பேரறிவாளனின் மனுவை தள்ளுபடி செய்யுமாறு சி.பி.ஐ பதில் மனுவை தடா கோர்ட்டில் தாக்கல் செய்துள்ளது. முன்னாள் இந்திய பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட பேரறிவாளன், �ராஜீவ் படுகொலையில் விடுபட்டுப் போன விவகாரங்களையும் விசாரிக்க வேண்டும் என்று தடா கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.
அந்த மனுவில் அவர் மேலும், கொலை வழக்கில் சதித்திட்டத்தில் ஈடுபட்ட சிலரை கண்டுபிடிப்பதற்கு மேல் விசாரணை நடத்தப்பட வேண்டியது அவசியம். வெளிநாட்டினரின் பின்னணியும் இருக்கிறதா என்பதை சரியாக விசாரிக்கவில்லை.
எனவே, இந்த விஷயத்தில் மேல் விசாரணை தேவை. இதுவரை இரண்டு விசாரணை முகமைகளும் நடத்திய விசாரணையின் ஆவணங்கள் அனைத்தும் நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு வரப்பட வேண்டும் என்று கூறியிருந்தார். இந்த மனுவுக்கு பதில் மனுவை தடா கோர்ட்டில் சி.பி.ஐ. தாக்கல் செய்துள்ளது. விசாரணையை கோர்ட் கண்காணிக்குமாறு பேரறிவாளன் மனு செய்ய முடியாது. எனவே பேரறிவாளனின் மனு விசாரணைக்கு ஏற்க கூடியதல்ல என மனுவை தள்ளுபடி செய்ய சி.பி.ஐ. கோரிக்கை விடுத்துள்ளது.