வடுகம்பட்டி அழகிரிசாமி, சாமி பழனியப்பன் மறைவு தமிழ்த் தேசிய இனத்திற்கு பேரிழப்பாகும்

35

வடுகம்பட்டி அழகிரிசாமி, சாமி பழனியப்பன் மறைவு தமிழ்த் தேசிய இனத்திற்கு பேரிழப்பாகும்: தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு பெரும் ஆதரவு அளித்தவரும், தமிழர் தேசிய இயக்கத்தின் தலைவர் ஐயா பழ.நெடுமாறன் அவர்களுடன் தோளோடு தோள் நின்று தமிழினத்தின் உரிமை போராட்டங்களுக்கு உறுதுணையாக இருந்தவருமான வடுகம்பட்டி அழகிரிசாமி மறைவு தமிழ்த் தேசிய இனத்திற்கு பேரிழப்பாகும். 

தமிழ்த் தேசிய தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் அன்பையும், பெருமதிப்பையும் பெற்ற அழகிரிசாமி அவர்கள், தன் வாழ் நாள் முழுவதும் தமிழினத்தின் விடுதலைக்காகவும், உரிமைகளுக்காகவும் அயராது போராடியவர். தன் நலன், தன் குடும்ப நலன் என்பதைப்பற்றியெல்லாம் கவலைகொள்ளாது, இனத்தின் நலனிற்காக எப்போதும் சிந்தித்துவர், பணியாற்றியவர் அழகிரிசாமி அவர்கள். தமிழினத்தின் நலனில் அவர் காட்டிய அக்கறை எஙகளைப் போன்ற தமிழ்த் தேசியவாதிகளுக்கு என்றென்றும் ஒரு வழிகாட்டுதலாக இருக்கும். அன்னாருக்கு நாம் தமிழர் கட்சி தனது வீர வணக்கத்தையும், அருமைத் தந்தையை இழந்துள்ள அவரது குடும்பத்தினருக்கு ஆழந்த இரங்கலையும் தெரிவித்துக்கொள்கிறது.
  
இதேபோல், தமிழ்த் தேசிய இனத்தின் எழுச்சிக்காக கவிதையாத்து பெரும்பணியாற்றியவரும், புரட்சிக்கவிஞர் பாரதிதாசனின் மாணவரும், மொழிப்போர் தியாகியுமான கவிஞர் சாமி பழனியப்பன் மறைவும் தமிழினத்திற்கு பேரிழப்பாகும்.  

தந்தை பெரியாரின் கொள்கை வழி நின்று, தமிழ் மொழிக்காகவும், தமிழினத்தின் உரிமைகளுக்காகவும் பல போராட்டங்களில், குறிப்பாக இந்தித் திணிப்பிற்கு எதிரான மொழிப் போராட்டத்தில் பங்கேற்ற தீரர் சாமி பழனியப்பன் அவர்கள். நம் இனம் காக்க வேண்டுமெனில் நம் மொழி காக்க வேண்டும் என்பதில் உறுதியாக நின்றவர் ஐயா சாமி பழனியப்பன் அவர்கள். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், அவரோடு மொழிப்போர் களம் கண்ட தீரர்களுக்கும், அவருடைய மகன் கவிஞர் பழனிபாரதிக்கும் நாம் தமிழர் கட்சி தனது இரங்கலையும், அவரது தமிழ்த் தொண்டுக்கு புகழ் வணக்கத்தையும் செலுத்துகிறது. 

செந்தமிழன் சீமான்

தலைமை ஒருங்கிணைப்பாளர்