தேசியத் தலைவரின் மகன் பாலச்சந்திரனை, சிறிலங்கா இராணுவம் படுகொலை செய்யவில்லையாம் ! மகிந்தவின் புலம்பல்

37

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் மகன் பாலச்சந்திரனை, சிறிலங்கா இராணுவம் படுகொலை செய்யத்தான குற்றச்சாட்டை சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச நிராகரித்துள்ளார்.  இந்தியாவின் ‘தி இந்து‘ நாளேட்டுக்கு வழங்கியுள்ள தனிப்பட்ட செவ்வி ஒன்றில், அவர்,

“அவ்வாறு நடந்திருந்தால், அது எனக்குத் தெரிந்திருக்கும். அது தெளிவாக உள்ளது.

ஆயுதப்படையினர் எவராவது இதைச் செய்திருந்தால், அதற்கு நான் பொறுப்பேற்க வேண்டும்.

நாம் அதை முற்றாகவே நிராகரிக்கிறோம். அவ்வாறு நடந்திருக்க முடியாது.

நாம் வெறுமனே ஒரு பக்கத்தை மட்டும் பார்க்கக் கூடாது.

ஒரு குழுவினதும், சிறிலங்காவின் எதிர்க்கட்சியினதும் கருத்தை மட்டும் கேட்கக் கூடாது.

அவர்கள், அரபு எழுச்சியை இந்த நாட்டில் தோற்றுவிக்க, ஏனைய நாடுகளின் ஆதவைப் பெற முனைகிறார்கள். அது சிறிலங்காவில் நடக்கப் போவதில்லை.

வடக்கு மாகாணசபைத் தேர்தலை செப்ரெம்பரில் நடத்தவுள்ளோம்.

அதற்காகவே ஏனைய மாகாணசபைத் தேர்தல்களையும் கூட பிற்போட்டுள்ளோம்.

வடக்கு மாகாணசபைத் தேர்தலை நிறுத்தி வைக்கும் எண்ணம் இல்லை.

அதைச் செய்து விமர்சனங்களை எதிர்கொள்ள விரும்பவில்லை.

ஏனைய எட்டு மாகாணசபைகள் அனுபவிக்கும் அதிகாரங்களை விட அதிகமாகவும் இல்லாத குறைவாகவும் இல்லாத அதிகாரங்களை வடக்கு மாகாணசபையும் கொண்டிருக்கும்.

போர் முடிவுக்கு வந்த பின்னர், மூன்று ஆண்டுகளில் யாழ்ப்பாணத்துக்கு எல்லா உட்கட்டமைப்பு வசதிகளும் வழங்கப்பட்டுள்ளன.

மூன்று ஆண்டுகளில் இதைச் செய்தது யார்?

இந்தியா கூட, காஸ்மீர் விவகாரத்தில் ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையால், தொல்லைப்படுத்தப்பட்டது.

சிறிலங்கா ஒரு கைப்பந்து போல உள்ளது.

தமது பாவங்களை மறைத்துக் கொள்ள ஒவ்வொருவரும் அதனை திருப்பி அடிக்கிறார்கள்.

தமிழ்க்கட்சிகளின் குடைபோல உள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, நாடாளுமன்றத் தெரிவுக்குழுவில் இணைந்து கொள்ளும் வரை, தமிழர் பிரச்சினைக்கான அரசியல் தீர்வில் முன்னேற்றம் ஏற்படாது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இல்லாமல், என்னால் எதையும் செய்ய முடியாது.

முன்னர், எல்லாத் தலைவர்களும் தமது தீர்வுகளை மேல் இருந்து அளித்தனர். அவை தோல்வியில் முடிந்தன.

13வது திருத்தமும் தோற்றுப் போய் விட்டது. எல்லாமே தோல்வியில் முடிந்தன.

திட்டத்தை பெரும்பான்மை சமூகத்தின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தம்வசம் எடுத்துக் கொள்வார்கள் என்ற அச்சம் தேவையற்றது.

சில தனிநபர்கள் மற்றும் அரசாங்கத்தில் உள்ள கட்சிகள் அதை செய்வதற்கு அனுமதிக்கப் போவதில்லை.

ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில், இந்தியாவின் ஆதரவைப் பெறுவது குறித்து நான் இந்தியாவுடன் கலந்துரையாடவில்லை.

ஒரு அயல் நாடு என்ற வகையில், சிறிலங்காவின் நட்பு நாடு என்ற வகையில், இந்தியாவுக்குத் தனது கடமை என்னவென்று தெரிய வேண்டும்.

இந்தியாவுக்கு நான் கட்டளையிட முடியாது.

பொறுப்புக்கூறுவதற்கு சிறிலங்கா நடவடிக்கை எடுத்து வருகிறது.

நாம் வழக்குகளைப் பதிவு செய்துள்ளோம். நாம் தண்டனைகளை வழங்குவோம்.

ஆனால் இதை இந்த நாட்டின் சட்டங்களின்படி தான், செய்ய முடியும்.

நான், 14 ஆயிரம் விடுதலைப் புலிக் கைதிகளை விடுதலை செய்துள்ளேன்.

கொலைகள் போன்ற, தீவிரமான குற்றச்சாட்டுகள் அவர்களுக்கு எதிராகச் சுமத்தப்பட்ட போதும், புனர்வாழ்வு நடைமுறைகளின் பின்னர் அவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

14 ஆயிரம் பேருக்கும் எதிராக நான் வழக்குப் பதிவு செய்தால் என்ன செய்திருக்க முடியும்?

நான் ஒரு பௌத்தன், எமக்கு சகிப்புத்தன்மையும், இருக்கமும் இருக்கிறது.

இன்னமும் விடுதலைப் புலிகள் சிலர் சிறைகளில் உள்ளனர்.

அவர்களையும் விடுதலை செய்யும் வழிகள் குறித்து பரிசீலித்து வருகிறோம்.

ஜெனிவாவில் 2012 இல் நடைபெற்ற வாக்கெடுப்பின் பின்னர், இந்தியாவுடனான சிறிலங்காவில் உறவு நன்றாகவே உள்ளது.

இந்தியாவுடன் நல்லுறவு உள்ளது என்பதைக் காட்ட பல சம்பவங்கள் உள்ளன.

எமது கடலில் மீன்பிடிக்கும் இந்திய மீனவர்களை நாம் தடுத்து வைக்கவில்லை.

ஆயிரக்கணக்கான மீனவர்கள் எல்லை கடந்து வந்து மீன்பிடிக்கிறார்கள்.

பல இந்திய சிறைக்கைதிகளை அவர்களின் நாட்டுக்கே அனுப்பி வைத்துள்ளோம்.

சிறிலங்கா யாத்திரிகர்கள் திருப்பி அனுப்பப்பட்ட சில நிகழ்வுகள், தமிழ்நாட்டில் நடந்திருந்த போதிலும், சிறிலங்காவில் அதனுடன் தொடர்புபட்ட எந்தவொரு சம்பவத்தையும் இந்தியர்கள் எதிர்கொள்ளவில்லை.

சிறிலங்காவுடன் இந்தியா மோதிக் கொள்வதை விரும்பும் மக்கள் அங்கு இருப்பதை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது.

இவையெல்லாம் அரசியல் நோக்கம் கொண்டவை” என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.

முந்தைய செய்திஇலங்­கை­யர்­க­ளுக்­கான புதிய குடி­வ­ரவு முறைமை: கனே­டிய அர­சினால் அறி­முகம்
அடுத்த செய்திசாத்தானின் சகதோழன்! – யுகபாரதி