இல.மணியின் தீக்குளிப்பு என்னை முழுமையாக உருக்குலைத்து விட்டது-

50

நமது தொப்புள் கொடி உறவுகளான ஈழத்தமிழர்கள் சிங்கள பேரினவாத அரசினால் இனப்படுகொலை செய்யப்பட்டதை தமிழ்த் தேசிய இனம் தனது ஆன்மாவில் ஆறாத காயமாய் சுமந்து வருகிறது என்பதற்கு சான்றாக கடலூர் மாவட்டம், கடலூர் தாலுக்கா, நல்லவாடு கிராமத்தினைச் சேர்ந்த தம்பி இல.மணியின் தீக்குளிப்பு சம்பவம் அமைந்துவிட்டது. சிங்கள பேரின வாத அதிபர் ராஜபக்சேவை போர்குற்றவாளியாக அறிவிக்க கோரியும், தமிழீழ நாட்டினை சர்வதேச சமூகம் அமைத்து தரக் கோரியும்,கடலூர் சுனாமி குடியிருப்பு கட்டிடப் பணிகளில் நடந்த முறைகேடுகளை கண்டறிந்து, பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நிவாரணம் அளிக்க கோரியும் தீக்குளித்த என் அருமைத் தம்பி இல.மணி நாம் தமிழர் கட்சியின் கடலூர் பகுதி ஒன்றிய ஒருங்கிணைப்பாளராக களமாடியவர் . எமது அமைப்பின் பெருமைமிக்க தளபதியாக விளங்கும் இல.மணியின் தீக்குளிப்பு என்னை முழுமையாக உருக்குலைத்து விட்டது. நீண்ட நெடிய காலமாக தமிழ்த் தேசிய இனம் தம் வரலாற்றுப் பாதையில் எத்தனையோ இழப்புகளை சந்தித்து கொண்டே இருக்கிறது. கடந்த 2009 ஆம் ஆண்டு முள்ளிவாய்க்காலில் சிங்கள பேரின வாதத்தினால் பெருக்கெடுத்து ஓடிய தமிழனின் குருதி இன்றும் உலராத நிலையில் தம்பி.இல.மணியின் தீக்குளிப்பு முயற்சி இந்த இனம் இன்னும் தன்னை அழித்தே தழைக்க முயல்கிறது என்பதை உணர முடிகிறது.தமிழரின் தாய்நிலமான ஈழத்தில் உயிராக உடலாக உதிர்ந்த இந்த இனம் துளிர்ப்பதற்காக உணர்வோடும், அறிவோடும் களமாடவேண்டிய, என் அன்பிற்கினிய தளபதி தம்பி இல.மணி இப்படி தன்னைத்தானே அழித்துக்கொண்டு இந்த இனத்தை எழுப்ப முயற்சிப்பதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இன விடுதலை பாதையில் தமிழினம் இழந்த உயிர்கள் ஏராளம் இருக்க, தம்பி.இல.மணி போன்ற என்னுயிர்த் தம்பிகளை இழக்க குடும்பத்தின் மூத்த அண்ணனான என்னால் ஒரு போதும் முடியாது. சத்தியத்தின் திரு உருவாக விளங்கும் தேசியத் தலைவர் மேதகு.வே.பிரபாகரனின் தம்பிகளான நாம் உறுதியாக வெல்வோம் என்ற நம்பிக்கையோடு களமாட வேண்டிய எம் தம்பிகள் இது போன்ற தீக்குளிப்பு சம்பவங்களில் ஒருபோதும் ஈடுபடக்கூடாது என்று உரிமையோடு கேட்டுக்கொள்கின்றேன்.

மாவீரர்கள் அப்துல்ரவூப்,முத்துக்குமார்,செங்கொடி போன்ற நம் இனத்தின் பெருமைமிக்க ஆளுமைகளை, வளர்ந்து வாழ்ந்து இந்த இனத்திற்கு உதாரணங்களாய் விளங்க வேண்டியவர்களை, தீயின் செந்நாவிற்கு பலி கொடுத்துவிட்டு, பரிதவித்து நிற்கின்ற இக்காலக்கட்டத்தில் தம்பி.இல.மணியின் தீக்குளிப்பு முயற்சி என்னை மட்டும் அல்ல, நாம் தமிழர் என்கின்ற இந்த இனத்தின் பெரும் குடும்பத்தையே கடும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

வேண்டாம் தம்பிகளே! இழந்தது போதும்.களமாட,வெற்றி பெற நமக்கு இலட்சியம் மிக்க இலக்குகள் இருக்கின்றன. நம் இனத்தை அழித்த சிங்கள பேரின வாத அரசினை தமிழ்த் தேசிய இனம் சினம் கொண்டு,வன்மம் சுமந்து உலகச் சமூகத்தின் முன் நிறுத்தி பழிதீர்த்துக் களமாடவேண்டிய இக்காலக்கட்டத்தில் தம்பி.இல.மணியின் தீக்குளிப்பு முயற்சி தவிர்க்கபட்டிருக்க வேண்டிய ஒன்றாகவே நான் கருதுகிறேன். எம்மை ஆற்றொணாத் துயரிலும், கண்ணீரிலும் ஆழ்த்தி இருக்கிற தம்பி.இல மணியின் தீக்குளிப்பு போன்ற தன்னைத் தானே அழித்துக் கொள்ளும் செயல்களில் தமிழின இளைய சமூகம் ஒரு போதும் ஈடுபடக் கூடாது என்று கேட்டுக் கொள்கிறேன்.

உயிரை தர வேண்டாம்..தம்பிகளே..நாம் தமிழர் என்கிற உணர்வினை தாருங்கள்.அது போதும். இந்த இனத்தின் விடுதலைக்கு. என உங்களிடம் அன்புடன் வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன்.

செந்தமிழன். சீமான்,
தலைமை ஒருங்கிணைப்பாளர்,

முந்தைய செய்திஈழ தோழமை நாள் 4-3-2013
அடுத்த செய்தி“ஈழம் எமக்கு அரசியல் அல்ல அவசியம்” – பொதுக்கூட்டம்