டெசோ அறிவித்துள்ள முழு அடைப்பு போராட்டம் தமிழினத்தை திசை திருப்பும் திட்டமிட்ட நாடகம்

14

டெசோ அறிவித்துள்ள முழு அடைப்பு போராட்டம் தமிழினத்தை திசை திருப்பும் திட்டமிட்ட நாடகம்:

இலங்கையில் நடந்த போரில் ஈழத் தமிழினம் திட்டமிட்ட இன அழித்தலுக்கு உட்படுத்தப்பட்டதையும், அங்கு நடந்தது போர்க் குற்றம் மட்டுமல்ல, அந்த போரே குற்றம் என்பதையும் நிரூபிக்கத்தான், சுதந்திரமான பன்னாட்டு விசாரணை நடத்தப்பட வேண்டும் என்பது உலகத் தமிழினத்தின் ஒட்டுமொத்த ஒரே கோரிக்கையாகும்.

இலங்கையில் தமிழினத்தைக் கொன்று குவித்த இனப் படுகொலையாளன் ராஜபக்ச தலைமையிலான அரசே, அந்த விசாரணையை மேற்கொள்ள வேண்டும் என்கிற நிலைப்பாட்டை தொடக்கத்தில் இருந்தே நாம் தமிழர் கட்சி எதிர்த்து வந்துள்ளது. கொலையை செய்தவனே கொலைக்குற்றம் பற்றி விசாரிப்பதா? என்று ஐ.நா. பொதுச் செயலர் பான் கி மூன் அமைத்த நிபுணர் குழு அறிக்கை வெளியான உடனேயே நாம் தமிழர் கட்சி கேள்வி எழுப்பியது. ஆனால் கடந்த ஆண்டு அமெரிக்க முன்மொழிந்து, ஐ.நா. மனித உரிமை மன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை, ஆதரிப்பதுபோல் நடித்து, இரண்டு திருத்தங்களைச் செய்து இந்திய மத்திய காங்கிரஸ் அரசு நீர்த்துப்போகச் செய்தது. அதன் விளைவு இன்று வரை இலங்கை போரில் நடந்த பாரிய குற்றங்கள் தொடர்பாக எந்த விசாரணையும் கடந்த ஓராண்டுக் காலத்தில் நடக்கவிடாமல் இலங்கை அரசு முட்டுக்கட்டை போட்டது. அதற்கு வழிவகுத்த இந்திய மத்திய காங்கிரஸ் அரசு ஏன் என்று் கேள்வி எழுப்பாமல் மெளனம் சாதித்தது.

காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசில் அங்கம் வகித்துவரும் தி.மு.க., ஐ.நா. மனித உரிமை மன்றத்தில் நிறைவேற்றப்பட்டத் தீர்மானத் தொடர்ந்து எந்த விசாரணையும் நடைபெறாதது ஏன் என்று கேட்கவில்லை. தி.மு.க. தலைவர் கருணாநிதியால் மீ்ண்டும் தொடங்கப்பட்டு, பெரிய மாநாடு எல்லாம் நடத்தப்பட்ட டெசோ அமைப்பும் ஏன் என்று எந்தக் கேள்வியும் எழுப்பவில்லை. மத்திய அரசோடு சேர்ந்து இவர்களும் மெளனம் சாதித்தார்கள்.

இன்றைக்கு அமெரிக்கா மீண்டும் ஒரு தீர்மான வடிவை (டிராஃப்டி ரெசல்யூசன்) ஐ.நா. மனித உரிமை மன்றத்தின் 24வது கூட்டத்தில் முன்மொழியவுள்ள நிலையில், அந்த தீர்மானத்தை இந்திய அரசு ஆதரிக்க வேண்டும் என்று தி.மு.க.வின் தலைவர் கருணாநிதி கூறிவருவதும், அதற்காக வரும் 12ஆம் தேதி முழு அடைப்பு நடத்துமாறு வேண்டுகோள் விடுத்துள்ளதும் ஏன் என்ற கேள்வி எழுகிறது.

அமெரிக்காவின் வரைவுத் தீர்மானம் இன்னமும் தாக்கல் செய்யப்படாத நிலையில், அதில் என்ன இருக்கப்போகிறது என்பது பற்றி அதிகாரப்பூர்வமாக எந்த விவரமும் வெளிவராத நிலையில், அமெரிக்கா முன்மொழியவுள்ள தீர்மானத்தை ஆதரிக்க வேண்டும் என்று டெசோ அமைப்பும், அதன் தலைவருமாகவுள்ள கலைஞர் கருணாநிதி அவர்களும் போராட்டத்தில் ஈடுபடுவதும், அதனை இந்திய மத்திய அரசு ஆதரிக்க வேண்டும் என்று வலியுறுத்தி, முழு அடைப்புக்கு அழைப்பு விடுவதும் எந்த அடிப்படையில்? என்று கேட்கிறோம்.

