இலங்கைக்கு போர்க்கப்பல்கள் விற்பதைத் தடை செய்யக்கோரி மதுரை ஐகோர்ட் கிளையில் வழக்கு!

17

இலங்கைக்கு போர்க்கப்பல்களை விற்கும் இந்திய அரசின் முடிவிற்கு தடை கோரி, மதுரை ஐகோர்ட் கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. வக்கீல் ஸ்டாலின் தாக்கல் செய்த பொதுநல மனு: இந்திய அரசு, 2 போர்க்கப்பல்களை இலங்கைக்கு விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளது. இதை மத்திய இணை அமைச்சர் நாராயணசாமி உறுதிப்படுத்தியுள்ளார். இது, தமிழகத்தில் இலங்கை அரசின் மீதான எதிர்ப்புணர்வை அலட்சியப்படுத்தும் வகையில் உள்ளது. இக்கப்பல்களை இலங்கை கடற்படை, இந்திய மீனவர்களுக்கு எதிராக பயன்படுத்தும்.

இலங்கையை நட்புநாடு என்று கூறக்கூடாது என, தமிழக அரசு சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. தமிழகத்தில், இலங்கை ராணுவத்தினர் பயிற்சி பெற எதிர்ப்பு எழுந்தது. இதனால், அவர்களை அரசு திருப்பி அனுப்பியது. இலங்கை கடற்படை 97 இந்திய மீனவர்களை கைது செய்து, சிறையில் அடைந்துள்ளது. இதுவரை ராமேஸ்வரம் மீனவர்கள் 500 பேரை கொலை செய்துள்ளது. போர்க்கப்பல்களை விற்பனை செய்தால், இலங்கையின் செயல்பாட்டிற்கு ஒத்துழைப்பு அளிப்பதாக அமையும். போர்க்கப்பல்கள் விற்பனை செய்யும் முடிவை கைவிட வலியுறுத்தி மத்திய கேபினட் செயலாளர், தமிழக தலைமைச் செயலாளருக்கு மனு அளித்தேன். இலங்கைக்கு போர்க்கப்பல்களை விற்பனை செய்ய தடை விதிக்க வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார். மனு விரைவில் விசாரணைக்கு வருகிறது.