வடக்கில் முதலீடு செய்வதற்கு புலம்பெயர் தமிழ் மக்கள் முன்வர வேண்டும்: விக்னேஸ்வரன்

11

வடக்கு மாகாணத்தை சிறந்த பூமியாக கட்டியெழுப்ப உறுதி பூண்டுள்ளதாக தெரிவித்துள்ள வடக்கு மாகாண முதலமைச்சராக பொறுப்பேற்கவுள்ள சி.வி. விக்னேஸ்வரன், வடக்கில் பல துறைகளிலும் முதலீடு செய்வதற்கு புலம்பெயர் தமிழ் மக்கள் முன்வர வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

நாங்கள் கேட்டதை மக்கள் தந்து விட்டார்கள். இப்போது மக்கள் கேட்டதை நாங்கள் கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றோம். அதற்காக கடுமையாக உழைப்போம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு கிடைத்த மாபெரும் மக்கள் ஆணையை ஏற்று அந்த ஆணைக்கு ஏற்ப செயற்படுவதே இனி எங்கள் பணி எனவும் அவர் கூறினார்.
வடக்கு மாகாண சபை தேர்தல் வெற்றி குறித்து கருத்து தெரிவிக்கையிலேயே முன்னாள் உச்ச நீதின்ற நீதியரசரும் வட மாகாண சபை முதலமைச்சராக பொறுப்பேற்கவுள்ளவருமான சி.வி. விக்னேஸ்வரன் இவ்வாறு கூறினார்.

அவர் இது தொடர்பாக மேலும் தெரிவிக்கையில்,

நீண்ட இடைவெளிக்கு பின்னர் தங்களது மாகாண சபை பிரதிநிதிகளை தெரிவிவுமக்களுக்கு கிடைத்த சந்தர்ப்பதைப் பயன்படுத்தி தங்களது உள்ளார்ந்த விருப்பங்களை மக்கள் வெளிப்படுத்தியுள்ளனர். இந்த வெற்றியின் மூலம் மக்கள் எங்களது தேர்தல் அறிக்கையை மக்கள் ஏற்றுக் கொண்டதாகவே ஏற்றுக் கொள்கின்றோம். அதில் கூறியிருப்பவற்றை முனைந்து செய்வோம்.

நாங்கள் கேட்டதை மக்கள் தந்துவிட்டனர். இப்போது மக்கள் கேட்டதை நாங்கள் கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றோம். மக்கள் தங்கள் பிரச்சினைகளை எங்கள் தலைமேல் போட்டுவிட்டனர். எப்படியாவது மக்களின் சுமையை குறைப்பதற்கு இயலுமான விடயங்களை  செய்து கொண்டுபோவோம். எல்லோருடைய ஒத்துழைப்பும் இருக்க வேண்டும். எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது. எனவே எங்களுக்கு கொஞ்சம் சந்தர்ப்பம் தாருங்கள். எங்கள் கடமைகளை சரியாக செய்து கொண்டு போவோம்.

தேர்தலில் வன்முறைச் சம்பவங்கள் கட்டவிழத்து விடப்பட்டபோதும் மக்களுடைய எதிர்பார்ப்பும் மனோதிடமும் எங்களை வியக்க வைக்கின்றன. அவர்களின் தைரியம் மலைக்கச் செய்கின்றது. எவ்வளவுக்கு எவ்வளவு எங்களுக்கு எதிராக பலவிதமான வன்முறைச் செயல்கள் மேற்கொள்ளப்பட்டதோடு அதற்கு எதிராக மக்கள் மனோதிடத்தோடு தங்கள் எண்ணங்களை பிரதிபலித்ததுள்ளனர்.

மக்களின் செயற்பாடுகள் எங்களுக்கு பரமதிருப்பதியைத் தந்துள்ளது. அத்தோடு மக்களின் மனோநிலையும் எங்களுக்கு புரிகின்றது. அடுத்து எங்களுடைய கடமையையும் செய்யும் கட்டாயம் எங்களை வந்தடைந்துள்ளது.
வாக்களிப்பு வீதம் தொடர்பாக மக்களிடம் நாம் தொடர்ச்சியாக கூறி வந்தோம். இதுவரை காலமும் வாக்களிப்பில் சிரத்தை காட்டாத நிலைமை மாற வேண்டும் என்று கூறினோம். எல்லோரும் ஒரு அலகின் அங்கத்துவர்கள் என்ற வகையில் கொண்டு செல்வதென்றால் மக்களிடம் ஏகோபித்த ஆதரவை கோரினோம். அது மக்களின் மனதை ஏதோ ஒரு விதத்தில் ஈர்ப்பை ஏற்படுத்தியுள்ளது. எங்களது கோரிக்கை ஏற்று, நாங்கள் கேட்டதை தந்துள்ளனர்.
தென்னிலங்கை அரசியல்வாதிகளும் இனவாதிகளும் எங்களுக்கு ஏதாவது ஒன்றைத் தரக்கூடாது என்று நினைத்தால் எங்களுக்கு புலிப்பட்டம் கட்டிவிடுகின்றனர்.

தமிழ் மக்களுடைய பிரச்சினை தமிழீழ விடுதலைப்புலிகள் வருவதற்கு முன்னவே வந்த பிரச்சினை. அந்தப் பிரச்சினைகள் இன்றும் தொடர்ந்த வண்ணமே உள்ள பிரச்சினை. இவற்றை ஒரு காரணமாக வைத்து அரசாங்கம் தமிழர்களை புலிப்பட்டம் கட்டுவது வழமையாகி விட்டது. உலகம் அதை ஏற்றுக் கொள்ளாது.

