உலக நாடுகள் கொடுத்த அழுத்தத்தின் காரணமாக, இலங்கை அரசால் நடத்தப்பட்ட வட மாகாணத் தேர்தலில் தமிழ்த் தேச கூட்டமைப்பிற்கு ஈழத் தமிழ் மக்கள் அளித்துள்ள மாபெரும் வெற்றியானது, தமிழினத்தை இன அழித்தல் செய்த சிங்கள பெளத்த இன வெறி அரசுக்கு தமிழர்கள் புகட்டியுள்ள பாடமாகும்.
இராணுவத்தை பயன்படுத்தி கடும் அச்சுறுத்தல் செய்து, தமிழர்களை வாக்குச் சாவடிக்கு வர விடாமல் செய்து, அதன் மூலம் தாங்கள் விரும்பும் பொம்மை அரசை ஏற்படுத்த ராஜபக்ச அரசு செய்த முயற்சியை துணிந்து வந்து வாக்களித்து தமிழ் மக்கள் முறியடித்துள்ளனர்.
தமிழ்த் தேச கூட்டமைப்பிற்கு வட மாகாண தமிழ் மக்கள் அளித்த இந்த தீர்ப்பை, இலங்கையின் ஒற்றுமைக்கு உட்பட்டு தாங்கள் வாழவும், இலங்கையின் இறையாண்மைக்கு உட்பட்ட ஒரு தீர்வையே அவர்கள் விரும்புவதை வெளிப்படுத்துவதாக கூறினால், அதை விட கடைந்தெடுத்த அரசியல் அயோக்கியத்தனம் எதுவும் இருக்க முடியாது. ஏனெனில் இந்த தேர்தலில் வாக்களித்தவர்களில் அங்கு நடந்த தமிழின அழிப்புப் போரில் தங்கள் கணவன்மாரை இழந்த 50,000 பெண்கள் வாக்களித்துள்ளனர். தங்கள் பிள்ளைகளை போரில் இழந்த, போருக்குப் பின் சிங்கள இராணுவத்தால் கடத்தப்பட்டு இன்று வரை எங்கிருக்கிறார்கள் என்று தெரியாத இளைஞர்களின் பெற்றோர்கள் பல ஆயிரக்கணக்கில் வாக்களித்துள்ளார்கள். சிங்கள இனவெறி இராணுவத்தின் குண்டு வீச்சில் தான் பெற்றெடுத்த பச்சிளங் குழந்தைகளை இழந்த தாய்மார்கள் வாக்களித்துள்ளார்கள். தாங்கள் வாழ்ந்த இடங்களை அபகரித்து அங்கு சிங்கள இராணுவ முகாம்களை ஏற்படுத்திய அரசின் முடிவால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் வாக்களித்துள்ளார்கள். இவர்களின் வாக்குதான் சிங்கள பெளத்த இனவாத அரசின் முன்னெற்ற முகமூடியை கிழத்தெறிந்திருக்கிறது. எனவே, இந்த வெற்றியை எந்த வித்திலும் ராஜபக்ச அரசும், அதற்கு எல்லா வழிகளிலும் முட்டுக்கொடுத்துக்கொண்டிருக்கும் இந்திய மத்திய காங்கிரஸ் அரசும் தங்களது ஜனநாயக முயற்சிக்கு கிடைத்த வெற்றியாக கூறிக்கொண்டால் அதைவிட பெரிய ஏமாற்று இருக்க முடியாது
இந்திய – இலங்கை அரசுகளுக்கிடையிலான ஒப்பந்தத்தின் அடிப்படையில் இலங்கை அரசமைப்பில் செய்யப்ட்ட 13வது திருத்ததன் கீழ் வட மாகாண அரசுக்கு அதிகாரப் பரவல் கிடைக்க தொடர்ந்து முயற்சிப்போம் என்று தமிழ்த் தேச கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் கூறியுள்ளார். அந்நாட்டு சட்டத்தின்படி, தமிழர் மாகாணத்திற்கென்று தனித்த அதிகாரங்கள் எதையும் வழங்குவதற்கு வழியில்லை என்ற நிலையில், அவர்கள் முயற்சி வெற்றி பெறுமா என்பது கேள்விக்குறியே.
இந்தத் தேர்தலின் முக்கிய பலனாக நாம் தமிழர் கட்சி கருதுவது, இலங்கையின் அரசமைப்பிற்கு உட்பட்டு அமைக்கப்படும் ஒரு மாகாண அரசால் தமிழர்களுக்கு எந்த விதமான அரசியல் சம உரிமையும் கிடைக்காது என்பதை உலக நாடுகள் உணர்வதற்காக ஒரு வாய்ப்பு உருவாகியுள்ளது. சர்வதேசம் கூறும் அந்த அதிகாரப் பரவலும், தமிழர்களுக்கு அரசியல் சம உரிமையும் கிடைக்காமல் போனால், அப்போதாவது, தமிழர்களின் அரசியல் விடுதலையை நேர்மையாக ஆதரிக்க உலக நாடுகள் முன்வர வேண்டும். தமிழர்களின் அரசியல் தலையெழுத்தை முடிவு செய்ய ஐ.நா. வாயிலாக அங்கு பொது வாக்கெடுப்பு நடத்த முன் வர வேண்டும்.