லும் பெண்களையெல்லாம் இந்த அலுவலர் மதுசூதன் அடித்து துன்புறுத்தி வந்துள்ளார். இந்த பின்னணியி்ல், பழனி கொல்லப்பட்டதால் ஏற்பட்ட ஆவேசத்தால் அப்பகுதி வாழ் தமிழர்கள் திரண்டு சென்று வனத்துறை சோதனை சாவடியை கொளுத்தியுள்ளனர்.
கர்நாடக வனத்துறையினர் இப்படிபட்ட அராஜகங்களில் நீண்ட காலமாக ஈடுபட்டு வருவது தெரிகிறது. எல்லோரும் இந்தியர்கள் என்று கூப்பாடு போட்டுக்கொண்டு, பிறகு எல்லைத் தாண்டி வந்தார்கள் என்று கூறி துப்பாக்கியால் சுடுகிறது கர்நாடக வனத்துறை என்றால் தமிழ்நாடும், கர்நாடகமும் வேறு வேறு நாடுகளா? என்று கேட்கத் தோன்றுகிறது. இதேபோல் தமிழ்நாட்டின் எல்லைக்குள் வரும் கர்நாடகத்தினரை தமிழ்நாடு வனத்துறையும் சுட்டுக்கொல்லாமா? என்று கர்நாடக அரசை தமிழக அரசு கேட்க வேண்டும். வீரப்பன் மீது இருக்கும் கோவத்தால் இப்படி கர்நாடக வனத்துறை நடந்துகொள்கிறார்கள் என்று அப்பகுதி மக்கள் சொல்கின்றனர். வீரப்பன் இருந்தால் இப்படியெல்லாம் நடந்துகொள்வார்களா என்றும் அப்பகுதி மக்கள் கேட்கின்றனர். ஆக, தமிழ்நாடு காவல் துறையோ அல்லது வனத்துறையோ தங்களை காப்பதில்லை என்பதே இம்மக்களின் வார்த்தைகளில் இருந்து நாம் புரிந்துகொள்ள முடிகிறது! இவர்களை காப்பதற்கு இன்னொரு வீரப்பன் வர வேண்டுமா? புரியவில்லை.
எதற்கெல்லாம் தமிழன் போராட வேண்டியதிருக்கிறது. அண்டை மாநிலத்து வனத்துறையோடு கூட போராட வேண்டுமா? கெளரவத்துடன் வாழ்வதற்குக் கூட தமிழ்நாட்டு மக்கள் போராட வேண்டுமா? இப்படியொரு அவல நிலை நீடிக்கலாமா? தமிழக ஆட்சியாளர்கள் சிந்திக்க வேண்டும்.
படுகொலை செய்யப்பட்டுள்ள பழனிக்கு மனைவியும் இரண்டு பெண் பிள்ளைகள் உட்பட மூன்று பிள்ளைகள் இருக்கின்றன. இப்போது இந்தக் குடும்பம் அனாதையாகி நிற்கிறது. எல்லைத் தாண்டிச் சென்று மீன் பிடித்தான் என்று தமிழக மீனவர்கள் சிங்கள கடற்படை கொல்வது போல், எல்லைத் தாண்டி வந்து தூண்டி போட்டு மீன் பிடிக்கின்றவனை கர்நாடக வனத்துறை கொல்கிறது! இந்த வேதனையை எங்கு போய் சொல்வது? தேச ஒற்றுமை, இறையாண்மை பேசும் தேசியக் கட்சிகள் இப்பிரச்சனையில் என்ன செய்யப்போகின்றன? தமிழ்நாட்டில் ஆட்சியைப் பிடிக்க நடிகர்களை தேடி அலையும் கட்சிகள், இந்த ‘உள்நாட்டுப் பிரச்சனை’க்கு என்ன செய்யப் போகிறார்கள்?
கொல்லப்பட்ட பழனியின் குடும்பத்தினருக்கு தமிழக அரசு நிதி உதவியும், நிவாரணத்தையும் அளிக்க வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறோம். 12வது படித்த முடித்துள்ள பழனியின் மூத்த மகளுக்கு கல்லூரி சென்று படிக்கவும் உதவ வேண்டும்.
நாம் தமிழர் கட்சிக்காக,
செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
குறிப்பு :- சுட்டுக்கொல்லப்பட்ட பழனியின் குடும்பத்தை நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் நேரில் சென்று சந்தித்து ஆறுதல்கூறி கட்சியின் சார்பாக உதவியும் அளித்தார்.