உரம், மின்சார விலைகளை உயர்த்தும் மத்திய அரசின் எரிவாயு விலை உயர்வு மக்கள் விரோத நடவடிக்கை

31

உரம், மின்சார விலைகளை உயர்த்தும் மத்திய அரசின் எரிவாயு விலை உயர்வு மக்கள் விரோத நடவடிக்கை: நாம் தமிழர் கட்சி

 

இந்தியாவில் எடுக்கப்படும் இயற்கை எரிவாயுவின் விலையை இரட்டிப்பாக உயர்த்திக்கொள்ள மத்திய அரசின் பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவை குழு எடுத்துள்ள முடிவு, விவசாயிகள் பயன்படுத்தும் உரங்களின் விலைகளையும், மின்சார கட்டணத்தையும் கடுமையாக உயர வழிவகுத்துள்ளது.

 

இந்தியாவில் எடுக்கப்படும் இயற்கை எரிவாயுவிற்கு தற்போது அளிக்கப்பட்டுவரும் விலை, ஒரு பிரிட்டிஷ் தர்மல் யூனிட்டிற்கு 4.1 டாலர்களாகும். இதனை இரட்டிப்பாக்கி, அதாவது யூனிட்டிற்கு 8.2 டாலர் என்று உயர்த்திக்கொள்ள மத்திய அரசின் அமைச்சரவைக் குழு அனுமதியளித்துள்ளது. இதனால், உரம் தயாரிப்பு தொழிற்சாலைகளுக்கு ஆண்டிற்கு ரூ.9,000 கோடி கூடுதலாக செலவாகும். இந்த உற்பத்தி விலையேற்றம் அனைத்தையும் மானியமாகத் தராமல், பயன்படுத்தவோரான விவசாயிகளின் தலையில் கட்டிவிட மத்திய அரசு அனுமதியளித்துள்ளது. ஏற்கனவே கடுமையான உயர்ந்துள்ள உரம் விலைகள் விவசாயத்தை கட்டுப்படியாகாத தொழிலாக மாற்றியுள்ள நிலையில், இந்த விலையேற்றம் விவசாயத்தின் மீது மேலும் சுமையேற்றப்போகிறது.

அதுமட்டுமின்றி, இயற்கை எரிவாயுவை பயன்படுத்தி மின்சாரம் தயாரிக்கும் நிறுவனங்களுக்கு கூடுதலாக ரூ.25,000 கோடி செலவாகும். இந்த செலவீனத்தை அவர்கள் அரசுக்கு விற்கும் மின்சாரத்தின் மீது சேர்த்து வைத்து விற்கவும் மத்திய அமைச்சரவை அனுமதியளித்துள்ளது. இதனால், எரிவாயுவில் இருந்து பெறும் மின்கட்டணம் யூனிட் ஒன்றிற்கு ஒரு ரூபாய் அதிகரிக்கும். இந்த சுமையை ஏற்கும் மாநில அரசுகள் அதனை மக்கள் மீதும், தொழிற்சாலைகளின் மீதும் சுமத்தும் அபாயம் உள்ளது. தமிழ்நாட்டிலும் இயற்கை எரிவாயு பயன்படுத்தி மின்சாரம் தயாரிக்கும் தனியார் நிறுவனங்கள் உள்ளன. அவைகள் தயாரித்து தமிழக அரசின் டான்ஜெட்கோவிற்கு அளிக்கும் மின்சாரத்தின் விலை உயரும் நிலை ஏற்பட்டுள்ளது.

ஏற்கனவே, தனியார் மின் நிலையங்கள் அயல் நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யும் நிலக்கரியால் ஆகும் கூடுதல் செலவை மின் கட்டணத்தின் மீது ஏற்றி, அரசு மின் துறைகளுக்கு விற்க கடந்த வாரம் மத்திய அமைச்சரவை அனுமதி அளித்தது. இப்போது இயற்கை எரிவாயு விலையேற்றத்தினால் மின் கட்டணம் மேலும் கூட வழிவகை செய்துள்ளது.

