தனது வருமானத்திற்கும் அதிகமாக சொத்து சேர்த்ததாக தொடரப்பட்ட வழக்கில் செல்வி ஜெயலலிதா உள்ளிட்ட நால்வர்க்கு அளித்த தீர்ப்பை வரவேற்கிறோம்.

31

1991ஆம் ஆண்டு முதல் 1996ஆம் ஆண்டு வரை தமிழ்நாட்டின் முதல்வராக இருந்தபோது, தனது வருமானத்திற்கும் அதிகமாக சொத்து சேர்த்ததாக தொடரப்பட்ட வழக்கில் அ.இ.அ.தி.மு.க. பொதுச் செயலர் செல்வி ஜெயலலிதா உள்ளிட்ட நால்வரை குற்றவாளிகள் என்று அறிவித்து, அவர்களுக்கு 4 ஆண்டுகள் சிறைத் தண்டனையையும், ரூ.130 கோடி அபராதமாகவும் விதித்து பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் அளித்த தீர்ப்பை வரவேற்கிறோம்.

நமது நாட்டின் ஆட்சி நிர்வாகம் தீட்டும் திட்டங்கள் மக்களுக்கு பயனளிக்காமல் போவதற்கு மூல காரணமாக இருக்கின்ற ஊழலை ஒழிக்க வேண்டும் என்பதில் இரு வேறுபட்ட கருத்திற்கு இடமில்லை. அதுவும் ஆட்சியின் தலைமையை ஏற்பவர்கள் தன்னலமின்றி, மக்கள் நலனையும், நாட்டின் எதிர்காலத்தையுமே கருத்தில்கொண்டு ஆட்சி புரிய வேண்டும் என்பதை இத்தீர்ப்பு உணர்த்தியிருக்கிறது. எனவே சிறப்பு நீதிமன்றத்தின் இத்தீர்ப்பை நாம் தமிழர் கட்சி வரவேற்கிறது.

இத்தீர்ப்பு பற்றி கருத்து தெரிவித்துள்ள பாரதிய ஜனதா கட்சியின் சுப்ரமணியன் சுவாமி, ஜெயலலிதா ஆட்சி விடுதலைப் புலிகள், நக்சலைட்டுகள், ஐ.எஸ்.ஐ.ஆதரவுடன் செயல்படும் தீவிரவாதிகள் ஆகியோருக்கு பாதுகாப்பு அளித்து வந்ததாகவும், எனவே அந்த ஆட்சியை கலைத்துவிட்டு, ஆளுநர் ஆட்சியை தமிழ்நாட்டில் பிரகடனம் செய்ய வேண்டும் என்றும் பேசியுள்ளார். இந்த சாமி இப்படித்தான் உளரும் என்று கூறி இக்கருத்தை புறக்கணித்துவிட முடியாது. இதற்குப் பின்னால் ஒரு பெரும் சதி வலை இருப்பதாக நாம் தமிழர் கட்சி கருதுகிறது. மக்களால் தேர்வு செய்யப்பட்ட அ.இ.அ.தி.மு.க. அரசு, சட்டப் பேரவையை பொறுத்தவரை இன்றளவும் பெரும்பான்மை பலமுடைய கட்சியாகும். ஜெயலலிதா முதல்வர் பதவியை இழந்துள்ள நிலையில், அக்கட்சியின் சட்ட மன்ற உறுப்பினர்கள் யாரை தேர்வு செய்கிறார்களோ அவரே தமிழ்நாட்டின் முதல்வராக ஆக முடியும். இப்படிப்பட்ட சட்ட ரீதியான நிலை இருக்கும்போது, தமிழகத்தில் ஆளுநர் ஆட்சியை ஏற்படுத்தவோ அல்லது சட்டப் பேரவையை முடக்கி வைக்கும் முயற்சியிலோ மத்திய அரசு ஈடுபடுமானால் அது அரசமைப்பிற்கு எதிரானதாக இருக்கும். அப்படி ஒரு நடவடிக்கையை தமிழக மக்களும் நாம் தமிழர் கட்சியும் கடுமையாக எதிர்ப்போம்.

சிறப்பு நீதிமன்றத் தீர்ப்பை வரவேற்றுள்ள தி.மு.க., காங்கிரஸ், பாரதிய ஜனதா ஆகிய கட்சிகள், ஏதோ தாங்கள் ஊழலற்ற ஆட்சியையும் நிர்வாகத்தை இந்த நாட்டினருக்கு வழங்கியது போல அறிக்கை வெளியிட்டு கருத்து கூறி வருவது கடைதெடுத்த அயோக்கியத்தனமாகும். ஆட்சிக்கு வந்த அடுத்த ஆண்டே பூச்சி மருந்து அடிப்பதில் ஊழல் செய்து பெருமை பெற்ற தி.மு.க., சர்காரியா கமிஷன் அளவிற்கு புகழ் பெற்றதோடு நிற்காமல், இந்த நாடு கண்ட மாபெரும் ஊழலான 2ஜி குற்றச்சாற்றை சுமந்துகொண்டு நீதிமன்றத்தின் படிகளில் காலத்தை கழித்துக்கொண்டிருக்கிறது.

நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு ஊழல், காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளை ஏற்பாடு செய்ததில் ஊழல், கார்கில் போரில் தியாகம் செய்த இராணுவ வீரர்களுக்கு கட்டிய அடுக்குமாடி குடியிருப்பை தங்களுடைய உறவுனர்களுக்கு ஒதுக்கிக்கொண்ட ஊழல், ஹெலிகாப்டர் வாங்கியதில் ஊழல் என்று கடலில் இருந்து வானம் வரை தீட்டிய திட்டங்கள் அனைத்திலும் ஊழல் செய்து இந்நாட்டின் மானத்தை காற்றில் பறக்கவிட்ட கட்சி காங்கிரஸ். அதன் தலைவர்கள் இன்று வந்த தீர்ப்பை பற்றி சிலாகித்துப் பேசுவது வேடிக்கையாக இருக்கிறது. தங்கள் ஊழல்களை நாட்டு மக்கள் மறந்திருப்பார்கள் என்கிற இறுமாப்பில் இவர்கள் கருத்து கூறிக்கொண்டிருகிறார்கள்.
தென்னகத்தில் ஆட்சியை பிடித்த ஒரே மாநிலம் என்ற பெருமையோடு கர்நாடகத்தில் ஆட்சியமைத்த பாரதிய ஜனதா செய்த ஊழல், அரசு நிலைத்தை வீட்டு உறவுகளுக்கு எழுதி எடுத்துக்கொண்டதில் ஆரம்பித்து, ரெட்டி சகோதரர்களின் சுரங்க ஊழல் வரை நாடே சிரிக்கும் அளவிற்கு ஊழல் செய்துவிட்டு, இவர்களும் ஊழலுக்கு எதிரான தீர்ப்பை வரவேற்றுப் பேசுவது ஈயத்தைப் பார்த்து சிரித்ததாம் பித்தளை என்கிற தமிழ் பழமொழியை நினைவூட்டுகிறது. டெல்லி ஆட்சியை கைப்பற்றியவுடன் டெல்லி மாநில சட்டசபை உறுப்பினர்கள் விலைக்கு வாங்கி ஆட்சி அமைக்க படாத பாடுபடும் பா.ஜ.க. ஊழல் எதிர்ப்பை பேசுகிறது.

இப்படிப்பட்ட அரசியல் யோக்கியுடைய தேசியக் கட்சிகளே மீண்டும் தமிழ்நாட்டில் ஆட்சிக் கட்டிலில் ஏறுவார்களாம், கனவு காண்கிறார்கள்! தமிழினத்தின் விடுதலையை அழித்தவர்கள், தமிழ்நாட்டின் உரிமைகளை குழிதோண்டிப் புதைத்தவர்கள் மீண்டும் தமிழினத்தின் தலைமையேற்கத் துடிக்கிறார்கள். அது ஒருபோதும் நடக்காது. தமிழ்நாட்டில் இனி தமிழ்த் தேசிய இனத்தின் அரசியலும், ஆட்சியும்தான் ஏற்படுமே தவிர, இந்த ஊழல் மரங்களின் அழித்தொழிக்கப்பட்ட வேர்கள் துளிர்விட ஒருபோதும் தமிழினத்தவர் அனுமதிக்க மாட்டார்.

இந்த நாட்டின் விடுதலைக்காக தன் சொத்து, சுகம், வாழ்க்கை, தொழில் என்று அனைத்தையும் இழந்த மாபெரும் தலைவர்கள் செய்த தியாகத்தால் சுதந்திரம் பெற்ற இந்நாடு இன்று தன்னல மயக்கத்தில் தடுமாறிக் கொண்டிருக்கிறது. நாட்டு மக்கள் அனைவரின் உள்ளத்திலும் பொது நல உணர்வு ஏற்பட்டால் மட்டுமே ஊழல் என்ற பேயை இந்நாட்டு நிர்வாகத்தில் இருந்தும், கல்வி முதல் மருத்துவம் வரை கொட்டிக் கொடுத்து முன்னிலை பெறும் மனப்பாங்கு நீங்கும். அன்றே ஊழலற்ற சமூகம் பிறக்கும்.

நாம் தமிழர் ,

செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்