டீசல், சமையல் எரிவாயு உருளை அநியாய விலையேற்றத்தை திரும்பப் பெறுக.

18

டீசல், சமையல் எரிவாயு உருளை அநியாய விலையேற்றத்தை திரும்பப் பெறுக: நாம் தமிழர் கட்சி

 பெட்ரோல் விலையை சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையேற்றத்திற்குத் தக்கவாறு உயர்த்திக்கொள்ள எண்ணெய் நிறுவனங்களுக்கு அனுமதியளித்து, அதன் மூலம் ஒவ்வொரு வாரமும் பெட்ரோல் விலை உயர வழிவகுத்த மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசு, இப்போது டீசல் விலை நிர்ணய உரிமையையும் எண்ணெய் நிறுவனங்களுக்கு வழங்கியுள்ளது அப்பட்டமான மக்கள் விரோத நடவடிக்கையாகும்.

மத்திய அமைச்சரவையின் இந்த முடிவின் காரணமாக, டீசல் விலை லிட்டருக்கு 50 காசுகள் உயர்த்தப்பட்டுள்ளது. இது மாதா மாதம் அல்லது 15 நாட்களுக்கு ஒரு முறை விலைகளை உயர்த்தும் வசதியை பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்களுக்கு வழங்கியுள்ளது. இது அறிவிக்கப்பட்ட விலையேற்றம் ஆகும். ஆனால் எந்த விதமான பொது அறிவிப்பையும் வெளியிடாமல், மானியமற்ற சமையல் எரிவாயு விலையை உருளைக்கு ரூ.46 ஏற்றி, அதனை உடனடியாக நடைமுறைக்கும் கொண்டு வந்துள்ளன எண்ணெய் நிறுவனங்கள். இந்த நிதியாண்டில் மேலும் 5 சிலிண்டர்களை மானிய விலையிலேயே மக்கள் பெற்றுக்கொள்ளலாம் என்ற அறிவிப்பை மத்திய அரசு வெளியிடுகிறது. ஆனால், மானியமற்ற விலையிலேயே நேற்று சமையல் எரிவாயு உருளைகள், அதாவது உருளை ஒன்றிற்கு ரூ.936க்கு வீடுகளுக்கு விநியோகம் செய்யப்பட்டுள்ளது. இதுபற்றி கேள்வி எழுப்பிய மக்களுக்கு, ஏற்கனவே பில் போடப்பட்டுவிட்டதால் பணத்தைத் திருப்பித் தர முடியாது என்று எண்ணெய் நிறுவனங்கள் பதில் கூறியுள்ளன!

 விலையேற்றத்தை மட்டும் நள்ளிரவு முதல் நடைமுறைப்படுத்தும் எண்ணெய் நிறுவனங்கள், மக்களுக்கு சாதகமான முடிவை மட்டும் உடனடியாக நடைமுறைப்படுத்த மறுப்பது ஏன்? பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்களின் இப்படிப்பட்ட நடவடிக்கை, கொள்ளயடிக்கும் தனியார் கார்பரேட் நிறுவனங்களின் செயல்பாடுகளையே ஒத்துள்ளது. இதில் மத்திய அரசு உடனே தலையிட்டு மானிய விலைக்கும் கூடுதலாக மக்களிடம் வசூலித்த தொகையை திருப்பித் தர வேண்டும்.

டீசல் விலை லிட்டருக்கு 50 காசுகள் மட்டுமே உயர்த்தப்படும் என்று வெளப்படையாக அறிவித்தது மத்திய அரசு. ஆனால், இந்திய இரயில்வே, மாநில போக்குவரத்துக் கழகங்கள் போன்ற, தங்கள் தேவைக்கு பெரும் அளவில் டீசல் வாங்கும் நிறுவனங்களுக்கு விற்கும் டீசல் விலையை லிட்டருக்கு ரூ.10 உயர்த்தியுள்ளன. இதனால் இந்திய இரயில்வே நிறுவனத்துக்கு மட்டும் ஆண்டுக்கு கூடுதலாக 5,500 கோடி ரூபாய் செலவாகும் என்று கூறப்பட்டுள்ளது. சமீபத்தில் பயணிகள் கட்டணத்தை உயர்த்திய இரயில்வே, விரைவில் சரக்குக் கட்டணத்தை உயர்த்த இந்த விலையேற்றம் வழிவகுக்கிறது. இதேபோல் மாநில போக்குவரத்துக் கழகங்களுக்கும் கூடுதல் செலவாகும். இந்த சுமை முழுவதும் சராசரி மக்களின் தலையில்தான் விழப்போகிறது.

 இப்படி மக்களின் அன்றாட வாழ்க்கையில் ஒவ்வொரு நாளும் சுமையேற்றும் மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசு, முற்போக்குக் கூட்டணி அரசா அல்லது நாட்டு மக்களை வாட்டும் பிற்போக்கு கூட்டணி அரசா என்பதை மக்கள் சீர்தூக்கி பார்க்க வேண்டும். மத்திய அரசின் நிதி நிலையை ஒழுங்குபடுத்த விவசாயத்திற்கு அளிக்கும் மானியத்தில் இருந்து டீசல், பெட்ரோல் பொருட்களுக்கு அளிக்கும் மானியம் வரை மத்திய அரசு குறைத்து வருகிறது. ஆனால், பெரும் தொழில், வணிக நிறுவனங்களுக்கு அளிக்கும் வரி சலுகைகள் மட்டும் தொடர்ந்த வண்ணம் இருக்கிறது. இதனால் ஏற்படும் நிதிச் சுமை பற்றி மத்திய அரசு ஒருபோதும் பேசியதில்லை. ஏதாவது ஒரு வகையில் ஒவ்வொரு நாளும் விலையேற்றத்திற்கு வழி செய்வதே பொருளாதார மேதையான பிரதமர் மன்மோகன் சிங் அரசின் தொடர் சாதனையாக இருக்கிறது. ஏழை, எளிய, நடுத்தர மக்களை வாட்டும் அரசாக மன்மோகன் சிங் அரசு செயல்பட்டு வருகிறது. நாட்டு மக்களின் நலனில் சற்றும் அக்கறையற்ற இந்த அரசை தூக்கியெறிய மக்கள் தயாராக வேண்டும். இந்த அரசு தூக்கியெறியப்படாமல், இந்த நாட்டு மக்களுக்கு விடிவு காலம் ஏற்படாது.

 செந்தமிழன் சீமான்

தலைமை ஒருங்கிணைப்பாளர்

முந்தைய செய்திதமிழர் திருநாள் விழா மற்றும் விளையாட்டுப்போட்டிகள்.சீமான் பங்கேற்பு.
அடுத்த செய்திதிருவள்ளுவர் நாளை முன்னிட்டு மாபெரும் ஊர்வலம்.