எம் இனத்தின் விடுதலையையும், உரிமைகளையும் வென்றெடுக்கும் மக்கள் சக்தியே நாம் தமிழர் கட்சி

8

எம் இனத்தின் விடுதலையையும், உரிமைகளையும் வென்றெடுக்கும் மக்கள் சக்தியே நாம் தமிழர் கட்சி

தமிழீழ விடுதலையை வென்றெடுக்கவும், காவிரியில் இருந்து கச்சத் தீவு வரையிலான பல்வேறு சிக்கல்களில் தமிழரின் உரிமையை மீட்டெடுப்பதற்காகவும் மக்கள் சக்தியை திரட்டவே நாம் தமிழர் கட்சி உருவாகியுள்ளது என்று செந்தமிழன் சீமான் பேசினார்.

 

சென்னையை அடுத்த தாம்பரம் நகரில், காஞ்சி மத்திய மாவட்டத்தின் சார்பாக, நாமே மாற்று, நாம் தமிழரே மாற்று என்ற முழக்கத்துடன் சண்முகம் சாலையில் திங்கள் இரவு மாபெரும் பொதுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கலந்துகொண்டு  சிறப்புரையாற்றிய சீமான், சாதியாயும், மதமாயும் பிரிந்து கிடந்த காரணத்தால்தான் நம் உரிமைகளை இழந்தோம். அந்த நிலையில் இருந்து விடுபட்டு நாம் தமிழராய் ஒன்றிணைந்து தமிழினம் தனது உரிமைகளை வென்றெடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

தமிழினத்தின் உரிமைகள் ஒவ்வொரு நாளும் பரிபோகிறது. இதைப்பற்றி கேட்பதற்கு நாதியற்ற இனமாக தமிழினம் இருக்கிறது. எதற்கெடுத்தாலும் அறிக்கை அளிக்கின்ற தலைமைகள்தான் இருக்கின்றன. அறிக்கை கொடுத்து சொறிந்துவிட்டு தமிழனை ஏமாற்றும் அரசியல்தான் இங்கு நடக்கிறது. இவர்கள் விட்ட அறிக்கைகளால் ஏற்பட்ட பலன் என்ன?

இந்த உலகிற்கு அணை என்றால் என்ன என்றே தெரியாத காலத்தில் நமது முப்பாட்டன் கரிகால் பெருவளத்தான், காவிரியின் குறுக்கே அணை கட்டி, பெருகி வந்த நீரை திருப்பி விட்டு, வறண்ட நிலங்களுக்கு பாசன நீர் கொடுத்து விவசாய உற்பத்தியை பெருக்கினான். அதனால்தான் சோழ வள நாடு சோறுடைத்து என்றானது. அந்த சோழ நாடான தஞ்சை தரணியில் இன்றைக்கு வயல்கள் காய்கின்றன. கர்நாடக அரசு நமக்குரிய நீர்ப் பங்கை அளிக்காததால், அணைகள் வறண்டு, விவசாயிகளின் வாழ்கை இருண்டு கிடக்கிறது. உணவளித்த வயலிலேயே தனது உடையால் தூக்கு மாட்டிக்கொண்டு தமிழ்நாட்டு விவசாயி சாகிறான். கேட்பதற்கு நாதியில்லை.

மத்தியில் ஆளும் காங்கிரஸ் அரசு, ஏன் தமிழ்நாட்டிற்குத் தண்ணீர் தர மறுக்கிறாய் என்று கர்நாடகத்தை அதட்டிக் கேட்கவிலை. அப்படிக் கேட்டால் கர்நாடகத்தில் அடுத்த முறை ஆட்சிக்கு வர முடியாது என்று கருதுகிறது. பா.ஜ.க. நிலையும் அதுதான். இந்த இரண்டு தேசியக் கட்சிகளும், கர்நாடகத்திலும் கேரளத்திலும் மாநிலக் கட்சிகளாகவே இருக்கின்றன. ஆனால் இங்கு மட்டும் தமிழனை இந்தியனாக இருக்க வேண்டும் என்று பேசுகின்றன. எனக்கு நீரியில்லையே என்று கேட்டால், அதற்கு பதில் இல்லை.

முல்லைப் பெரியாறு அணையை உடைக்கப்போகிறோம் என்று கேரள காங்கிரஸ் தலைவர்கள் பேசுகிறார்களே, அப்படி பேசாதீர்கள் என்று சொல்வதற்கும், அந்த அணை பாதுகாப்பாக இருக்கும் என்று உறுதி கூறுவதற்கும் ஒரு காங்கிரஸ் தலைவர் இருக்கிறாரா இந்த மண்ணில், இல்லை.

