அந்தமான் தீவில் தஞ்சமடைந்தள்ள ஈழத்தமிழ் அகதிகளை காத்திடுக – செந்தமிழன் சீமான்

58

அந்தமான் தீவில் தஞ்சமடைந்தள்ள ஈழத்தமிழ் அகதிகளை காத்திடுக:

இலங்கையில் இருந்து ஆஸ்ட்ரேலியாவிற்கு தப்பிச் செல்ல முயன்ற 64 அகதிகளின் கப்பல் பழுதானதால், 35 நாட்கள் நடுக்கடலில் தத்தளித்த அவர்கள் அந்தமான் தீவுகளில் தஞ்சமடைந்துள்ளனர்.

குழந்தைகளும், பெண்களும், சிறுவர்களும், பெரியோர்களும் உணவும், குடி நீரும் கிட்டாத நிலையில் 35 நாட்கள் உயிருக்குப் போராடிய நிலையில்

காப்பாற்றப்பட்டுள்ளார்கள். இலங்கையில் சிங்கள இனவெறி அரசின் திட்டமிட்ட இன அழித்தலில் இருந்து தங்களை காத்துக்கொள்ளவும், தங்கள்

பிள்ளைகளுக்கு உருப்படியான எதிர்காலத்தை உருவாக்கிடும் நோக்குடனேயே இவர்கள், தலைக்கு ரூ. 8 லட்சம் கொடுத்து, ஆபத்தான கடல் பயணத்தை ஏற்று ஆஸ்ட்ரேலியாவிற்கு பயணமாகியுள்ளனர்.

இலங்கையில் இருந்து வரும் அகதிகளை ஆஸ்ட்ரேலியவிற்குள் அனுமதிக்க மாட்டோம் என்று அந்நாட்டு பிரதமர் அறிவித்த பிறகும், இவர்கள் தங்கள் விதியை நொந்து கொண்டு அந்நாட்டை நோக்கி பயணம் செய்கின்றனர் என்றால், எப்படிப்பட்ட ஒடுக்குமுறை இன்றளவும் ஈழத் தமிழர்கள் மீது கட்டவிழ்த்து விடப்படுகிறது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

தற்போது அந்தமான் தீவில் தஞ்சமடைந்துள்ள இவர்களை மீண்டும் இலங்கைக்கே அனுப்பி வைக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறதாக தெரியவந்துள்ளது. அப்படிச் செய்வது ஐ.நா. வின் அகதிகள் காப்பு பிரகடனத்திற்கு எதிரானதாகும். எனவே தமிழக முதலமைச்சர் அவர்கள் அந்த 64 பேரையும் அவர்கள் விருப்பி ஏற்கும் நாடுகளுக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று ஐ. நா.வின் மன உரிமை ஆணையரை கேட்டுக் கொள்ளுமாறு பிரதமர் மன்மோகன் சிங்கை வற்புறுத்த வேண்டும்.

கண்கள் இருண்டு, உடல் சோர்ந்து, மனத் துயவுடன் வந்து சேர்ந்துள்ள அவர்களுக்கு, மனிதாபிமான உதவிகளை முழுமையாக அளித்துடுமாறு அந்தமான்-நிக்கோபார் நிர்வாகத்தை அத்தொகுதியின் மக்களவை பா.ஜ.க. உறுப்பினர் பிஸ்னு பத் ரே கேட்டுக் கொண்டுள்ளார். அங்கு வாழும் தமிழர்களும் அவர்களுக்கு உதவுகின்றனர். மக்களவை உறுப்பினர் பிஸ்னு பத் ரே க்கும், அங்குள்ள தமிழர்களுக்கும் நாம் தமிழர் கட்சி நன்றி தெரிவித்துகொள்கிறது.

செந்தமிழன் சீமான்

தலைமை ஓருங்கிணைப்பாளர்.

முந்தைய செய்திதிரு.மன்மோகன் சிங் அவர்கள் தமிழ் நாட்டிற்குள் நுழைவதை கண்டித்து திருச்சியில் கறுப்புக் கொடி ஆர்ப்பாட்டம்.
அடுத்த செய்திமீனவர்களின் வாழ்வாதாரம் கேள்விக் குறியாக்கப்பட்டு வருவதையும் கண்டித்து தொடர்வண்டி மறியல்.