தமிழர் தாயகத்தில் ஊடகவியலாளர்களுக்கு தொடரும் அச்சுறுத்தல்கள் – சர்வதேச நாடுகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்: ஊடக இல்லம்

45

தமிழர் தாயகத்தில் ஊடகவியலாளர்கள் தொடர்ந்தும் அச்சுறுத்தப்பட்டு வருகின்றமையை தடுத்து நிறுத்த சர்வதேச நாடுகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஊடகஇல்லம் அவசர வேண்டுகோள் விடுத்துள்ளது.

யாழ்.குடாநாட்டிலிருந்து வெளிவருகின்ற தினக்குரல் பத்திரிகையின் செய்தியாளர்களுக்கு சிறிலங்காவின் குற்றத் தடுப்பு புலனாய்வுக் காவல்துறையினர் அச்சுறுத்தல் விடுத்து வருகின்றமை தொடர்பாக விடுத்துள்ள அறிக்கையிலேயே ஊடகஇல்லம் மேற்படி கோரிக்கையை முன்வைத்துள்ளது.

ஊடகவியலாளர்களுக்கு அச்சுறுத்தல் விடுப்பதன் மூலம் சிறிலங்கா அரசாங்கமானது மக்கள் விரோத ஆட்சியை நடத்தி வருகின்றமை அம்பலமாகின்றது. மக்கள் விரோத செயற்பாடுகள் வெளியே சென்றுவிடும் என்று அஞ்சுவதாலேயே தனது புலனாய்வுத் துறையினர் மூலமாக சிறிலங்கா அரசாங்கம் ஊடகவியலாளர்களை அச்சுறுத்தி வருகின்றது என்றும் ஊடகஇல்லம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் பிரான்ஸ் நாட்டைத் தளமாகக் கொண்டியங்கும் ஊடகஇல்லம் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

தமிழர் தாயகத்ததில் உள்ள எட்டு மாவட்டங்களுடனும் ஒப்பிடுகையில் யாழ்.மாவட்டத்தில் மட்டுமே மூன்று பத்திரிகைகள் வெளிவந்துகொண்டிருக்கின்றன. இதில் உதயன் பத்திரிகையானது 25 வருடகால பாரம்பரியத்தையுடையது. அதேபோன்று தேசியப் பத்திரிகையின் பிராந்தியப் பதிப்பாக யாழ்ப்பாணத்தில் தினக்குரல் பத்திரிகை வெளிவந்துகொண்டிருக்கின்றது.

மேலும் வலம்புரி என்ற பத்திரிகையும் வெளிவருகின்றது. இவற்றில் தினக்குரல் பத்திரிகையானது வடமாகாணத்தில் பல லட்சக்கணக்கான வாசகர்களைத் தன்னகத்தே கொண்டிருக்கின்றது. இந்தப் பத்திரிகையில் பணியாற்றுகின்ற இரண்டு ஊடகவியலாளர்களுக்கு சிறிலங்கா புலனாய்வுத் துறையினரால் அச்சுறுத்தல்  விடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாண அலுவலகத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருக்கின்றது. இது குறித்து ஊடகஇல்லம் தனது கவனத்தைச் செலுத்தியுள்ளது.

ஊடகவியலாளர்கள் பணியாற்றுவதற்கு அச்சமான நாடுகளில் சிறிலங்காவும் முதன்மை இடத்தை வகிக்கின்றது. கடந்த காலங்களில் இங்கு பல ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர். பலர் காணாமற்போயுள்ளனர். பல ஊடகவியலாளர்கள் நாட்டைவிட்டே வெளியேறியுள்ளனர். குறிப்பாக சிறிலங்கா ஆட்சியாளர்களின் நேரடி அச்சுறுத்தல்கள் காரணமாக தென்னிலங்கை சிங்கள ஊடகவியலாளர்கள் சிலரே அண்மையில் நாட்டை விட்டு வெளியேறியிருக்கின்றனர்.

யாழ்ப்பாணத்தில் உதயன் பத்திரிகையின் சில செய்தியாளர்கள் கொலை செய்யப்பட்டிருக்கின்றனர். தினக்குரல் பத்திரிகையின் செய்தியாளர்களும் காணாமற்போயிருக்கின்றனர், தாக்கப்பட்டிருக்கின்றனர். இதன் பணியாளர்கள் கொலை செய்யப்பட்டிருக்கின்றனர். அது போன்று வலம்புரி பத்திரிகையின் செய்தியாளர்களும் தாக்கப்பட்டிருக்கின்றனர்.

யாழ்ப்பாணத்தில் அமரர் நிமலராஜனுடன் ஆரம்பமாகிய ஊடகவியலாளர்களைக் குறிவைக்கும் படலம் இன்று வரை நீண்டு செல்கின்றது. நிமலராஜனைக் கொலை செய்தவர்களுக்கு எதிராக இன்றுவரை நடவடிகை எடுக்கப்படவில்லை. ஏனெனில் அவர்கள் சிறீலங்கா அரசாங்கத்தின் முக்கிய புள்ளிகளாக இருக்கின்றனர். இவ்வாறான பின்னணியிலேயே தற்போது தினக்குரல் பத்திரிகையின் செய்தியாளர்கள் சிறிலங்கா புலனாய்வுத் துறையினரால் குறி வைக்கப்பட்டிருக்கின்றனர்.

யாழ்.குடாநாட்டில் ஊடகவியலாளர்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படும் போதெல்லாம் அதற்கு எதிராக ஊடகஇல்லம் குரல் கொடுத்து வருகின்றது. எனவே, குடாநாட்டு ஊடகவியலாளர்களுக்கு ஏற்பட்டுள்ள இந்த அச்சுறுத்தல் தொடர்பில் உடனடியாகத் தலையிட்டு நடவடிக்கை எடுக்குமாறு நாம் சர்வதேச சமூகத்தைக் கோருகின்றோம்.

குறிப்பாக சிறிலங்கா அரசாங்கமும் அதன் புலனாய்வுத் துறையும் தமிழர் தாயகம் உட்பட நாடு பூராகவும் உள்ள ஊடகவியலாளர்களுக்கு எதிராக மேற்கொண்டு வருகின்ற அடக்குமுறைகள், அச்சுறுத்தல்கள் தொடர்பாக சர்வதேச ஊடக அமைப்புகளும் சர்வதேச மனித உரிமை அமைப்புகளும் உடனடியாகத் தலையிட வேண்டுமென்று ஊடகஇல்லம் வலியுறுத்துகின்றது.

“உண்மையின் முன்னால் நடுநிலைமை என்பது இல்லை”

ஊடகஇல்லம்

Maison des Medias
Media House
22 Rue Perdonnet
75010 Paris 
France
Tel:  00 33 (0) 1 4005 9515
Fax: 00 33 (0) 1 4005 9516
முந்தைய செய்திகூடங்குளம் அணு உலைக்கெதிரான மக்கள் கூட்டமைப்பு சார்பில் பல்வேறு கட்சிகள் இனைந்து சென்னை வள்ளுவர் கோட்டத்தில் கண்டன ஆர்ப்பாட்டம்!
அடுத்த செய்திஇலங்கையில் காமன்வெல்த் – எதிர்ப்பியக்கம் சார்பில் சாகும் வறை உண்ணா நிலைப் போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ள தோழர் தியாகுவை அண்ணன் சீமான் சந்தித்து ஆதரவு தெரிவித்தார்.