முத்துக்குமாரும் முடிவல்ல ; முள்ளிவாய்க்காலும் முடிவல்ல ! – செந்தமிழன் சீமான்

138
ஈழ  விடுதலைக்காக தீக்குளித்து இறந்த முத்துக்குமாரின் நினைவு தினத்தை முன்னிட்டு நாம் தமிழர் கட்சி அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறது. செந்தமிழன் சீமான் கூறியிருப்பதாவது…
வெறி பிடித்த  சிங்கள அரசு நிகழ்த்திய ஈழப் படுகொலைகளையும் இனவெறிக் கொடூரங்களையும் உலகமே வேடிக்கை பார்த்துகொண்டிருந்த நிலையில், ஈழத் துயரங்களைத் தடுக்கக் கோரி  ரத்தமும் சதையுமான தனது உடலை தீக்குத் தின்னக் கொடுத்துப்  போராடியவன் தம்பி கொலுவைநல்லூர் கு.முத்துக்குமார்.   சாலச் சிறந்த பேரறிவாளனாக, பெருங்கனவு கொண்டவனாக, அரசியல் சூழலை அறிந்தவனாக,  அறிவாயுதம் ஏந்தியவனாக அவன் எழுதி வைத்த கடிதம் தான் தமிழகத்தின் உணர்வையே  தட்டி எழுப்பியது. இளைய சக்திகளை ஒன்று திரட்டி இனத்துக்காக போராடவைத்தது. தன்னுயிரை பொருட்படுத்தாது இன விடுதலை முழக்கத்தை எழுப்பியபடியே இறந்து போன அந்த வீரதமிழனின் நினைவு நாள்  உணர்வு நெருப்பின்  குறையாமல்  உணர்வெழுச்சி நாளாகும்.
ஈழப்போர் நடந்தபோது கை கட்டி, வாய்மூடி, மௌனம் காத்த அரசியல் அற்பர்கள் இன்றைக்கும் உணர்வு மரத்துபோய் வரும் தேர்தலுக்கான பேரங்களில் மூழ்கிக் கிடக்கிறார்கள்.. பணத்தை வாங்கிகொண்டு கூட்டணிக்கும் சீட்டுக்கும் இடம் கொடுக்கும் கம்பெனிகளாக மாறிவிட்ட கழகங்களுக்கு இனத்துக்காக இறந்து போன மாவீரன் முத்துகுமாரின் உணர்வுகள் புரியாது.  கொள்கைகளை மூட்டை கட்டி வைத்துவிட்டு கொடிகளை மூட்டை கட்டும் முழுநேர நிறுவனங்கலாகிவிட்ட நகழகங்களுக்கு பாடம் புகட்டும் புரட்சி நாளாக தம்பி முத்துகுமாரின் நினைவு நாளை  அனைவரும் நெஞ்சில் சுமக்க வேண்டும். ஊழல், லஞ்சம்,பசி,பட்டினி, சாதியவர்க்க வேறுபாடுகள் அற்ற சமூகமாக இந்த  மண்ணை மாற்றுவதற்கான உறுதியை நாம் அனைவரும் உள்ளத்தில் ஏற்க வேண்டும்.  முத்துகுமார் என்கிற இளைய புரட்சியாளனின் உடலில் படர்ந்த நெருப்பு நம் ஒவ்வொருவரின் உள்ளத் திரியிலும் உணர்வெழுச்சியோடு அணையாமல் எரிய  வேண்டும். அதுவே இனத்துக்காக தன் இன்னுயிரை மடித்துக் கொண்ட அந்த மாவீரனுக்கு நாம் செலுத்தும் உண்மையான வீரவணக்கம்.
தம்பி முத்துகுமாரின் இறுதி ஊர்வலத்தில் கலந்துகொண்ட ஆயிரக்கணக்கான இளைய தலைமுறையினர் வான் விட்டு சென்ற பணியை எந்நாளும் தொடர்கின்ற வீரர்களாக மாறவேண்டும்.முத்துகுமாரும் முடிவல்ல;  முள்ளிவாய்க்காலும் முடிவல்ல. தம்பி முத்துக்குமார் ஒரு விடுதலை நெருப்பு. அதனை அணையவிடாமல் அடைகாக்க  தமிழனின் பொறுப்பு.’விதைத்தவன் உறங்கினாலும் விதைகள் உறங்குவதில்லை’ என்பதுபோல் தம்பி முத்துக்குமார் மறைந்தாலும் அவன் ஏற்றி வைத்த உணர்வுத்தீ எந்நாளும் கொழுந்துவிட்டு  எரியும். ‘விழுவோம் விழுவோம் விதையாய் விழுவோம். எழுவோம் எழுவோம் விடுதலையாய் எழுவோம்’ எனச் சொன்ன தமிழ் தேசிய தலைவர் மேதகு பிரபாகரனின் வாக்குக்கு தக்கபடி  எத்தகைய இழப்புகள் வந்தாலும் எதிலும் சோர்ந்து போகாமல் வல்லமை கொண்ட சக்தியாக நாம் மாற   வேண்டும்.தம்பி முத்துகுமார் போற்றும் இன்றைய நாளில் நாம் தமிழர் கட்சியின் இளைஞர் பாசறை  சூளூரில் வீரவணக்க நிகழ்வை மாபெரும் பொதுகூட்டமாக நடத்த இருக்கிறது.ஈவு இரக்கமற்று ஈழக் கொடூரங்களை வேடிக்கைப்  பார்த்த உலக வல்லாதிக்க நாடுகளையே உறைய வைத்த தம்பி முத்துகுமாரின் மரணத்துக்கு வீரவணக்கம் செலுத்தியும், அவன் உணர்வுகளை நெஞ்சத் தசைகளில் பதித்தும் நாம் வீறு கொள்ள வேண்டும். அறிவாயுதம் ஏந்திய அந்த இளைய தமிழ்ப் பிள்ளையின் தியாகம் தமிழ் வாழும் காலம் வரை மறையாமல் வாழும்.தமிழ்த் தேசியத்துக்கு எதிரான அத்தனை சதிகளும் அவன் எழுப்பிய தீயால் விரைவிலேயே வீழும்.
இவ்வாறு அந்த அறிக்கையில் செந்தமிழன் சீமான் தெரிவித்து உள்ளார்.
முந்தைய செய்திநாம் தமிழர் காஞ்சி மேற்கு மாவட்ட இளைஞர் பாசறை சார்பாக இன்று (29.01.2014) அண்ணன் முத்துக்குமாருக்கு வீரவணக்கம் செலுத்தினர்.
அடுத்த செய்திகன்யாகுமாரி மாவட்டம், கிள்ளியூர் ஒன்றியம், கருங்கல் பேரூராட்சி இருகலாம்பாடூ கிளை திறப்பு