கூட்டமைப்பின் எதிர்கால செயற்பாடுகளை அவதானித்தே அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் – பொது பல சேனா

15

வட மாகாண சபைத் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பு இலங்கை அரசின் ஒழுங்குப்பத்திரத்திற்கு அமைவாக நடக்கிறதா என்பதை அவதானித்தே தமது அடுத்த கட்ட நடவடிக்கை அமையும் என்று சிங்களக் கடும்போக்குவாத அமைப்பான பொது பல சேனா தெரிவித்துள்ளது. வட மாகாண சபைத் தேர்தலை நடத்தினால் ஆயிரம் பிக்குகள் தீக்குளிப்பார்கள் என்று எச்சரித்திருந்த பொது பல சேனா 13வது திருத்தச் சட்டத்தில் காணி பொலிஸ் அதிகாரங்களை நீக்க வேண்டும் என்றும் கூறி இனவாத ஆர்ப்பாட்டங்களை நடத்தியது. இந்நிலையில் வட மாகாண சபைத் தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு வெற்றி பெற்றதன் பின்னர் மௌனம் காத்து வந்த பொது பல சேனா தற்பொழுது இந்தியா அல்லது சர்வதேசத்தின் ஒழுங்குப் பத்திரத்திற்கு அமைவாக கூட்டமைப்பு செயற்படுகிறதா என்று அவதானிப்பதாக தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் கருத்துத் தெரிவித்த பொது பல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலபொட அத்தே ஞானசார தேரர் கூட்டமைப்பு மூன்றில் இரண்டு பெரும்பான்மையை கைப்பற்றும் என்பது தாம் முன்பே அறிந்ததே என்று குறிப்பிட்டார். தேர்தல் அறிவிக்கப்பட்டது முதல் தமிழ் தேசியக் கூட்டமைப்பு இனவாதத்தை முதன்மைப்படுத்தியே தனது பிரசார நடவடிக்கைகளில் ஈடுபட்டது என்றும் இனவாதத்தை வைத்தே தேர்தலில் கூட்டமைப்பு வெற்றி பெற்றது என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

இந்த அடிப்படையில் கூட்டமைப்பின் எதிர்காலச் செயற்பாடுகளை வைத்தே தமது அமைப்பின் அடுத்த கட்ட நடவடிக்கைகள் அமையும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

முந்தைய செய்திதமிழீழ விடுதலைப்போரின் தொடர்ச்சியை யாரும் நிறுத்திவிட முடியாது: – காசியானந்தன்!
அடுத்த செய்திநவநீதம்பிள்ளையின் அறிக்கையை இலங்கை நிராகரிப்பு!