உலகளாவிய அளவில் தொழிலாளர்களின் உரிமை நிலைநாட்டப்பட்ட நாள் மே தினம்.

40

நாம் தமிழர் மே தின செய்தி

உழைக்கும் மக்களின் உரிமையை தங்கள் இன்னுயிரை ஈகம் செய்து நிலைநிறுத்திய தொழிலாளர்களால், உலகளாவிய அளவில் தொழிலாளர்களின் உரிமை நிலைநாட்டப்பட்ட நாள் மே தினம் என்று போற்றப்படுகிறது. உலகெங்கிலும் இன்றளவி்ல் தொழிலாளர்கள் பெற்றுள்ள உரிமைகளை காப்பாற்றக்கூடிய அனைத்து சட்டங்களுக்கும் அன்றைக்கு தொழிலாளர்கள் சிந்திய இரத்தமே காரணமாகும். அப்படிப்பட்ட உன்னத நாளை தமிழ்நாட்டில் நாம் கொண்டாடிவரும் வேளையில் இங்கு வாழும் உழைக்கும் மக்களிடையே சாதிய அரசியல் உட்புகுந்து, அவர்களை சாதி ரீதியாக பிளந்து, மோதவிட்டு இரத்தம் சிந்தச் செய்துவரும் கொடூரம் நிகழ்ந்துள்ளது.

அன்றாடம் காச்சிகளாய், விவசாயக் கூலிகளாய், கடைமட்ட தொழிலாளர்களாய், அமைப்பு சாரா தொழில்களில் அடிமைப்பட்டு உழலும் தமிழ்நாட்டின் அடிதட்டு மக்களின் மனது டாஸ்மாக் மதுவிற்கு அடிமையாகி அழிக்கிறது, மற்றொரு வகையில், சாதிய அரசியல் அவர்களை பிளந்து மோதவிடுகிறது. அப்படிப்பட்ட மோதல்தான் சமீபத்தில் மரக்காணத்தில் நிகழ்ந்துள்ளது. தமிழினத்தின் இரண்டு பெரும் சமூகங்களை அடிப்படையாகக் கொண்டு செயல்பட்டுவரும் சாதிய அரசியலே இந்த மோதலுக்கு அடிப்படையாக இருந்துள்ளது.

கடந்த இரண்டாண்டு காலத்தில் இப்படிப்பட்ட சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருவது கவலையளிக்கிறது. சிங்கள பெளத்த இனவாத அரசின் திட்டமிட்ட இன அழித்தலுக்கு ஈழத் தமிழினம் ஆட்பட்டுவரும் நிலையில், இங்கு தமிழ்நாட்டில் ஒன்றுமையாய் இருந்து, சமூக நல்லிணக்கம் காட்டி, ஈழத் தமிழினத்தின் துயரைத் துடைக்க போராட வேண்டிய பொறுப்புள்ள தமிழர் இனம், சாதிய அரசியலால் பிளவுபட்டு, தற்குரித்தனமாக மோதிக்கொண்டு இரத்தம் சிந்துவது வேதனையாகவுள்ளது.

தங்களை இணைப்பது உழைப்பும், தமிழன் என்கிற பாரம்பரிய, வரலாற்றுப் பெருமைமிக்க இனம் என்கிற அடையாளங்கள் புறந்தள்ளப்படுகிறது. அதற்கு மாறாக, சாதிய உணர்வும், அரசியலும் முன்வைக்கப்படுகிறது. இதனை எம் உயிரினும் மேலான தமிழ் மக்கள் நன்கு இனம்கண்டு தெளிவு பெற வேண்டும் என்று நாம் தமிழர்  கட்சி கேட்டுக்கொள்கிறது. சேற்றில் இறங்கி உழைக்கும்போதும், தொழிற்சாலைகளில் வெந்து, நொந்து வேலை செய்யும்போதும் வராத சாதிய உணர்வு, சமூக, அரசியல் தளங்களில் நிலைபெறுவதை எவ்வாறு சகித்துக் கொள்வது?

பெரியார், அம்பேத்கர், மார்க்ஸ் போன்ற புரட்சியாளர்களின் சிந்தனைகளுக்கு ஆட்பட்டு தமிழினம் தெளிவு பெற வேண்டியது மிக அவசியமாகும். நமது வழிகாட்டிகளாக இருக்கும் இத்தலைவர்களின் பாதையே நம்மை மனிதர்களாய் வாழ வைத்து வழிநடத்தும் ஆற்றல் கொண்டவை. இவர்கள் காட்டிய பாதையிலும், நம் இனத்தின் விடுதலைக்காக தமிழினத்தின் தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரன் காட்டிய புரட்சிப் பாதையிலும்தான் தமிழினம் எழுச்சி பெற முடியும். இதைத் தவிர்த்து வேறெந்த பாதையும் நம் விடியலுக்கு வழிவகுக்காது என்பதை புரிந்துகொண்டு, தமிழினத்தின் அங்கமாய் இருக்கும் நாம் அனைவரும் நாம் தமிழர் என்கிற உணர்வோடு ஒற்றுமையோடு வாழ்வோம் என்று இந்த மே தினத்தில்   உறுதியேற்போம்.

 செந்தமிழன் சீமான்

தலைமை ஒருங்கிணைப்பாளர்

முந்தைய செய்திதிருப்பூர் வடக்கு மாவட்டம் சார்பாக 20வது வட்டக்கிளை திறப்பு.
அடுத்த செய்திவிவசாயத்திற்கு 6 மணி நேரமாவது மும்முனை மின்சாரம் வழங்க வேண்டும்