நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் தனியாருக்கு போகாமல் தடுப்போம்

81

நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் தனியாருக்கு போகாமல் தடுப்போம்: நாம் தமிழர் கட்சி போராட்டம் 

மத்திய அரசின் பொதுத் துறை நிறுவனங்களில் இலாபத்துடன் சிறப்பாக செயல்படும் நிறுவனங்கள் நவரத்னா என்ற பட்டத்துடன் பெருமையாக அழைக்கப்படுகிறது. அப்படிப்பட்ட ஒரு ஒரு பொதுத்துறை நிறுவனம்தான் என்.எல்.சி. என்றழைக்கப்படும் நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம்.

இப்படி நவரத்னா என்ற பெருமை கொண்ட நிறுவனங்களின் வளர்ச்சிக்காகவும், விரிவாக்கத்திற்காகவும் மத்திய அரசு கூடுதலாக முதலீடு செய்து அவைகளை பாதுகாக்க வேண்டும். ஆனால், பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை தனியாருக்கு விற்கும் கொள்கை முடிவை கடைபிடித்து வரும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு, முதலில் பலவீனமான நிறுவனங்களின் பங்குகளை தனியாருக்கு விற்று வந்தது. இப்போது நவரத்னா நிறுவனங்களின் பங்குகளையும் தனியாருக்கு விற்கும் முடிவை செயல்படுத்தி வருகிறது.

மத்திய அரசின் இந்த தவறான பொருளாதாரக் கொள்கையே, தமிழ்நாட்டில் இயங்கிவரும் நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தின் 5 விழுக்காடு பங்குகளை தனியார் முதலீட்டிற்கு விற்கும் முடிவாகும். மத்திய அரசு இந்நிறுவனத்தின் தொடக்க காலத்தில் அளித்த சில கோடி ரூபாய்களை மட்டுமே முதலீடாகக் கொண்டு தொடங்கப்பட்ட நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தின் இன்றைய பங்கு மதிப்பு 14,000 கோடி ரூபாயாகும். இதில் 5 விழுக்காடு பங்குகளை விற்று, அதன் மூலம் கிடைக்கும் ரூ.700 கோடியை, நிறுவனத்தின் விரிவாக்கத்திற்கு பயன்படுத்துவோம் என்று முதலில் கூறிய பிரதமர் அலுவலக அமைச்சர் நாராயணசாமி, இப்போது மத்திய அரசின் மக்கள் நலத் திட்டங்களுக்கு பயன்படுத்தப்போவதாக மாற்றிப் பேசுகிறார். எப்படியிருப்பினும் மத்திய அரசின் இம்முடிவு ஏற்கத்தக்கதல்ல.

என்.எல்.சி. நிறுவனம், கடந்த ஆண்டில் மட்டும் 1,460 கோடி இலாபம் ஈட்டியுள்ளது. 262 இலட்சம் டன் நிலக்கரி வெட்டி எடுத்து பயன்படுத்தியுள்ளது. அதன் மொத்த வணிகம் ரூ.5,600 கோடியாகும். இந்நிறுவனம் ஈட்டிய இலாபத்தில் இருந்து ராஜஸ்தான், உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்களில் பல சுரங்கங்கள் அமைத்து மின்சாரம் தயாரிக்கும் திட்டங்களுக்கு பல்லாயிரம் கோடிகள் முதலீடு செய்யப்பட்டுள்ளது. நெய்வேலியில் மேலும் இரண்டு 500 மெகா வாட் அனல் மின் நிலையங்கள் விரைவில் தொடங்கப்படவுள்ளது. நெய்வேலியில் தற்போது 2,490 மெகா வாட் மின்சாரம் தயாரிக்கும் இந்நிறுவனம், தமிழ்நாட்டிற்கு 980 மெகா வாட் மின்சாரத்தை அளிக்கிறது. மீதமுள்ள 1,500 மெகா வாட் மின்சாரம் தென் மாநிலங்களுக்கு வழங்கப்படுகிறது. இப்படிப்பட்ட வர்த்தக ரீதியாக வளமான ஒரு நிறுவனத்தின் பங்குகளை தனியாருக்கு விற்க முடிவு செய்திருப்பதன் மூலம், இந்நிறுவனத்தை தனியாருக்கு தாரை வார்க்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

தனியாரின் நிர்வாகத்தின் கீழ் என்.எல்.சி. போகுமென்றால், அது தயாரிக்கும் மின்சாரம், இப்போது கிடைக்கும் விலையில் தமிழ்நாட்டிற்கோ அல்லது தென் மாநிலங்களுக்கோ கிடைக்காது. அவர்கள் விலையை உயர்த்துவார்கள். அதனை மத்திய  அரசு கேள்வி கேட்க முடியாது, கேள்வி கேட்கவும் மாட்டார்கள். ஆட்குறைப்பு நடைபெறும். இப்போதே அதிகம் தொழிலாளர்கள் வேலை பார்க்கிறார்கள் என்கிற பொய்யான தகவலை தருகிறது என்.எல்.சி. நிர்வாகம். இப்படி அது கூறுவதற்குக் காரணம், இப்போதுள்ள 17,000 ஒப்பந்தப் பணியாளர்களில் ஒரு பெரும் பங்கை வேலை நீக்கம் செய்வதற்கே.

ஒரு பக்கத்தில் ஒப்பந்தத் தொழிலாளர்களை நிரந்தரம் செய்ய வேண்டும் என்று போராடுகிறோம். ஆனால், தொழிலாளர்கள் எண்ணிக்கையை குறைக்கும் திட்டத்திற்கான அடிப்படை வேலை மற்றொரு புறத்தில் நடக்கிறது. இதனை ஏற்க முடியுமா? வளமான மக்கள் நிறுவனம் தனியாரின் கைக்கு போவதை தமிழக மக்கள் ஏற்கலாமா? பொதுத் துறை நிறுவனங்களின் நோக்கம் மக்களுக்காகவா அல்லது தனியார்கள் கொழுக்கவா? இது பொருளாதார கொள்கையா அல்லது தனியார்கள் கொள்ளையா?

எனவே, என்.எல்.சி. பங்குகள் விற்பனையை தடுத்து நிறுத்துவோம். தனியார் மயம், தாராளமயம், உலகமயம் என்பதெல்லாம் மக்களுக்கு அல்ல அது தனியார் கொழுக்கவே என்பதை உரகச் சொல்வோம். நெய்வேலியில் புதன் கிழமை காலை கூடுவோம். ஒரு நாள்  முழுவதும் தொடர் முழக்கப் பட்டினிப் போராட்டத்தில் ஈடுபடுவோம். வாருங்கள் தமிழர்களே, தமிழரின் பெருமைமிக நிறுவனத்தை காப்போம்.

செந்தமிழன் சீமான்

தலைமை ஒருங்கிணைப்பாளர் .

முந்தைய செய்திஏதிலி சந்திரகுமார் விடுதலை: தமிழக அரசு தலையிட வேண்டும்
அடுத்த செய்திதமிழினத்திற்கும் தமிழ்த் தேசியத்திற்கும் உறுதுணையார் நின்றவர் இயக்குனர் மணிவண்ணன்