சிறுவன் பாலசந்திரனின் படுகொலை தமிழின அழிப்பிற்கு அத்தாட்சி- சீமான்

548

சிறுவன் பாலசந்திரனின் படுகொலை தமிழின அழிப்பிற்கு அத்தாட்சி:

தமிழீழ தேசியத் தலைவர் பிரபாகரனின் இளைய மகன், பன்னிரண்டு வயதே ஆன சிறுவன் பாலசந்திரன், சிங்கள இராணுவத்திடம் உயிருடன் பிடிபட்ட நிலையிலேயே சுட்டுக் கொல்லப்பட்டார் என்கிற உண்மை இன்று உலகின் மனசாட்சியின் முன் பட்டவர்த்தனமாக மெய்ப்பிக்கப்பட்டுள்ளது.

ஈழத் தமிழினத்தை திட்டுமிட்டு அழித்தொழிக்கும் போரை இந்தியா உள்ளிட்ட தெற்காசிய வல்லாதிக்கங்களின் துணையோடு மகிந்த ராஜபக்சவின் சிங்கள பெளத்த இனவாத அரசு தொடுத்தபோது, அதனை தனது வீரமிக்க தமிழீழ விடுதலைப் புலிப் படையைக் கொண்டு எதிர்த்து களமாடிய தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன். சிங்கள இனவெறி இராணுவம், தடை செய்யப்பட்ட கொத்துக் குண்டுகள், வெள்ளை பாஸ்பரஸ் குண்டுகள், பல்குழல் பீரங்கிகள், விமானத்தில் இருந்து குண்டு வீச்சு என்று எல்லா முனைகளிலும் தாக்குதல் தொடுத்த போதிலும், அந்த படைகளை எதிர்த்துதான் தனது புலிப்படையின் வீரத்தைக் கொண்டு பிரபாகரன் போரிட்டார். அதனால் தமிழினத்தின் ஒன்றே முக்கால் இலக்கம் பேர் கொல்லப்பட்ட நிலையிலும், சிப்பாய் அல்லாத ஒரு சிங்களவரைக் கூட தமிழீழ விடுதலைப் புலிகள் கொல்லவில்லை.

ஆனால், அப்படிப்பட்ட வீரமிக்க, நேர்மையான தலைவனின் பிள்ளை பாலசந்திரனை, பன்னிரண்டே வயதான அந்த சிறுவனை நேருக்கு நேர் நிறுத்தி, மிக அருகில் நின்று துப்பாக்கியால் சுட்டு அவன் நெஞ்சை துளைத்துக் கொன்றுள்ளது சிங்கள இனவெறி இராணுவம். இந்த உண்மைதான் சேனல் 4 தொலைக்காட்சி வெளியீட்டின் மூலம் உலகின் கண்களைத் திறந்துள்ளது.

இதில் இருந்து சர்வதேசமும், இந்திய நாட்டின் அரசியல் தலைமைகளும் ஒரு உண்மையை தெளிவாக புரிந்துகொள்ளும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இலங்கையில் நடந்தது பயங்கரவாதத்திற்கு எதிரான போர் அல்ல, அங்கு நடந்தது போர்க் குற்றங்களும் அல்ல, மாறாக, அது தமிழினத்தை அழிக்க நடந்த திட்டமிட்ட இனப் படுகொலைப் போர்தான் என்பதை பாலசந்திரன் படுகொலை வெளிப்படுத்தும் உண்மையாகும். சிங்கள அரசையும், அதன் இனவெறி ஏற்றப்ட்ட இராணுவத்தைப் பொறுத்த மட்டில், தமிழீழ விடுதலைப் போராட்டத்தை சிதைக்க வேண்டுமென்றால், தலைவர் பிரபாகரனின் பிள்ளைகள் கூட உயிருடன் இருக்கக் கூடாது என்பதாலேயே, பாலசந்திரன் கொல்லப்பட்டுள்ளார்.

இப்படிப்பட்ட ஒரு கொடூரமான இனவெறியைத்தான் அன்று இசைப் பிரியா மீது சிங்கள இனவெறி இராணுவம் காட்டியது. அதே கோர, சிங்கள இனவெறிதான் பாலசந்திரன் படுகொலையிலும் வெளிப்பட்டுள்ளது. இதற்கு மேலும் இந்த நாட்டிலுள்ள அரசியல் கட்சிகளும், தலைமைகளும் அங்கு நடந்தது போர்க் குற்றம் அல்ல, அந்த போரே குற்றம் என்பதையும், பயங்கரவாதத்திற்கு எதிரான போர் என்ற பெயரில் இலங்கை அரசு மேற்கொண்டு திட்டமிட்ட தமிழின அழிப்பே என்பதையும் தெளிவாக புரிந்துகொண்டு, சுதந்திரமான பன்னாட்டு விசாரணைக்கு இலங்கை அரசை உட்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைக்க வேண்டும்.

தமிழினத்தை திட்டமிட்டு அழித்தொழித்த மகிந்த ராஜபக்ச தலைமையிலான சிங்கள பெளத்த இனவாத அரசிற்கு இந்திய மத்திய காங்கிரஸ் அரசு முட்டுக்கொடுத்துக்கொண்டிருக்கிறது. இந்திய அரசு அளித்துவரும் ஆதரவை கவசமாக்கிக்கொண்டு சர்வதேசத்தின் அழுத்தங்களில் இருந்து தன்னை காப்பாற்றிக்கொண்டு வருகிறது இலங்கை அரசு. இதற்கு மேலும் இதனை இந்திய நாட்டின் அரசியல் கட்சிகளும் தலைமைகளும் அனுமதிக்கக் கூடாது. இலங்கையில் நடந்த போர் குறித்து விசாரிக்க சுந்திரமான பன்னாட்டு விசாரணைக் குழுவை அமைக்க வேண்டும் என்று இந்திய மத்திய அரசை அனைத்துக் கட்சிகளும் வற்புறுத்த வேண்டும்.  

இந்தியாவின் மற்ற மாநிலங்களில் ஆட்சியில் இருக்கும் கட்சிகளும், எதிர்க்கட்சிகளாக இருந்து செயல்படும் அரசியல் தலைமைகளும் இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட அநீதிக்கு நீதி கிடைக்க வேண்டும் என்று ஒற்றை குரலில் நாடாளுமன்றத்தில் இந்திய அரசுக்கு அழுத்தம் தர வேண்டும். இதனை மற்ற மாநில அரசுகளும், கட்சிகளும் தமிழருக்கு ஆதரவான இப்படிப்பட்ட நிலைப்பாட்டை எடுக்காவிட்டால், அவைகள் தமிழர்களிடமிருந்து அந்நியபடும் நிலை ஏற்படும்.

செந்தமிழன் சீமான்

தலைமை ஒருங்கிணைப்பாளர்