இலங்கையில் எம்மினம் சிங்கள பெளத்த இனவாத அரசினால் திட்டமிட்டு அழிக்கப்படுகிறது. அவர்கள் பாதுகாப்புடனும் முழு அரசியல் உரிமையுடனும் வாழ வேண்டுமெனில தனித் தமிழ் ஈழமே தீர்வு என்று நாம் கூறினால், அதனை தேசியக் கட்சிகளான காங்கிரஸூம் பாரதிய ஜனதாவும் எதிர்க்கின்றன. இந்த இரண்டு கட்சிகளை விட தமிழீழ விடுதலையை இங்குள்ள மார்க்சிஸ்ட் கட்சிதான் கடுமையாக எதிர்க்கிறது.

ராஜிவ் காந்தி படுகொலையில் மரண தண்டனை விதிக்கப்பட்ட மூவர் விடுதலை பற்றி இப்போது கருணாநிதி பேசுகிறார். இன்றைக்கு இந்திய நாட்டின் குடியரசுத் தலைவராக இருக்கும் பிரணாப் முகர்ஜி, தனக்கு ஆதரவளிக்குமாறு கருணாநிதியை சந்தித்த போதே, இந்த மூவருக்கும் நீங்கள் குடியரசுத் தலைவராக பொறுப்பேற்ற பின்னர் கருணை காட்டி தண்டனைக் குறைப்பு செய்ய வேண்டும் என்று ஏன் கேட்கவில்லை?

தமிழ் மொழிக்கு தமிழ்நாட்டில் இடமில்லை. தமிழ்நாட்டின் உயர் நீதிமன்றத்தில் தமிழில் வழக்காட அனுமதியில்லை. தமிழ் வழக்காடு மொழியாக அனுமதியளிக்க வேண்டும் என்று தமிழக சட்டப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றி நடுவண் அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது. நீங்கள் குடியரசுத் தலைவரான பிறகு அதற்கு ஒப்புதல் அளிக்க வேண்டும் என்கிற நிபந்தனையை பிரணாப் முகர்ஜியிடம் கருணாநிதி விதித்திருக்க வேண்டும். அப்போது செய்யவில்லை, இப்போது பேசுகிறார்.

தமிழ்நாட்டிலுள்ள மாநகராட்சி உள்ளிட்ட அரசு நடத்தும் பள்ளிகளில் மட்டுமே தமிழ் பயிற்று மொழியாக இருந்தது. அந்த நிலைக்கும் இப்போது வேட்டு வைத்துவிட்டார்கள். ஆங்கில மொழி பயிற்று மொழி என்று தமிழக அரசு அறிவித்துவிட்டது. இது தமிழ் மொழிக்கு செய்யும் அவமரியாதை இல்லையா?

தங்கள் சாதிப் பெண்ணை கடத்திச் சென்று திருமணம் செய்துகொள்கிறார்கள் என்று கூறி, ஒரு தலைவர் மாமல்லபுரத்தில் இலட்சக்கணக்கில் தன் சாதியினரை கூட்டி மாநாடு நடத்துகிறார். அன்றைக்கு ஈழத்திலே இசைப்பிரியாவைப் போன்ற எண்ணற்ற நமது தங்கைகளும், அக்காள்களும் கற்பழிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டபோது இப்படியொரு பெரும் மாநாட்டைக் கூட்டி மருத்துவர் ஐயா அவர்கள் எதிர்ப்பு காட்டியிருந்தால் நாம் தமிழர் கட்சியே பிறந்திருக்காதே.

எங்களை தீவிரவாதிகள் என்று காவல் துறையைச் சேர்ந்த சிலர் பரப்புரை செய்கிறார்கள். ஜனநாயக வழியில் நின்று தமிழினத்திற்காக போராடும் எங்களைப் பார்த்து எந்த அடிப்படையில் தீவிரவாதிகள் என்கிறீர்கள்? கொலை, கொள்ளை என்று எதிலாவது நாங்கள் ஈடுபட்டதாக நீங்கள் கூற முடியுமா? தலைவர் பிரபாகரனின் படத்தை போட்டு சுவரொட்டி ஒட்டக் கூடாது என்கிறீர்கள். அது எப்படி நியாயமாகும்? எம் இனத்தின் விடுதலைக்காக போராடிய, எம் இனத்தின் மதிப்புமிக்க அடையாளம் எமது தலைவர் பிரபாகரன். நாங்கள் ஒட்டும் சுவரொட்டிகளை காவல் துறையினர் கிழத்து எறிகின்றனர். எதற்காக இப்படியெல்லாம் செய்கிறீர்கள்? நாங்கள் ஜனநாயக வழியில் அரசியல் செய்கிறோம். எங்களை இப்படியெல்லாம் சீண்டிணால், நாங்கள் மதிக்கும் காவல் துறையையே எதிர்த்து போராட்டம்  நடத்த வேண்டிய அவசியம் ஏற்படும்

இவ்வாறு சீமான் பேசினார். இக்கூட்டத்தில் தமிழ் முழக்கம் சாகும் அமீது, கலைக்கோட்டு உதயம், அய்யநாதன், அன்புத் தென்னரசன் ஆகியோரும் பேசினர். வழக்கறிஞர் செ.இராசன் தலைமை தாங்கினார், நாகப்பன் முன்னிலை வகித்தார்.