இலங்கையில் நடைபெறவுள்ள பொதுநலவாய மாநாட்டில் இந்தியா பங்கேற்க வேண்டும் – சீ.வி.விக்னேஸ்வரன்

90

இலங்கையில் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகள் மாநாட்டில் இந்தியா பங்கேற்க வேண்டும் என்று வட மாகாண சபைக்கான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். தமிழக கட்சிகள் இந்த மாநாட்டில் இந்தியா பங்கேற்கக்கூடாது என்று வலியுறுத்தி வருகின்ற நிலையில் விக்னேஸ்வரன் தமது கருத்தை டைம்ஸ் ஒப் இந்தியாவுக்கு தெரிவித்துள்ளார். தாம் மாநாட்டு புறக்கணிப்பை ஏற்றுக்கொள்ளவில்லை என்று விக்னேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார். இலங்கை அரசாங்கத்துக்கு இதனை செய்ய வேண்டும் என்று தமிழர்கள் வலியுறுத்த வேண்டும். இதற்கு பொதுநலவாய நாடுகள் ஒரு அரங்கமாக இருக்கும். ஏற்கனவே தேர்தல்களில் இருந்து ஒதுங்கியிருந்தமையால் கிழக்கு மாகாணத்தை தமிழர்கள் இழந்துள்ளார்கள்.

எனவே எதிலும் ஒதுங்கியிருக்காது இணைந்திருக்கும் போது விடயங்களை சாதிக்கமுடியும் என்று விக்கினேஸ்வரன் சுட்டிக்காட்டியுள்ளார். தாம் இந்த விடயங்களை ஏனைய அரசியல்வாதிகளை போல பார்க்கவில்லை என்று குறிப்பிட்டுள்ள விக்னேஸ்வரன் தமிழகத்தின் உதவி இலங்கை தமிழர்களுக்கு அரசியல் ரீதியாக தேவை என்று தெரிவித்துள்ளார். நாளை நடைபெறவுள்ள மாகாணசபை தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு அதிகப்படியான ஆசனங்களை பெறும் என்று நம்பிக்கை வெளியிட்டுள்ள விக்னேஸ்வரன் எனினும் இராணுவம் வாக்காளர்களை வாக்களிக்க விடாமல் தடுக்கும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

வடக்கு மாகாணசபைக்கு எதிராக வழக்கு தாக்கல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. எனினும் வாக்காளர்கள் 90 வீதமானோர் தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் இருப்பதாக விக்னேஸ்வரன் கூறினார். போரில் கணவர்மாரை இழந்தவர்கள் மற்றும் இடம்பெயர்ந்தோர் தொடர்பில் இன்னும் உரிய ஏற்பாடுகளை அரசாங்கம் மேற்கொள்ளவில்லை. இந்தநிலையில் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனம் பிரிவினையை கோருவதாக வெளியான தகவல் அரசாங்கத்தினால் வீணாக உருவாக்கப்பட்டது என்றும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

பிரபாகரன் ஒரு விடுதலை பேராட்ட வீரர். அவரை அரசாங்கமே கொடுமையானவராக கருதுகிறது. இந்தநிலையில் பிரித்தானிய ஆட்சிக்காலத்தில் குற்றவாளிகளாக கருதப்பட்ட கெப்பிட்டிபொல திஸ்ஸவேயின் பெயரில் இலங்கையில் வீதிகளுக்கு பெயரிடப்பட்டமையையும் விக்னேஸவரன் சுட்டிக்காட்டியுள்ளார்.

முந்தைய செய்திஎதிர்வரும் 30ஆம் நாள் ஐரோப்பிய ஒன்றிய முன்றலில் மாபெரும் போராட்டம்!
அடுத்த செய்திஐ.நா விசாரணைக் குழுவொன்றை அனுப்ப வேண்டுமென்ற அமெரிக்காவின் கோரிக்கையை இலங்கை நிராகரிப்பு!