தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனத்திற்கு தமிழ் மக்கள் அளித்த அங்கீகாரத்திற்கு நன்றிகள்: – சுரேஷ் க. பிரேமச்சந்திரன்

40

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனத்தை ஏற்றுக்கொண்டு இலங்கை அரசாங்கம் மற்றும் சர்வதேச நாடுகளும் புரிந்துகொள்ளக்கூடிய விதத்திலும் அவர்களுக்குப் புரியக்கூடிய மொழியிலும் நீங்கள் மிகப் பலமான உறுதியான ஒரு செய்தியை நடைபெற்ற வடமாகாணசபைத் தேர்தலின் மூலம் வெளிப்படுத்தியிருக்கின்றீர்கள்.

தமிழீழ விடுதலைப் புலிகளை யுத்தத்தில் தோற்கடித்து அதன் மூலம் தமிழ் மக்களைத் தோற்கடித்ததாக சிங்கள மக்கள் மத்தியில் ஒரு மாயையை உருவாக்கி நாடளாவியரீதியில் பல வெற்றி விழாக்களைக் கொண்டாடி, தமிழ் மக்களின் பூமியில் தமிழ் மக்களை வெற்றிகொண்டதாக பல்வேறு வெற்றிச் சின்னங்களை உருவாக்கி, தமிழ் மக்களுக்கு அரசியல் உரிமைகள் எதுவும் தேவையில்லை வீதிகள் அமைத்தால் போதுமானது இந்த அபிவிருத்திகளுடன் அவர்கள் வாழ வேண்டும் என்ற தமது நிலைப்பாடுகளை வெளிப்படுத்தியிருந்த அரசாங்கத்திற்கு நீங்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்குக் கொடுத்த ஆணையானது அரசாங்கத்தின் நடவடிக்கைகளை நாம் முற்றாக நிராகரிக்கின்றோம் என்பதைத் தௌ்ளத்தெளிவாக நிரூபித்திருக்கின்றது.

தமிழ்த்தேசிய இனப்பிரச்சினைக்கு நீண்டதும் நிலைத்திருக்கக்கூடியதும் உறுதியானதுமான ஒரு தீர்வு முக்கியம் என்பதை உங்கள் ஆணை வெளிப்படுத்தியிருப்பதுடன், அந்தத் தீர்வை நோக்கிய பாதையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு துணிச்சலுடன் நடைபோட வேண்டும் என்பதையும் நீங்கள் வெளிப்படுத்தியிருக்கின்றீர்கள். ஒரு பொறுப்பு மிக்க அரசியல் கட்சி என்ற அடிப்படையில் உங்கள் ஆணையை நாங்கள் சிரமேற்கொண்டு செயற்படுவோம் என்பதை உறுதியுடன் தெரிவித்துக்கொள்ள விரும்புகின்றோம்.

இனப்பிரச்சினைக்கான தீர்வென்பது அத்தியாவசியமானது என்பதுடன் அதற்கு சர்வதேச சமூகத்தின் ஒத்துழைப்பும் ஒத்தாசையும் மிகமுக்கியமானது என்பதையும் அதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தொடர்ச்சியாகப் பாடுபடவேண்டுமென்பதையும் உங்கள் ஆணை வெளிப்படுத்தியிருக்கின்றது.

பல்வேறுபட்ட தொடர்ச்சியான இராணுவ அச்சுறுத்தல்கள், இராணுவ வன்முறைகள் இவற்றிற்கு மத்தியில் பிரம்மான்டமான முறையில் நீங்கள் திரண்டுவந்து அளித்த தீர்ப்பானது எங்களுக்குப் பன்மடங்கு உத்வேகத்தையும் உற்சாகத்தையும் அளிக்கின்றது. இந்தத் தேர்தலைக் குழப்ப பல்வேறுபட்ட வன்முறைகளின் மூலம் வாக்களிப்பு விகிதத்தைக் குறைக்க அரசாங்கம் எடுத்த சகல நடவடிக்கைகளையும் நீங்கள் துணிவுடன் முறியடித்துள்ளீர்கள். உங்களின் அசாத்திய துணிச்சலை நாங்கள் மட்டுமன்றி சர்வதேசமே வரவேற்று நிற்கின்றது. தமிழ் மக்களுக்கு நீதி கிட்டும். தமிழ் மக்கள் இந்த மண்ணில் கௌரவத்துடன் தலைநிமிர்ந்து வாழக்கூடிய சூழல் உருவாகும். அத்தகைய சூழலை உருவாக்குவதில் நாம் அனைவரும் இணைந்து செயற்படுவோம். வடமாகாணசபைத் தேர்தலில் பிரம்மான்டமான அளப்பரிய வெற்றியை உறுதிப்படுத்திய உங்கள் அனைவருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சிரம்தாழ்ந்த நன்றிகள்.

அதே சமயம் தமிழ் மக்களின் வெற்றிக்காகப் பங்களித்த புலம்பெயர் உறவுகள், ஊடகங்கள், சமூக வலையமைப்புகள், மனித உரிமை அமைப்புகள், சர்வதேச தேர்தல் கண்காணிப்பாளர்கள், உள்நாட்டுத் தேர்தல் கண்காணிப்பாளர்கள், மனிதவுரிமை ஆர்வலர்கள் ஆகிய அனைவருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தன் நெஞ்சார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றது.

சுரேஷ். க.பிரேமச்சந்திரன்

யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்

உத்தியோகபூர்வ பேச்சாளர்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு

முந்தைய செய்திவவுனியாவுக்கு ஒரு அமைச்சு கேட்டு சம்பந்தனுக்கு கடிதம்.
அடுத்த செய்திநல்லிணக்கத்தை ஏற்படுத்தும் முனைப்புகள் ஒருமுகப்படுத்தப்பட வேண்டும்: மகிந்தவிடம் சொன்னாராம் பான் கீ மூன்..!