இப்போது உயர்த்தப்பட்டுள்ள இயற்கை எரிவாயு விலையேற்றம் என்பது பிரதமரின் பொருளாதார ஆலோசகர் ரங்கராசன் குழு அளித்த பரிந்துரையின் அடிப்படையில் செய்யப்பட்டுள்ளது என்று அரசு கூறினாலும், அது ஒரு தனியார் நிறுவனத்தின் கோரிக்கைக்கு இணங்கவே ஏற்றப்பட்டுள்ளது. இந்த விலையேற்றம் ஒ.என்.ஜி.சி., ஆயில் இந்தியா போன்ற மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களுக்கும் பயனளிக்கும் என்று அரசு கூறினாலும், அது தனியார் பெருநிறுவனமான ரிலையன்ஸூக்குதான் பெரும் பயனளிக்கப்போகிறது என்பது வெள்ளிடைமலை. தாங்கள் உற்பத்தி செய்யும் இயற்கை எரிவாயுவிற்கு விலையை ஏற்றித் தர வேண்டும் என்று ஓ.என்.ஜி.சி.யோ அல்லது ஆயில் இந்தியா நிறுவனமோ கேட்கவில்லை, ரிலையன்ஸ் மட்டுமே கேட்டது என்பது குறிப்பிடத்தக்கது. அந்த நிறுவனம் மூன்று ஆண்டுகளுக்கு முன்னரும் இதே போல் விலையேற்றக் கோரிக்கை விடுத்தபோது அதனை ஏற்று, அப்போது யூனிட்டிற்கு கொடுக்கப்பட்ட 1.79 டாலர் விலையை 4.1 டாலராக மத்திய அமைச்சரவை உயர்த்தியது. இப்போது அதனை இரட்டிப்பாக்கியுள்ளது மட்டுமின்றி, சர்வதேசத்தின் விலையேற்றத்திற்குத் தக்கவாறு மூன்று மாதத்திற்கு ஒரு முறை விலையேற்றம் செய்துகொள்ளவும் அனுமதி வழங்கியுள்ளது.

சர்வதேச சந்தையில் இருந்து வாங்கும் கச்சா விலையால் நமது நாட்டிற்கு ஏற்படும் பொருளாதார சுமையை குறைக்கவே உள்நாட்டு உற்பத்தியை பெருக்கும் முடிவு எடுக்கப்பட்டது. ஆனால், உள்நாட்டு உற்பத்தியை தனியாரிடம் கொடுத்த மத்திய அரசு, இப்போது சர்வதேச சந்தையில் இயற்கை எரிவாயுவிற்கும், கச்சாவிற்கும் கொடுக்கும் விலையை உள்ளூர் நிறுவனங்களுக்கும் கொடுப்பது என்று முடிவெடுத்தால், அதனால் இந்த நாட்டிற்கு என்ன இலாபம்?

ஒரு தனியார் நிறுவனத்தின் இலாப நோக்கிற்காக இந்த நாட்டின் மத்திய அமைச்சரவை இந்த அளவிற்கு இறங்கிச் சென்று சலுகைகளை வாரி வழங்குகிறது என்றால், இந்த நாடு மக்களுக்காகவா அல்லது இப்படிப்பட்ட பெரும் நிறுவனங்களுக்காகவா?. நமது நாட்டின் பொருளாதாரத்தை தனியார் மயமாக்கியனால் வேலை வாய்ப்பு கிடைக்கும், பொருளாதார வளர்ச்சி கிடைக்கும் என்றெல்லாம் சொன்னவர்தான் மன்மோகன் சிங். ஆனால் பொருளாதாரத்தை தனியார் மயமாக்கியதோடு நிற்காமல், தனியார்  பெரு நிறுவனங்களின் இலாபத்தை பெருக்குவதற்காக அவைகளின் உற்பத்திக்கு அதிக விலை கொடுத்து மக்கள் மீது அந்த சுமையை ஏற்றுவதற்கு அனுமதியும் அளிக்கிறார்! இதுதான் தனியார் மயத்தின் நோக்கமா?

விவசாயத்தில் இருந்து மக்கள் வெளியேற வேண்டும் என்றும், நமது நாட்டில்தான் தொலைபேசி, அலைபேசி கட்டணங்கள் குறைவாக இருக்கிறது என்றும் பேசிவரும் பிரதமர், நமது நாட்டு மக்களின் அன்றாட வாழ்வை பாதிக்கும் பொருளாதார முடிவுகளை கொஞ்சமும் தயக்கமின்றி எடுத்துவருவது, அவரது தலைமையிலான மத்திய காங்கிரஸ் அரசு மக்கள் நலனில் துளியும் அக்கறையற்றது என்பதையே காட்டுகிறது.

செந்தமிழன் சீமான்

தலைமை ஒருங்கிணைப்பாளர்      

முந்தைய செய்திஊட்டியில்(​நீலமலை மாவட்டம்) இலங்கை சிப்பாய்களை விரட்டியடி​க்க போராட்டம்.
அடுத்த செய்திமருத்துவர் பாசறை வால்பாறயில் 30.06.2013 அன்று நடத்திய மருத்துவ முகாம்