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம் பிள்ளையைக் கூட அவர் தமிழர் என்பதால் பயங்கரவாதி என்று அரசாங்கம் கதைக்கின்றது. இது உலகத்திற்கு விளங்கிட்டது. எல்லாரையும் கொஞ்சக்காலம் ஏமாற்றலாம். ஆனால் தொடர்ந்து ஏமாற்ற முடியாது என்பதை அரசாங்கம் புரிந்து கொள்ள வேண்டும்.
தபால் மூல வாக்களிப்பு மூலம் அரசாங்க ஊழியர்களும் நல்ல செய்தியைச் சொல்லியுள்ளனர். கட்டாயப் படுத்தியதனாலேயே அரசாங்க ஊழியர்கள் பலவற்றையும் செய்ய வேண்டியுள்ளது என்பதை நாங்கள் புரிந்து கொள்கின்றோம். கட்டாயத்தின் பெயரில் பதவியில் உள்ளவர்கள் அரசாங்க உத்தியோகத்தர்களை பிழையான நடவடிக்கைகளில் ஈடுபடவும் வைத்துள்ளனர். அவர்களின் ஆளுநர் மேஜர் ஜெனரல் சந்திரசிறியும் ஒருவர்.

அரசாங்கத்தினால்  கட்டாயத்தின் பெயரில் திணிக்கப்படும் விடயங்களை அகற்றவும் திணிக்கவும் அரசாங்க உத்தியோகத்தர்கள் இந்த தேர்தலை பயன்படுத்தியுள்ளனர். எங்களுக்கு சார்பான வாக்கு என்பதை விட தங்களை கட்டாயப்படுத்தினவர்களுக்கு எதிரான வாக்காகவே அவர்கள் இதனைச் செய்துள்ளனர். இந்த தேர்தல் எங்கள் எல்லோரையும் ஒன்று சேர்த்துள்ளது. இது ஒரு மிகப்பெரிய வெற்றி. வரலாற்றில் பிரிந்திருந்த நாம் ஒரு அலகாக ஜனநாயக முறைப்படி ஒற்றுமையாக்கப்பட்டுள்ளோம். இதிலிருந்து முன்னேறும்போது எமது ஒற்றுமை வரலாற்றில் பிரதிபலிக்க வேண்டும்.

மாகாண சபையில் எங்களுக்கு எதிர்கட்சியாக வருகின்ற ஒரு சிலரிடமும் எங்களுடன் இணைந்து செயலாற்றுங்கள் என்று கோருகின்றோம். அரசாங்கத்தின் உதவிகளும் எங்களுக்கு தேவை. ஆனால் எங்களுடைய தனித்துவத்தை நாங்கள் பேண வேண்டும். எங்களது ஒற்றுமைக்கு முன்னுரிமை அளித்து முன்னேற உதவி புரிய வேண்டும்.

தேர்தல் முடிவுகள் வந்தவுடனேயே பல தொலைபேசி அழைப்பு புலம்பெயர் மக்களிடம் இருந்து வந்தன. எங்களுக்கு உதவி செய்வதாக பல தமிழ் கோடிஸ்வரர்கள் வாக்குறுதி அளித்துள்ளனர். உதாணமாக ஒருவர் வர்த்தக துறையில் முதலீடு செய்வதாக கூறியுள்ளார். புலம்பெயர்ந்தவர்களின் பங்களிப்பை நாங்கள் எதிர்பார்கின்றோம். கட்டாயம் எங்களுக்கு உதவியாக இருப்பார்கள் என்றும் எதிர்பார்க்கின்றோம்.
அரசாங்கத்திடமிருந்து எதிர்ப்புகள் இருக்குமோ தெரியாது. ஆனால் அந்த தடைகளைத் தாண்ட மக்களின் ஆதவை வேண்டி நிற்கின்றோம்.

முன்னைய தேர்தல்கள் மிக வித்தியாசமானவை. பாராளுமன்ற தேர்தல் என்றால் அதில் வெல்பவர்களுக்கு பாராளுமன்றத்தில் தான் அதிகமான வேலை உள்ளது. மக்களோடு இங்கே நிற்க வேண்டிய சந்தர்ப்பம் குறைந்திருக்க கூடும். அந்த குறைபாடு மாகாண சபையில் இருக்காது. கொழுப்பில் உள்ள இருந்த நான் இனி இங்கேயே உங்களுடனேயே இருக்கப்போகின்றேன்.

நாங்கள் தேர்தலில் நிறுத்தியவர்கள் பல இந்த இடங்களையே சேர்ந்தவர்கள். அவர்கள் இங்கே தான் இருக்கப்போகின்றனர். இங்கிருந்து மக்களோடு மக்களாக பணியாற்றுவார்கள் எனவும் வடக்கு மாகாண சபை முதலமைச்சராக பொறுப்பேற்றவுள்ள விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

முந்தைய செய்திநாங்கள் உரிமைக்காக போரடிய இனம்என்று பன்னாட்டிற்கு தெரிவித்துகொள்கின்றேன்-அனந்தி சசிதரன்!
அடுத்த செய்திநாம் தமிழர் கட்சி – மாணவர் பாசறையின் அடுத்தக்கட்ட செயல்திட்டங்கள் மற்றும் நகர்வுகள்: