செவிலியர்கள் போராட்டத்துக்கு செவி சாய்க்காதது ஏன்? செந்தமிழன் சீமான் கண்டனம்

34
அரசு மருத்துவமனை பயிற்சி செவிலியர்கள் தொடர் போராட்டம் நடத்துவது குறித்து நாம் தமிழர் கட்சி அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறது. அதில், செந்தமிழன் சீமான் கூறியிருப்பதாவது…
தனியார் செவிலியர் கல்லூரி மற்றும் பள்ளிகளில் படித்த செவிலியர்களை அரசு மருத்துவமனைகளில் பணி நியமனம் செய்யும் போது அரசு மருத்துவமனைகளில் பயிற்சி பெற்ற செவிலியர்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி அரசு மருத்துவமனை பயிற்சி செவிலியர்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகிறார்கள். அவர்களின் கோரிக்கையில் இருக்கும் நியாயத்தை உணர்ந்து அதனை நிறைவேற்றிக் கொடுக்க அரசு உடனடியாக முன்வர வேண்டும். சென்னை அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரியைச் சேர்ந்த பயிற்சி செவிலியர்கள் கடந்த 28-ம் தேதி முதல் போராட்டம் நடத்தி வருகிறார்கள். உள்ளிருப்பு போராட்டம் மூலமாக அழுக்கு உடைகளுடனும் அத்யாவசிய தேவைகளைத் துறந்தும் பட்டினி கிடந்தும் அரசுக்கு தங்களின் கோரிக்கைகளை சொல்லத் துடிக்கும் செவிலியர்கள் கேட்பாரற்ற நிலைக்கு ஆளாகித் தவிக்கிறார்கள். கண் முன்னால் இத்தகைய போராட்டம் நடந்தும் தேர்தல் பேரங்களில் மூழ்கி கிடக்கும் கழகங்களும் அரசுத் தரப்பும் அதனைக் கண்டுகொள்ளாமல் உதாசினப்படுத்தி வருகிறது. தனியார் கல்லூரிகளில் படிக்க வசதியற்ற நடுத்தர வர்க்கத்தினர்தான் அரசுப் பள்ளிகளில் படிக்கிறார்கள். மருத்துவராகும் கனவோடு படிக்கும் மாணவிகள் படிக்க வசதியற்ற நிலையில், அரசு மருத்துவமனைகளில் செவிலியர் பயிற்சியில் சேருகிறார்கள். அவர்களுக்கான முன்னுரிமையை அரசே மறுப்பது எவ்விதத்தில் நியாயமாக இருக்கும்?
ஸ்டான்லி மருத்துவமனையில் போராட்டத்தில் ஈடுபட்ட செவிலியர்களுக்கும் அவர்களை அப்புறப்படுத்த முனைந்த காவல் துறையினருக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டு பல செவிலியர்களுக்கு காயம் ஏற்பட்டிருக்கிறது. நியாயமான கோரிக்கைகளை காது கொடுத்துக் கேட்டும் உரிய ஆலோசனைகளோடு அதனை நிறைவேற்றிக் கொடுத்தும் சம்பந்தப்பட்டவர்களின் கண்ணீரைத் துடைக்க வேண்டிய அரசுத் தரப்பு அத்துமீறி தாக்குதல் நடத்துவது கண்டிக்கத்தக்கது. மாற்றுத் திறனாளிகள் விவகாரத்திலும், அணுஉலை எதிர்ப்பு போராட்டங்களிலும், மீத்தேன் எரிவாயு குழாய் பதிப்பைத் தடுக்கும் விவசாய மக்களின் ஒருங்கிணைப்பிலும் எப்படி அரசுத் தரப்பு அடக்கி ஒடுக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டதோ அதையே செவிலியர்கள் போராட்டத்திலும் அரசுத் தரப்பு செய்யப் பார்க்கிறது. பிரச்சனைகளின் தீவிரத்தை உணராமல் அதனை நீர்த்துப் போகச் செய்யும் நடவடிக்கைகளில் மட்டுமே அரசு கவனம் காட்டுவது நெருப்பை வைக்கோல் போர் போட்டு மறைப்பதற்கு சமமானது.செவிலியர்களின் போராட்டத்தால் அரசு மருத்துவ மனைகளில் நோயாளிகளுக்கு உரிய உதவிகளைச் செய்ய முடியாமல் மருத்துவர்களும் திண்டாடி வருகிறார்கள். இதனால் உடனடியாகப் பேசித் தீர்க்க வேண்டிய பிரச்சனை இது. ஆனால், போராட்டத்தின் தீவிரத்தையும் கோரிக்கைகளின் நியாயத்தையும் பாதிப்புகளின் விவரங்களையும் உணராமல் அரசுத் தரப்பு மௌனமாகிக் கிடப்பது மிகுந்த வேதனையளிக்கிறது.
அரசு மருத்துவமனைகளில் பயிற்சி பெற்ற செவிலியர்களுக்கு தனியார் மருத்துவமனைகளில் பணி கிடைப்பது குதிரைக் கொம்பாக இருக்கும் நிலையில், அரசுப் பணி நியமனத்தில் அவர்களுக்கு முன்னுரிமையும் முக்கியத்துவமும் வழங்குவதுதான் நியாயமானதாக இருக்கும். இதைத்தான் அரசு மருத்துவமனைகளில் பயிற்சி பெற்ற செவிலியர்கள் வலியுறுத்துகிறார்கள். அரசு பள்ளிகளில் படிப்பதையும் அரசு மருத்துவமனைகளில் பயிற்சி பெறுவதையும் அவமானமாக நினைக்கும் காலகட்டத்தில் அரசை நம்பி பயிற்சி பெற்ற செவிலியர்கள் தங்களுக்கான முன்னுரிமையைக் கேட்பது நூற்றுக்கு நூறு நியாயமானது. எனவே போராட்டம் நடத்தும் செவிலியர்களை உடனடியாக அரசுத் தரப்பு அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றிக் கொடுக்க வேண்டும். தாய்க்கு நிகரான சேவையாற்றும் செவிலியர்களுக்கு தக்க தீர்வைக் கொடுக்க வேண்டியது அரசின் கடமை. நியாயமான போராட்டங்களை அடக்க நினைப்பது ஒருபோதும் தீர்வாகாது; அது திசைகளெங்கும் படரும் நெருப்பாகத்தான் மாறும் என்பதை அரசும் அதிகாரிகளும் உடனடியாக உணர்ந்து செவிலியர்களின் கோரிக்கைக்கு செவிமடுக்க வேண்டும்.
இவ்வாறு அந்த அறிக்கையில் செந்தமிழன் சீமான் தெரிவித்துள்ளார்.