யாழில் அனந்தி மீது ஈபிடிபியும் இராணுவமும் இணைந்து பாரிய தாக்குதல்: கபே கண்காணிப்பாளர் உட்பட பலர் படுகாயம்!

104

சுழிபுரத்தில் அமைந்துள்ள அனந்தியின் வீட்டை நடுநிசியில் இராணுவத்தினரும் ஈபிடிபியினரும் வாள், கத்திகள், துப்பாக்கிகள் சகிதம் சுற்றி வளைத்ததாக அனந்தி தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், ஈபிடிபியினரும் இராணுவத்திரும் தனது வீட்டை சுற்றி வளைத்து தாக்குதல் நடத்தியதாகவும், இதை அறிந்து ஆதரவாளர்களும் நண்பர்களும் அயலவர்களும் விரைந்து வந்ததும் இராணுவத்தினரும் ஈபிடிபியினரும் அங்கிருந்து தப்பிச் சென்று விட்டதாக தெரிவித்துள்ளார். விடயம் அறிந்து வீட்டிற்கு வந்த ஆதரவாளர்கள் அவரை வற்புறுத்தி விட்டில் இருந்து வெளியேற்றி வேறு இடத்திற்கு அனுப்பிய சில நிமிடங்களில் அங்கு மீண்டும் வந்த 40க்கு மேற்பட்ட படையினரும் ஈபிடிபி ஆயுததாரிகளும் ஆதரவாளர்கள் மீது தாக்குதல் நடத்தியதோடு 8க்கு மேற்பட்ட ஆதரவாளர்கள் பாரிய காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர். சில ஆதரவாளர்களுக்கு தலை உடைக்கப்பட்டு, கால் கைகள் முறிந்த நிலையில் இருப்பதாகவும் ஆபத்தான நிலை தொடர்வதாகவும் தெரிவித்த அனந்தி, இந்த தாக்குதலில் வாகனங்களும் சேதப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

அதே வேளை இத் தாக்குதலில் கபே அமைப்பின் யாழ் மாவட்ட கண்காணிப்பாளரும் மனித உரிமைவாதியும், சட்டத்தரணியுமான சுபாஸ் உள்ளிட்ட பலர் காயம் அடைந்துள்ளனர். அதிகாலை 2:10 மணியளவில் சம்பவ இடத்திற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, சுமந்திரன், சரவணபவன், யாழ் மாவட்ட தேர்தல் ஆணையாளர் அச்சுதன் மற்றும் தேர்தல் கண்காணிப்புக் குழுக்களும், ஊடகவியலாளர்களும் ஸ்தலத்தில் இருப்பதாக அனந்தி உறுதிப்படுத்தினார். மேலும் விடிவதற்குள் என்ன நடக்குமோ என அச்சத்துடன் இருப்பதாகவும் அனந்தி தெரிவித்தார்.

எழிலனின் மனைவியை தோற்கடிக்க இராணுவம் கடும் பிரச்சாரம் – போலி வதந்திகள் பரவுகின்றன

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வடமாகாண சபை வேட்பாளர் அனந்திக்கு எதிராக இராணுவத்தினர் பல்வேறு வதந்திகளைப் பரப்பி கடும் தேர்தல் வன்முறைகளில் ஈடுபட்டுள்ளனர். அனந்தியின் கணவரான எழிலன் தடுப்பில் இருந்து இராணுவத்தினரால் விடுவிக்கப்பட்டதாகவும் அதன் அடிப்படையில் அவர் தேர்தலில் இருந்து விலகி விட்டதாகவும் செய்திகள் பரப்பப்பட்டுள்ளன. இதனால் அவருக்கு வாக்களிக்க வேண்டாம் என்றும் இராணுவத்தினர் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

இது தொடர்பாக நாம் அரச உயர் அதிகாரிகள் சிலருடன் பேசியபோது எழிலன் தொடர்பாக எந்தவொரு தகவலும் இல்லையென்றே தெரிவித்தனர். மேலும் அனந்தியின் கணவரான எழிலன் கொலையாளி என்றும் அவருக்கு வாக்களிக்க வேண்டாம் என்றும் இராணுவத்தினர் கடும் பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகின்றனர். இவ்வாறான பிரச்சாரங்கள் தென்மராட்சி மற்றும் யாழ்ப்பாணத்தில் சாவற்கட்டு ஆகிய பகுதிகளில் மிக மோசமாக மேற்கொள்ளப்படுகின்றன.

இதேவேளை அனந்தி தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வெற்றிச் சின்னமான வீட்டுச் சின்னத்தில் முதலாம் இலக்கத்தில் தொடர்ந்தும் போட்டியிடுகின்றார். அதில் எந்த விதமான சந்தேகமும் இல்லையென்று கூட்டமைப்பு உறுதியாக அறிவித்துள்ளது. இதேவேளை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளர் க.வி.விக்கினேஸ்வரனுக்கு எதிராகவும் இராணுவத்தினர் கடும் பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகின்றனர்.

மக்களை குழப்பும் விதத்தில் இராணுவத்தினர் மேற்கொண்டு வரும் பிரச்சாரங்களை கண்டு கொள்ள வேண்டாம் என்றும் தமிழரின் விடுதலைக்காக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கரங்களை தமிழ் மக்கள் பலப்படுத்த வேண்டும் என்றும் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

 

 

 

முந்தைய செய்திஇத்தாலியில் இடம்பெற்ற இலங்கை இனவெறி அரசுக்கெதிரான புகைப்படக் கண்காட்சியும் பரப்புரை நிகழ்வுகளும்!
அடுத்த செய்திஇலங்கையில் நடைபெறவுள்ள மாகாணசபை தேர்தல் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும்: பான் கீ மூன் நம்பிக்கை