யானை மலை மீது ஏறி கொமன்வெல்த் மாநாட்டுக்கு எதிராக நாம் தமிழர் கட்சி போராட்டம்!

326

இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா கலந்துகொள்ளக்கூடாது என மத்திய அரசை வலியுறுத்தி நாம் தமிழர் கட்சியினர் மதுரை யானை மலை மீதேறி நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். இலங்கைத்தமிழர் மீது அந்நாட்டு ராணுவம் கொடூரத் தாக்குதல் நடத்தியதைக் கண்டித்தும், சர்வதேச போர்க் குற்றவாளியாக ராஜபட்சேவை அறிவிக்கும் வகையில் இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டை இந்திய அரசு புறக்கணிக்கவேண்டும் என்ற கோரிக்கைகளை எழுப்பினர்.

நாம் தமிழர் கட்சியின் ஊரக நிர்வாகிகளான சுந்தரராஜன்பட்டி கருப்பையா, கார்த்திக், மருது, மகாதேவன், சுரேஷ், முருகன் ஆகியோர் திடீரென கட்சிக் கொடியுடன் யானை மலை மீதேறினர். பின்னர் காமன்வெல்த் மாநாட்டை புறக்கணிக்கக் கோரி மத்திய அரசை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

தகவலறிந்ததும், யா.ஒத்தக்கடை போலீஸார் விரைந்து சென்று மலை மீது இருந்தவர்களை கீழே இறங்கக்கோரி பேச்சுவார்த்தை நடத்தினர். அதை ஏற்று கீழே நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் இறங்கிவந்தனர். அவர்களை கைது செய்துள்ளதாக போலீஸார் தெரிவித்தனர்.