சாதிய அரசியலை சாடும் வசனங்களை எழுதியவர் மணிவண்ணன்: சீமான் புகழஞ்சலி

508

சாதிய அரசியலை சாடும் வசனங்களை எழுதியவர் மணிவண்ணன்: சீமான் புகழஞ்சலி 

தமிழ்த் திரையுலகில் கலைவாணர் என்.எஸ்.கே., நடிகவேள் எம்.ஆர். இராதா ஆகியோருக்குப் பின் தனது படங்கள் அனைத்திலும், சாதியத்தை சாடி, பெரியாரின் பகுத்தறிவுக் கொள்கைகளை நேரடியான வசனங்களின் மூலம் மக்களிடையே கொண்டு சென்ற சமூக புரட்சியாளர் இயக்குனர் மணிவண்ணன் என்று நாம் தமிழர் கட்சித் தலைவர் செந்தமிழன் சீமான் கூறினார்.

சமூக நீதிப் போராளியாகவும், இனமான இயக்குனராகவும் திகழ்ந்த அமரர் மணிவண்ணனுக்கு நாம் தமிழர் கட்சியின் சார்பில் சென்னை, சேத்துப்பட்டிலுள்ள அண்ணா அரங்கத்தில் சனிக்கிழமை மாலை வீரவணக்கம் செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்வின் தொடக்கத்தில் மணிவண்ணன் உருவப்படத்திற்கு சீமான் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். அவரைத் தொடர்ந்து சட்டத்தரணி சந்திரசேகர், மணிவண்ணனின் மகன் இரகு, பேரறிவாளனின் தாயார் அற்புதம் அம்மாள், கலைக்கோட்டு உதயம், சர்வதேசத் தொடர்பாளர் அய்யநாதன், அன்புத் தென்னரசன், வழக்குறைஞர் அறிவுச் செல்வன், மண்டல பொறுப்பாளர்கள் வெற்றிக்குமரன், நெல்லை சிவக்குமார், கார்வண்ணன் ஆகியோர் மலரஞ்சலி செலுத்தினர்.

இந்நிகழ்வில் இறுதியாக நினைவுறையாற்றிய சீமான், அடுத்த தலைமுறையைப் பற்றி தன் வாழ் நாள் முழுவதும் சிந்தித்தவர் இயக்குனர் மணிவண்ணன் என்றார்.

என்னைப் போன்று, இயக்குனர் செல்வமணியைப் போன்று பகுத்தறிவாளர்களாகவும், கடவுள் மறுப்பாளர்களாகவும் திரையுலகிற்கு வந்த இளைஞர்களை, அவர்களின் கொள்கை, கோட்பாடுகளை மாற்றிக்கொள்ளாமல் காத்தவர் அப்பா மணிவண்ணன். சாதியை வைத்து அரசியல் செய்யும் சாதியவாதிகளை தோலுறுத்திக்காட்டியவர் மணிவண்ணன். சாதிய மோதல்களைத் தூண்டிவிட்டால், உண்மையான பிரச்சனைகளில் இருந்து மக்களை வெகு சுலபமாக திசை திருப்பி விடலாம் என்கிற வசனத்தை தனது திரைப்படத்தில் சொல்லி, மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தியவர்.

கடவுள் மறுப்புக் கொள்கையில் என்றென்றும் உறுதியாக இருந்த அப்பா அவர்கள், பாபர் மசூதி இடிக்கப்பட்டபோது ஒளிப்பதிவு செய்யப்பட்ட தனது திரைப்படத்தில், கடவுள் இல்லையென்று சொன்னவர்களால் வழி்பாட்டுத் தலங்கள் இடிக்கப்பட்டதாக வரலாறு இல்லை. ஆனால் கடவுளை வணங்கியவர்கள்தான் அதனைச் செய்துள்ளார்கள் என்கிற யதார்த்தை நாம் புரிந்துகொள்ள வேண்டும் என்ற வசனத்தை சத்தியராஜின் வாயிலாக பேச வைத்து படமாக்கினார்.

அப்படி சாதியையும், மூட நம்பிக்கைகளையும், மதவாதத்தையும் சாடி 50 படங்களை எடுத்த ஒரு கலைஞர் வாழ்ந்த நம் மண்ணில்தான் இன்றைக்கு சாதிய அரசியலால் இளவரசன் என்கிற இளைஞனின் வாழ்வு முடிந்துள்ளது. இளவரசனின் மரணம் ஒரு தனி மனிதனின் மரணமல்ல, அது நம் தமிழ் தேசிய இனத்திற்கு ஏற்பட்ட இழிவாகவே நான் பார்க்கிறேன். காதலை மிகவும் நேசித்த மணிவண்ணன் அவர்கள், ஒரு படத்தில் காதலை சிலாகித்துக் கூறும்போது, உலகில் எத்தனையோ மொழிகள் மனிதர்களால் பேசப்படுகிறது. ஆனால், காதல் மட்டுமே மனதால் பேசப்படுகிறது என்று வசனம் எழுதினார். காதல் திருமணத்திற்கு மதம் தடையாகும் போது மதம் கைவிடப்படும் என்பதை அலைகள் ஓய்வதில்லை என்ற படத்தின் உச்சகட்டக்காட்சியாக்கியவர் மணிவண்ணனே.

எம் இனத்தின் தலைவர் மேதகு வே. பிரபாகரன் என் மீது வைத்த நம்பிக்கைக்கு இணையானது என் மீது அப்பா மணிவண்ணன் வைத்த நம்பிக்கையாகும். அவரின் மரணம் தமிழ்த் தேசிய இனத்திற்கும், அதன் விடுதலைக்கான அரசியலுக்கும் ஏற்பட்ட ஈடு செய்ய முடியாத இழப்பாகும்.தமிழ்த் தேசிய இனம் இந்த உலகில் இருக்கும் வரை தமிழர் நெஞ்சங்களில் மணிவண்ணனின் நினைவும் புகழும் வாழும்என்று சீமான் பேசினார்.

ஆந்திர மாநிலத்தில் படபிடிப்பில் இருப்பதால் இந்நிகழ்வில் கலந்துகொள்ள முடியாமல் இருந்த நடிகர் சத்தியராஜ், அலைபேசியின் வாயிலாக மணிவண்ணனுக்கு அஞ்சலி செலுத்திப் பேசினார். அவரது உரை அனைவரின் நெஞ்சத்தையும் உருக்குவதாக இருந்தது. தனது வாழ்வின் ஒவ்வொரு நாளிலும் பிரிக்க முடியாத அங்கமாக இருந்த தனது நண்பனை தான் இழந்துவிட்டதாக சத்தியராஜ் கூறினார்.

இந்நிகழ்வில் இயக்குனர் ஆர்.கே. செல்வமணி உள்ளிட்ட திரையுலகினரும் கலந்துகொண்டு மணிவண்ணனுக்கு புகழஞ்சலி செலுத்தினர்.