அய்யா சி.பா.ஆதித்தனார் அவர்களின் 33-வது நினைவு நாளில் அவருடைய கனவை நினைவாக்க உறுதியேற்க வேண்டும்

34

உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு’ என வாழ்ந்த அய்யா சி.பா.ஆதித்தனார் அவர்களின் 33-வது நினைவு நாளில் தமிழர்கள் யாவரும் அவருடைய கனவை நினைவாக்க உள உறுதியேற்க வேண்டும்.

தமிழர்களுக்கென தனி தேசம் காண நினைத்த அய்யா சி.பா. ஆதித்தனார் அவர்கள் அதற்காக எடுத்துக்கொண்ட முயற்சிகளும் போராட்டங்களும் மிக அதிகம். இங்கிலாந்தில் அய்யா அவர்கள் படித்தபோது அங்கே அயர்லாந்து மக்கள் ‘சைன் பைன்’ என்கிற பெயரில் சுதந்திரம் கேட்டு போராடியிருக்கிறார்கள். ஐந்து லட்சம் மக்களே கொண்ட அந்த நாடே தனிநாடாகத் தன்னை அறிவிக்கக் கோரி போராடுகையில், ஐந்து கோடிக்கும் அதிகமாக வாழும் தமிழ் மக்களுக்கென தனி நாடு இல்லாமல் போய்விட்டதே என்கிற வேதனையோடு தமிழகத்துக்கு வந்தார் அய்யா ஆதித்தனார் அவர்கள். அயர்லாந்து மக்களின் விடுதலைக்காக அங்கே தொடங்கப்பட்ட ‘டெய்லி மிரர்’ பத்திரிகையைப் போல் தமிழ்நாட்டில் ‘தினத்தந்தி’ பத்திரிகையை அய்யா அவர்கள் தொடங்கினார். பாமரத் தமிழனுக்கும் நாட்டு நடப்புகள் புரியும் விதமாக பேச்சு வழக்குத் தமிழில் பத்திரிகையைப் பிரசுரித்துப் பெரும்பணியாற்றினார். கடைக்கோடி தமிழனுக்கும் அன்றாட நடப்புகளும் அரசியல் நிகழ்வுகளும் புரிகிறதென்றால், அதற்கு அய்யா அவர்கள் கொண்டுவந்த தினத்தந்தி பத்திரிகையே காரணம்.
தமிழ்நாடு, ஈழம் உள்ளிட்ட பகுதிகளை இணைத்து தமிழர் பேரரசு நிறுவும் கனவோடு ‘நாம் தமிழர்’ கட்சியையும் அய்யா அவர்கள் தொடங்கினார்கள். ஈழ விடுதலைக்கு ஆதரவு கேட்டு ஈழத்தந்தை செல்வா அவர்கள் தமிழ்நாட்டுக்கு வந்தபோது முதல் ஆளாக அவருக்கு ஆதரவு கரம் நீட்டியவர் அய்யா ஆதித்தனார் அவர்கள்தான். தமிழர் முன்னேற்றத்திலும் சிறப்பிலும் அவர்கள் தனித்த தேசத்தவர்களாக அடையாளம் பெறுவதிலும் அய்யா அவர்கள் காட்டிய அக்கறையும் போராட்டமும் மகத்தானது. ஒரு கட்டத்தில் நாம் தமிழர் கட்சியை தொடர்ந்து நடத்த முடியாத நிலை வந்தபோது, ‘வழிவழியே வருகிற வீரத் தமிழ்ப் பிள்ளைகள் நாம் தமிழர் கட்சியைத் தொடர்ந்து நடத்துவார்கள்’ எனச் சொன்னார் அய்யா ஆதித்தனார். அவருடைய வார்த்தைகளை உண்மையாக்கும் விதமாகத்தான் இன்றைக்கு நாம் தமிழர் கட்சி தமிழர் விடுதலைக்கான அத்தனை விதமான முன்னெடுப்புகளையும் தீரத்தோடு நடத்தி வருகிறது.
ஒருமித்த தமிழர் எழுச்சி எப்படிப்பட்டதாக இருக்கும் என்பதற்கு நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகளே சாட்சியாக இருக்கும் நிலையில், ஈழ விடிவு, தமிழர் பேரரசு, மீனவர் பாதுகாப்பு என நம‌க்கான அத்தனை உரிமைகளையும் அடைகிற துணிவை அய்யா அவர்களின் நினைவு நாளில் நாம் நெஞ்சத்து உறுதியாக ஏற்க வேண்டும். தமிழர் மீட்சிக்காகவே வாழ்ந்து மறைந்த அய்யா அவர்களுக்கு நாம் தமிழர் கட்சியின் வீர வணக்கங்கள்!

செந்தமிழன் சீமான்

தலைமை ஒருங்கிணைப்பாளர்

முந்தைய செய்திஇனப் படுகொளையாளன் ராஜபக்சே இந்திய வருகையை கண்டித்து பெங்களூருவில் ஆர்ப்பாட்டம்
அடுத்த செய்திஇனப் படுகொளையாளன் ராஜபக்சே இந்திய வருகையை கண்டித்து புதுவையில் தொடர்வண்டி மறியல்