தமிழில் வாதாட அனுமதி மறுப்பது அடிப்படை உரிமை மறுப்பு:
தமிழக அரசின் உள்ளாட்சி நிர்வாகத்திற்குட்பட்ட கிராம பஞ்சாயத்துக்கு ஒரு உத்தரவு பிறப்பிக்கக்கோரி தொடரப்பட்ட சிவில் வழக்கு ஒன்றில், மனுதாரர் சார்பில் நேர்நின்ற வழக்குரைஞர் தமிழி்ல் வாதிட்ட காரணத்திற்காக, வழக்கு மனுவையே தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை உத்தரவிட்டிருப்பது, வேதனைக்குரிய நடவடிக்கையாகும்.
கன்னியாகுமரி மாவட்டம், விளவங்கோட்டிற்குட்பட்ட ஒரு கிராமத்தில் தான் கட்டியுள்ள வீட்டிற்கு திட்ட அனுமதி அளிக்க கருங்கல் கிராம பஞ்சாயத்திற்கு உத்தரவிடக் கோரி தொடரப்பட்ட மனுவில், மனுதாரர் சார்பில் நேர்நின்ற வழக்குரைஞரும், தமிழில் வாதாட உரிமை கோரி 2010ஆம் ஆண்டில் நடந்த சாகும்வரை பட்டிணிப் போராட்டத்தில் ஈடுபட்ட போராளியுமான பகத்சிங், தனது வாதத்தை தமிழில் பேசத் தொடங்கியதும், அதனை ஏற்க மறுத்த நீதிபதி அவர்கள், இந்திய அரசமைப்பு பிரிவு 348ஐயும், இந்திய உச்ச நீதிமன்றத்தில் ராஜ் நாராயணன் இந்தி மொழியில் வாதிட்டதை ஏற்க மறுத்து பிறப்பித்த உத்தரவையும் காரணம் காட்டி, தமிழில் வாதிடுவதை ஏற்க முடியாது என்று கூறியது மட்டுமின்றி, அதையே காரணமாகக் காட்டி மனுவை விசாரணைக்கு உட்படுத்தாமல் தள்ளுபடி செய்தும் உத்தரவிட்டுள்ளார்.
நீதிபதி மணிகுமார் தனது தீர்ப்பில் சுட்டிக்காட்டியுள்ள அரசமைப்புப் பிரிவு 348இன் படி, இந்திய குடியரசுத் தலைவர் ஒப்புதலுடன் மட்டுமே மாநில உயர் நீதிமன்றங்களில் அம்மாநில மொழியில் வாதிட அனுமதி வழங்க முடியும் என்றால், 2010ஆம் ஆண்டு, இதே சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளையில் செயலாற்றிய நீதிபதிகள் தமிழில் வாதிட அனுமதி அளித்ததும், அதனை ஏற்று அப்போது சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருந்த எம்.ஒய்.இக்பால் அதற்கு ஏற்பு வழங்கியது எப்படி? இந்திய அரசமைப்புப் பிரிவுகள் நடைமுறைப்படுத்தும் வழிமுறைகளில் நீதிபதிக்கு நீதிபதி, காலத்திற்குக் காலம் வேறுபடுவது ஏன்? என்று கேள்வி எழுப்புகிறோம்.
நீதிபதி மணிகுமார் தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ள ராஜ் நாராயணன் வழக்கில், அவர் இந்தியில் தனது வாதத்தை எடுத்து வைக்க நீதிபதிகள் அனுமதி அளிக்கின்றனர். ஆனால், அந்த அமர்வில் இருந்த நீதிபதிகளி்ல் இருவருக்கு ராஜ் நாராயணன் இந்தியில் பேசியதை புரிந்துகொள்ள இயலாத காரணத்தினால்தான், அவருக்கு பதிலாக அவருடைய வழக்குரைஞர் ஆங்கிலத்தில் வாதிடலாம் என்று உத்தரவு பிறப்பித்தனர். ஆனால், நீதிபதி மணிகுமார் தமிழர். தமிழ் மொழி அறிந்தவர். அவரால் மனுவை தொடர்ந்த வாதியோ அல்லது வழக்குரைஞரோ பேசும் தமிழ் மொழியை புரிந்துகொள்ள முடியும் என்கிற நிலை இருக்கும்போது, தமிழில் வாதிட அனுமதிக்க முடியாது என்று கூறியதும், மனுவை தள்ளுபடி செய்தது ஏன்?
இந்திய நாடு வெள்ளையரின் காலனி ஆதிக்கத்திற்கு உட்பட்டிருந்தபோது கூட, அவன் வெளயிட்ட நாணயத்தில் கூட தமிழில் எழுத்தப்பட்டிருந்தது. ஆனால், விடுதலை பெற்ற நாடாக இந்தியா மாறிய நாளில் இருந்து, ஒவ்வொரு துறையிலும் தமிழ் மொழிக்கு உரிய நிலை மறுக்கப்படுகிறது. தமிழ்நாட்டின் உயர் நீதிமன்றத்தில் தமிழ் வழக்காடு மொழியாக டெல்லியிடம் கையேந்தி நிற்க வேண்டிய நிலைதான் தமிழுக்கு உள்ளதெனில், தமிழர் விடுதலை பெற்ற ஒரு நாட்டின் அடிமை இனமா? என்று கேட்கிறோம். தமிழ்நாட்டின் நிர்வாகத்தை, அது தொடர்பான நடவடிக்கைகளை முறைபடுத்தும் சட்டமியற்றக்கூடிய அரசமைப்பு உரிமை தமிழ்நாட்டிற்கு உள்ளதென்றால், எம் மாநிலத்தில் இயங்கும் உயர் நீதிமன்றத்தில் வழக்காடு மொழியாக தமிழ் இருப்பதற்கு மட்டும் சட்டமியற்றும் அதிகாரம் எமக்கில்லையா? இதை தமிழர்கள் இதற்கு மேலும் ஏற்றுக்கொண்டு அமைதி காக்க முடியுமா? எனது இனத்தின் தன்மானத்திற்கு விடப்பட்ட சவால் அல்லவா இது?
செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்