செம்மொழி தமிழாய்வு நிறுவனத்தை தமிழக அரசு காப்பாற்றி​ட வேண்டும்

26
 செம்மொழி தமிழாய்வு நிறுவனத்தை தமிழக அரசு காப்பாற்றிட வேண்டும்:
சென்னை தரமணியில் இயங்கிவரும் செம்மொழி தமிழாய்வு நிறுவனம், தமிழக அரசின் தலையீடு இல்லாத காரணத்தினால், தமிழ் மொழி தொடர்பான ஆய்வுகள் உரிய அளவிற்கு நடைபெறாமல் செத்துக்கொண்டிருக்கும் ஒரு நிறுவனமாக ஆகிக்கொண்டிருக்கிறது என்பதை வருத்தத்துடன் சுட்டிக்காட்டுகிறோம்.
தமிழரறிஞர்களின் நீண்ட கால போராட்டத்தின் காரணமாக மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகத்தால் தமிழ் மொழிக்கு செம்மொழி என்ற அங்கீகாரம் கிடைத்தது. அதனடிப்படையில் மத்திய அரசால் அமைக்கப்பட்டதுதான் மத்திய செம்மொழி ஆய்வு நிறுவனமாகும் (சென்ட்ரல் இன்ஸ்ட்டியூட் கிளாசிக்கல் தமிழ்). மைசூரில் இயங்கிவந்த இந்நிறுவனம் கடந்த 2008ஆம் ஆண்டு முதல் சென்னையில் இயங்கிவருகிறது. இது மத்திய அரசின் கீழ் இயங்கிவரும் ஒரு தன்னாட்சி பெற்ற அமைப்பாக இருந்தாலும், தமிழகத்தின் முதல்வராக இருப்பவரே இந்நிறுவனத்தின் தலைவராக இருப்பார். ஆனால் தமிழக முதலமைச்சர் இந்நிறுவனத்தின் மீது உரிய கவனத்தை செலுத்தாத காரணத்தினால், இந்நிறுவனம் தமிழ் மொழிக்கு தொடர்பில்லாத இயக்குனர்களால் நிர்வகிக்கப்பட்டு வருகிறது. இந்நிறுவனத்திற்கு தகுதி வாய்ந்த தமிழரிஞர் ஒருவர்தான் இயக்குனராக நியமிக்கப்பட வேண்டும். ஆனால், அப்படி நியமிக்கப்படாத காரணத்தினால், சென்னை ஐஐடியில் இருந்து தற்காலிக இயக்குனர் நியமிக்கப்படுகிறார். இவர்களின் கீழ் தமிழாய்வு என்று பெரிதாக எதுவும் நடக்கவில்லை.

தமிழைப்போல் செம்மொழி நிலையைப் பெற்றுள்ள சமஸ்கிருத மொழிக்கு இதுவரை சற்றேறக்குறைய ஆயிரம் கோடியை மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை வழங்கியுள்ளது. ஆனால், தமிழ் மொழிக்கு கடந்த ஐந்தாண்டுகளில் 76 கோடி ரூபாய் மட்டுமே ஒதுக்கீடு கிடைத்துள்ளது. அதுவும் முழு அளவிற்கு பயன்படுத்தாமல் விடப்பட்ட காரணத்தினால், இந்த ஐந்தாண்டில் வெறும் 64 கோடி ரூபாய் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த அவல நிலைக்குக் காரணம், தமிழ் மொழியோடு தொடர்பற்றவர்களும், பிற மொழியாளர்களும் இந்நிறுவனத்தின் உயர் பொறுப்புகளில் நியமிக்கப்பட்டிருப்பதுதான். இப்போது இந்நிறுவனத்தின் பதிவாளராக இருப்பவர் தமிழரல்ல என்பது மட்டுமின்றி, தமிழ் மொழியை தரக்குறைவாக பேசுபவர் என்று அங்கு பணியாற்றி வருபவர்கள் கூறுகின்றனர். இப்படிப்பட்ட நிலை தமிழ்நாட்டில் இயங்கும் தமிழ் மொழி ஆய்வு மையத்தில் இருப்பது மிகுந்த வருத்தத்திற்குரிய நிலையாகும்.

தமிழ் மொழிக்கு செம்மொழி நிலை அளிக்க வேண்டும் என்று போராடியதற்குக் காரணமே, நம் தாய் மொழியின் தொன்மையையும், அதன் பயன்பாட்டையும் மேம்படுத்தவே. ஆனால் தமிழரறிஞர்கள் எவரும் இங்கு வந்த ஆய்வு செய்திட  உரிய ஊக்கம் அளிக்காத ஒரு நிலை இருக்கிறது! இதற்காகவா செம்மொழி தகுதி கேட்டு போராடினோம்? தமிழ் மொழிக்குத் தொடர்பற்றவர்கள் இந்நிறுவனத்தின் உயர் பொறுப்புக்களில் இருக்க அனுமதிக்கலாமா?

எனவே தமிழக முதல்வர் உடனடியாக செம்மொழி தமிழாய்வு நிறுவனத்தின் செயல்பாடுகள் குறித்து கவனம் செலுத்தி, தமிழாய்வை ஊக்கப்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.

செந்தமிழன் சீமான்

தலைமை ஒருங்கிணைப்பாளர்