சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறையில் பாரிய தீவிபத்து! – ரேடர் கருவிகள் எரிந்து நாசம்.

31

விமான நிலைய ரேடார் கட்டுப்பாட்டு அறையில் நேற்று முன்தினம் நள்ளிரவில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் ரூ.1 கோடி மதிப்பிலான கருவிகள் எரிந்து சேதமானது. சென்னை விமான நிலையத்தில் பெரிய ரக விமானங்கள் வந்து இறங்குவதற்கான 2வது ஓடுபாதை அமைக்கும் பணி நடந்து வருகிறது. ஏற்கனவே துணை ஓடுபாதையாக இருந்தது, 3400 மீட்டர் நீளத்தில் 2வது பிரதான ஓடுபாதையாக மாற்றி அமைக்கப்படுகிறது. இந்த பணி முடிவடையும் நிலையில் உள்ளது. நவம்பர் அல்லது டிசம்பரில் இந்த ஓடுபாதை செயல் பாட்டுக்கு வர இருந்தது. இங்கு வந்து செல்லும் விமானங்களை கண்காணித்து இயக்குவதற்காக மேலும் ஒரு புதிய ரேடார் கருவி அமைக்கப்பட்டுள்ளது.

இந்த ரேடாருக்கு கீழ்ப்பகுதியில் உள்ள கட்டுப்பாட்டு அறையில் சக்தி வாய்ந்த 50 பேட்டரிகள் பொருத்தப்பட்டுள்ளன. ரேடாரின் இயக்கத்துக்கான மின்சாரம் இந்த பேட்டரி மூலம் வினியோகிக்கப்படும்.இந்நிலையில், நேற்று முன்தினம் நள்ளிரவு ரேடார் கட்டுப்பாட்டு அறையில் மின்கசிவு காரணமாக திடீரென தீ விபத்து ஏற்பட்டது. பேட்டரிகள் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. அந்த அறையின் கண்ணாடி ஜன்னல்கள், அதிநவீன தொழில்நுட்ப கருவிகள் உடைந்து நொறுங்கின. அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக மாறியது. இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

உடனடியாக விமான நிலையத்தில் உள்ள 3 தீயணைப்பு வண்டிகளில் வீரர்கள் விரைந்தனர். கட்டுப்பாட்டு அறைக்கு செல்லும் மின் இணைப்பை முதலில் துண்டித்தனர். பின்னர் தண்ணீரை பீய்ச்சியடித்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். சுமார் அரை மணி நேர போராட்டத்துக்கு பிறகு தீ முழுவதுமாக அணைக்கப்பட்டது.தகவலறிந்து விமான நிலைய உயரதிகாரிகள் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். கட்டுப்பாட்டு அறையில் இருந்த 50 பேட்டரிகளில் 45க்கும் மேற்பட்ட பேட்டரிகள் தீயில் வெடித்து சிதறி கருகி கிடந்தது தெரியவந்தது.

வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட விலையுயர்ந்த தொழில்நுட்ப கருவிகளும் சேதமானது. ரூ.1 கோடிக்கும் மேல் இழப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இரவு நேரம் என்பதால் அங்கு ஊழியர்கள் இல்லை. இதனால் உயிரிழப்பு தவிர்க்கப்பட்டது.தீ விபத்து காரணமாக சென்னை விமான நிலையத்தில் உள்ள 2வது ஓடுபாதை செயல்பாட்டுக்கு வருவது மேலும் தாமதமாகும் என தெரிகிறது.

எனவே 3 அடுக்குகளாக சுமார் 852 பயணிகளை ஏற்றி கொண்டு வரும் ஏ,380 ஏர்பஸ் ரக விமானம் சென்னைக்கு வந்து தரை இறங்குவது தள்ளிப்போகும். தற்போது இந்த வசதி இந்தியாவில் டெல்லி, மும்பை, கொல்கத்தா ஆகிய 3 விமான நிலையங்களில் மட்டுமே உள்ளது. 4வதாக சென்னை இந்த பட்டியலில் இந்தாண்டு இறுதிக்குள் இடம்பெற்று விடும் என்ற எதிர்பார்ப்பு இந்த திடீர் தீவிபத்து காரணமாக நிறைவேறுவது கேள்விக்குறியாகியுள்ளது.

முந்தைய செய்திஇலங்கை அரசு நம்பகமான விசாரணையை நடத்தாவிட்டால் சர்வதேச விசாரணை நடத்தப்படும்: நவிபிள்ளை எச்சரிக்கை!
அடுத்த செய்திநவநீதம்பிள்ளை சமர்ப்பித்த அறிக்கை – அன்புமணி வரவேற்பு!