ஆஸ்ரேலியாவில் தமிழ் அகதிகள் உண்ணாவிரதம்

23

சர்வதேச சட்டங்களின் படியும் அவுஸ்திரேலிய சட்டங்களின் படியும் அகதிகள் என ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ள 25 தமிழர்கள் உட்பட 28 பேர் மெல்பேணில் தொடர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளார்கள்.

கடந்த திங்கட்கிழமை (08 – 03 – 2013) அதிகாலை 2 மணி தொடக்கம் தடுப்புமுகாமின் முற்பகுதியில் அமர்ந்தவாறு உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ள இவர்கள், “தங்களை விடுதலை செய்யுமாறு அல்லது கருணைக்கொலை செய்யும்படியும்” தமது கோரிக்கைகளை முன்வைத்துள்ளார்கள்.

இவர்கள் அந்நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்  எனக்கூறி ”முடிவில்லா தடுப்புமுகாம் வாழ்க்கை” என்ற நிலையில் மூன்று ஆண்டுகளுக்கு மேலாக தடுத்துவைக்கப்பட்டுள்ளார்கள்.

இவர்கள் அனைவரும் அகதிகள் என ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ள நிலையில், குறிப்பாக ஈழத்தமிழர்கள் என இலக்குவைக்கப்பட்டு இவ்வாறான இறுக்கமான நடைமுறையின் கீழ் தடுத்துவைக்கப்பட்டுள்ளதாக பொதுவான கருத்துநிலவுகின்றது.

தற்போதைய நடைமுறையின்படி அகதிகள் என ஏற்றுக்கொள்ளப்பட்டாலும் பாதுகாப்பு பரிசோதனை என்ற மதிப்பீட்டை அந்நாட்டின் புலனாய்வு அமைப்பான ASIO மேற்கொண்டபின்னர் அகதிகளுக்கான விசா வழங்கப்பட்டுவருகின்றது. பாதுகாப்பு மதிப்பீட்டில் ஒருவர் நிராகரிப்பட்டால் அவர் காலவரையறையற்ற முறையில் தடுப்பு முகாமில் அடைக்கப்படுவார். அவர்களுக்கான மீள் விசாரணையோ மேல்முறையீடோ அனுமதிக்கப்படுவதில்லை. இந்நடைமுறையின் காரணமாக ஈழத்தமிழ் மக்களே பெரும்பாலும் பாதிப்பை எதிர்நோக்கியிருக்கிறார்கள். இவ்வாறு பாதுகாப்பு மதிப்பீட்டில் நிராகரிக்கப்பட்ட நிலையில் பெண்கள் குழந்தைகள், சிறுவர்கள் உட்பட சுமார் 55 ஈழத்தமிழர்கள் காலவரையறையற்ற முறையில் தடுப்பு முகாமில் அடைக்கப்பட்டுள்ளார்கள்.

மூன்றாண்டுகளுக்கும் மேலாக எதிர்காலம் பற்றிய எதுவித நம்பிக்கையுமின்றி, சாகும்வரை தடுப்புக்காவலிலேயே வாழ்ந்தழியும் நிலைமீது அதிருப்தி அடைந்த நிலையில் மெல்பேண் முகாமில் தங்கியுள்ள 28 பேர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளார்கள்.

முந்தைய செய்திதிருப்பூர் வடக்கு மாவட்டம் -15 வேலம்பாளையம் கிளை திறப்பு
அடுத்த செய்திதமிழக மீனவர்களை இலங்கை கடற்படை தாக்கவில்லை என்றால், பிறகு தாக்குவது யார்?