இராசபக்‌சேவின் இந்திய வருகையைக் கண்டித்து மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

36

இந்திய அரசின் உறுதிமிக்கத் துணையோடு, தமிழீழ மக்களை பல்லாயிரக்கணக்கில் கொன்று குவித்து, இனப் படுகொலையை அரங்கேற்றிய சிங்கள இனவெறி அரசின் அதிபர் இராசபக்‌சேவின் இந்திய வருகையைக் கண்டித்து இன்று 07-02-2013 காலை சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக் கழக மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். காலை 10 மணியளவில் வகுப்புகள் துவங்கியவுடன் தமிழியல் துறை வாயிலிலிருந்து ஒவ்வொரு வகுப்பாக மாணவர்கள் வெளியேறி கலைத்துறை, அறிவியல் புலம், பொறியியல் புலம் என ஆயிரக்கணக்கான மாணவர்கள் திரண்டனர். இனக்கொலை குற்றவாளி இராஜபட்சே வருகைக்கு சிவப்புக் கம்பளம் விரிக்கும் இந்திய அரசின் தமிழினப் பகையை கண்டித்து முழக்கமிட்டபடி அண்ணாமலைப் பல்கலைக் மொழிப்போர் ஈகி இராசேந்திரன் சிலை துவங்கி பேரணீயாக வந்து சிதம்பரம் பேருந்து நிலையம் காந்தி சிலை அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர். போராடிய மாணவர்களை தடுத்து நிறுத்திய காவல்துறையினருக்கும் மாணவர்களுக்கும் வாக்கு வாதமும் தள்ளுமுள்ளும் ஏற்பட்டது. சாலையில் அமர்ந்து மாணவர்கள் நட்த்திய போராட்டத்தால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அண்ணாமலைப் பல்கலைக் கழக மாணவர்களின் இப் போராட்டத்தை ஒருங்கிணைத்த தமிழக மாணவர் முன்னணி நகர அமைப்பாளர் வே.சுப்பிரமணிய சிவா இது குறித்து “ ஈழத்தில் தமிழர்களை இனப்படுகொலை செய்த கொலை வெறியன் இராஜபக்சேவை இந்திய அரசு மீண்டும் மீண்டும் வரவழைத்து தமிழர்களை இழிவுப்படுத்துகிறது. பன்னாட்டு நீதிமன்றத்தில் இனப்படுகொலை குற்றம் சாட்டப்பட்டு குற்றவாளி கூண்டில் நிறுத்தப்பட வேண்டிய சிங்கள அரசுக்கு இராணுவப் பயிற்சி, பண உதவி, போர்க் கருவிகள் வழங்குவது என முற்றாக இந்திய அரசு தமிழினப்படுகொலைக்கு துணை நின்றுள்ளது. எனவே போர்க்குற்ற விசாரணையில் சிங்கள அரசோடு இந்திய அரசும் விசாரிக்கப்பட வேண்டும். சிங்கள படைக்கு பயிற்சிகள் வழங்குவதையும், சிங்கள அரசின் இராணுவ தளபதிகள், அரசியல் தலைவர்களை இந்தியாவில் வரவேற்பதை கைவிட வேண்டும் ” என்று கூறினார்.

முந்தைய செய்திஉண்ணாநிலை போராட்ட துண்டறிக்கை மற்றும் அழைப்பு கடிதம்
அடுத்த செய்திஇராசபக்‌சேவின் இந்திய வருகையைக் கண்டித்து தொடர்வண்டி முற்றுகை