கெய்டியில் ஐக்கிய நாடுகள் அமைதிகாக்கும் படையில் பணியாற்றும் சிறீலங்காப் படையினன் ஒருவர், ஹெய்டி பெண்ணொருவரை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியமை தொடர்பில் பாரபட்சமற்ற முழுமையான விசாரணைகள் நடத்தப்படும் என சிறீலங்கா இராணுவம் உறுதியளித்துள்ளது.
மூன்று சிரேஷ்ட இராணுவ அதிகாரிகளை கொண்ட இராணுவ விசாரணை நீதிமன்றத்தை நியமித்துள்ள சிறீலங்கா இராணுவத் தளபதி லெப்டினட் ஜெனரல் தயா ரத்நாயக்க, விரிவான விசாரணைகளை நடத்துவதற்காக அவர்களை கெய்டிக்கு அனுப்பியுள்ளார்.
ஏற்கனவே இந்த சம்பவம் குறித்து கெய்டியில் உள்ள ஐ.நா அமைதிக்காக்கும் படைப் பிரிவின் சிறீலங்கா படையினருக்கான இராணுவ பொலிஸ் பிரிவு கட்டளை அதிகாரி விசாரணைகளை ஆரம்பித்துள்ளார்.
இந்த நிலையில் சிறீலங்கா இராணுவத் தளபதி தயா ரத்நாயக்க, மேஜர் ஜெனரல் என்.ஏ.ஜே.சி. டயஸ், மேஜர் ஜெனரல் ஈ.கே.ஜே.கே. விஜயசிறி, பிரிகேடியர் ராஜாபத்திரண ஆகியோர் இந்த இராணுவ நீதிமன்றத்தின் நீதிபதிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
மேஜர் எச்.எஸ்.கே. ஜயசிங்க, மேஜர் எல்.ஜீ. ஏபா ஆகியோர் இராணுவ விசாரணை நீதிமன்றத்தின் ஏனைய அதிகாரிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர்.