அமெரிக்கா முன்மொழியவுள்ள வரைவுத் தீர்மானத்தில் புதிதாக எதுவும் இருக்கப்போவதில்லை என்றும், அது ஒரு நடைமுறைத் தீர்மானமாக – அதாவது கடந்த ஆண்டு நிறைவேற்றப்பட்டத் தீர்மானத்தை நடைமுறைப்படுத்துமாறு மனித உரிமை மன்றத்தையும், இலங்கை அரசையும் கேட்டுகொள்ளும் தீர்மானமாக மட்டுமே இருக்கப்போகிறது என்றும், மனிதாபிமானச் சட்டங்களின் அடிப்படையில் விசாரணை நடத்தப்பட்டால் அது பற்றிய அறிக்கையை அடுத்த மனித உரிமை மன்றத்தில் தாக்கல் செய்திட வேண்டும் என்பதைத் தவிர, அதில் இலங்கை அரசுக்கு எதிரான எந்த நடவடிக்கையும் இருக்கப்போவதில்லை என்று செய்திகள் வெளியாகிவரும் நிலையில், இந்திய அரசு அப்படிப்பட்ட ஒரு தீர்மானத்தை ஆதரிக்க வேண்டும் என்று தி.மு.க. தலைவரும், டெசோ அமைப்பும் தமிழக மக்களிடையே போராட்டம் நடத்துவதும், முழு அடைப்பிற்கு அழைப்பதும், தலைநகர் டெல்லியில் இன்று கருத்தரங்கம் நடத்தவும், அதில் ராஜபக்ச நடத்திய தமிழின அழிப்பிற்குத் துணைபோன காங்கிரஸ் அழைக்கவுள்ளதும் திட்டமிட்ட திசை திருப்பும் நடவடிக்கைகளாகும்.

இலங்கையில் தமிழின அழிப்புப் போர் உச்சகட்டமாக நடந்தபோது, மத்திய அரசின் நிலைப்பாடு எதுவோ அதுவே தமிழக அரசின் நிலைப்பாடு என்று கூறியதோடு மட்டுமின்றி, இலங்கை இறையாண்மையுடைய வேறொடு நாடு, அதன் உள் விவகாரத்தில் தலையிட முடியாது என்று மத்திய அரசின் குரலை எதிரொலித்து தமிழின அழிப்பிற்கு துணைபோன ஆட்சியின் முதல்வராக இருந்தவர் கருணாநிதி. 27.04.2009 அன்று போரை நிறுத்தக்கோரி கடற்கரையில் அரை நாள் உண்ணாவிரத நாடகத்தை அரங்கேற்றி, போர் நின்றுவிட்டது என்று கூறி, அன்றைக்கு தமிழ்நாட்டு மக்களை மட்டுமின்றி, போர்களத்தில் சிக்கியிருந்த தமிழீழ மக்களையும் திசைதிருப்பி கழுத்தறித்தவர்தான் கருணாநிதி. இதையெல்லாம் தமிழினம் மறந்துவிட்டிருக்கும் என்ற நினைப்போடு இப்போது டெசோ அமைப்பை மீண்டும் உயிர்ப்பித்து நாடகம் நடத்துகிறார். தமிழ்நாட்டு மக்கள் இதனை புரிந்துகொள்ள வேண்டும்.

போர் நின்றுவிட்டது என்று ராஜபக்ச பொய் சொன்னது போர்க் குற்றம் என்று கருணாநிதி இன்று அறிக்கை விடுகிறார். ஆனால், இவர் போர் நின்றுவிட்டதாக கூறிய அன்றே, போர் நிறுத்தப்படவில்லை என்று கொழும்புவில் ராஜபக்ச அறிவித்தது ஊடகங்களில் செய்தியாக வந்தது. அது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது, மழை நின்றுவிட்டது, தூறல் நிற்கவில்லை என்று அங்கு தமிழ் மக்கள் மீது நடத்தப்பட்ட குண்டு வீச்சை விவரித்தவர்தான் கருணாநிதி. போர் நிறுத்தப்பட்டதுவிட்டது என்று ராஜபக்ச கூறிய பொய்யை கலைஞரும் கூறியது போர்க் குற்றம்தானே? எனவே ஈழத் தமிழினத்திற்கு தான் செய்த துரோகத்தால் தமிழ்நாட்டு மக்களிடையே அரசியல் செல்வாக்கை இழந்து நிற்கும் கருணாநிதி, இப்போது டெசோ அமைப்பைக் கொண்டு தமிழ்நாட்டு மக்களை திசை திருப்பி அரசியல் லாபம் தேட முயற்சிக்கிறார். இதனை தமிழக மக்கள் புரிந்துகொள்ள வேண்டும். சில்லரை வர்த்தகத்தில் அந்நிய நேரடி முதலீட்டு எதிர்ப்பு தெரிவிப்பதுபோல் தெரிவித்துவிட்டு, பிறகு ஆட்சிக்கு ஆதரவாக வாக்களித்த கருணாநிதியின் நாடகத்தை வணிகப் பெருமக்கள் புரிந்துகொண்டு நடந்துகொள்ள வேண்டும் என்று நாம் தமிழர் கட்சி கேட்டுக்கொள்கிறது.

செந்தமிழன் சீமான்

தலைமை ஒருங்கிணைப்பாளர்

முந்தைய செய்திஈழத் தோழமை நாள்-பெங்களூர் வில்சன் கார்டன் பகுதியில் அனுசரிப்பு
அடுத்த செய்திஈரோடை மாவட்டத்தில் தொடர் முழக்க பட்டினிப் போராட்டம் நடைபெறவுள்ளது.