சண்டேலீடர் பத்திரிக்கையின் இணையாசிரியர் நாட்டைவிட்டு வெளியேறினார்!

11

இலங்கையின் சண்டேலீடர் பத்திரிக்கையின் இணையாசிரியர் மந்தனா இஸ்மயில் அபயவிக்ரம இலங்கையை விட்டு வெளியேறியிருக்கிறார். மூன்று வாரத்திற்கு முன்பு அவரது வீட்டில் இரவில் புகுந்த முகமூடியணிந்த நபர்கள் மந்தனாவையும், அவரது குடும்பத்தவரையும் கத்திமுனையில் மிரட்டிய பின்னணியில் அவர் இலங்கையை விட்டு வெளியேறியிருப்பது இலங்கைக்குள், “ஊடகவியலாளர்களுக்கு எதிரான போர்” தொடருவதை காட்டுவதாக ஊடகவியலாளர்களின் உரிமைகளுக்காக குரல் கொடுக்கும் அமைப்பு கவலை வெளியிட்டிருக்கிறது. சண்டே லீடர் பத்திரிக்கையின் ஆசிரியர் லசந்த விக்கரமதுங்க நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் சுட்டுக்கொல்லப்பட்டார். அவரது மரணத்துக்குப் பிறகு ஆசிரியர் பொறுப்புக்கு வந்த பிரெட்ரிகா ஜான்ஸ் வெளிநாட்டுக்கு தப்பிச் சென்றுவிட்டார். அந்த வரிசையில் மூன்றாவதாக மந்தனா தற்போது இலங்கையை விட்டு வெளியேறியிருப்பது ஊடகவியாலாளர்களின் உரிமைகளுக்காக குரல்கொடுக்கும் அமைப்புக்கள் மத்தியில் கவலையை தோற்றுவித்திருக்கிறது.

தாம் சில மாத காலம் தற்காலிகமாக இலங்கையை விட்டு வெளியேறியிருப்பதாகவும் மீண்டும் இலங்கைக்கு திரும்ப விரும்புவதாகவும் மந்தனா தெரிவித்தார். அதேசமயம், அவர் தனது பாதுகாப்பு காரணங்களுக்காகவே இலங்கையை விட்டு வெளிநாட்டுக்குச் சென்றிருப்பதாக மந்தனாவின் வழக்கறிஞர் கூறினார். அவர் தனது குடும்ப உறுப்பினர்களையும் தன்னோடு அழைத்துச் சென்றிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

ஆகஸ்ட் மாதம் 24 ஆம் தேதி இரவு அவர் வீட்டுக்குள் புகுந்த நான்கு முகமூடியணிந்த ஆண்கள், மந்தனாவின் முகத்தில் குத்தி அவரை மிரட்டியதோடு, அவரது 10 வயது மகள், மற்றும் மந்தனாவின் வயதான பெற்றோர் ஆகிய மூன்றுபேரின் கழுத்திலும் கத்திவைத்து மிரட்டினார்கள். வந்தவர்கள் வீட்டிலிருந்த பொருட்களை கொள்ளையடித்துச் சென்றார்கள் என்றாலும், அவர்கள் மந்தனாவின் வீட்டில் இருந்த ஆவணங்கள் பலவற்றையும் மணிக்கணக்கில் தோண்டித்துருவி சோதித்துப்பார்த்தனர்.

இந்தச் சம்பவம் குறித்து மந்தனாவின் கணவர் காவல்துறைக்கு தகவல் தெரிவித்த பிறகு சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் இவர்களில் ஒருவரை சுட்டுக்கொன்று மற்ற மூன்று பேரையும் கைது செய்தனர். இந்த சம்பவம் வீட்டில் திருட வந்த கொள்ளைக்காரர்களால் நடந்தது என்றும், ஊடக சுதந்திரத்தை நசுக்குவதற்கான முயற்சியல்ல என்றும் காவல்துறையும், இலங்கை ராணுவமும் அறிவித்திருந்தன.

இந்த சம்பவத்தில் பிடிபட்டவர்கள் மீதான குற்றப்பத்திரிக்கை இன்னமும் பதியப்படவில்லை. இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்களில் இருவர் இலங்கை இராணுவத்திலிருந்து வெளியேறியவர்கள். இந்த சம்பவம் நடந்தபிறகு இது குறித்து கருத்துத் தெரிவித்த மந்தனா, நாட்டில் நடக்கும் ஊழலை அம்பலப்படுத்துவதால் ஊடகவியலாளர்கள் பெரும் ஆபத்துக்களை எதிர்கொள்ள நேர்ந்தாலும், தங்களின் பணியை அவர்கள் தொடர்ந்து செய்யவேண்டும் என்று தெரிவித்திருந்தார்.

இந்த சம்பவத்துக்குப் பிறகும், மந்தனா வீட்டில் இரண்டாவது முறையும் திருட்டுச்சம்பவம் இடம்பெற்றது. அதில் அவரது கணினி திருடிச் செல்லப்பட்டது. சர்ச்சைக்குரிய கட்டுமானப்பணி தொடர்பான ஊழலை மந்தனா அம்பலப்படுத்துவதைத் தடுக்கவே அவர் குறிவைக்கப்பட்டார் என்று நாட்டின் எதிர்கட்சித்தலைவர் குற்றம் சுமத்தியிருக்கிறார்.

தற்போது மந்தனா தற்காலிகமாக நாடுகடந்து சென்றிருக்கும் நிலையில், சமீப ஆண்டுகளாக ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதல் சம்பவங்களில் சம்பந்தப்பட்டவர்களை கைது செய்து சட்டத்தின் முன்னர் நிறுத்த இலங்கை அரசு உடனடி நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று இலங்கையின் சுதந்திர ஊடக அமைப்பு கோரிக்கை விடுத்திருக்கிறது.