பெட்ரோல் விலை உயர்வு: நடுத்தர மக்கள் மீதான பொருளாதார அராஜகம் – நாம் தமிழர் கட்சி

20

பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூ.8.00 உயர்த்தியிருப்பதன் மூலம் சாதாரண, நடுத்தர மக்களின் மீது ஒரு பொருளாதார அராஜகத்தை மத்திய அரசு கட்டவிழ்த்துவிட்டுள்ளது. காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசுக்கு மக்கள் மீது சற்றும் அக்கறை இல்லை என்பதற்கு இந்த விலையேற்றம் மற்றுமொரு அத்தாட்சியாகும்.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெணையின் விலை உயரும்போது, அதற்கேற்றபடி பொதுத் துறை நிறுவனங்களே பெட்ரோல் விலையை உயர்த்தும் சுதந்திரத்தை மத்திய அரசு கொடுத்த பிறகு பல முறை பெட்ரோல் விலை உயர்த்தப்பட்டு ரூ.70க்கு விற்றுக்கொண்டிருக்கிறது. இந்த நிலையில், கடந்த சில மாதங்களாக கச்சா எண்ணெய் விலை 100 டாலருக்கும் சற்று அதிகமாக நிலைபெற்றுள்ளது. அப்படியிருந்தும் பெட்ரோல் விலையை ஒரு லிட்டருக்கு ரூ.8 உயர்த்தியுள்ளது மத்திய அரசு. இதற்கு அது கூறும் காரணம் டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 55 ரூபாயாக குறைந்துவிட்டது, அதனால் இறக்குமதி செய்யப்படும் கச்சாவிற்கு அளிக்க வேண்டிய தொகை அதிகரித்துவிட்டது என்பதாகும்.

ரூபாயின் மதிப்பு சரிவு தன்னை பொருளாதார மேதை என்று அழைத்துக்கொள்ளும் மன்மோகன் சிங் அரசின் கையாகாத்தனத்தின் விளைவேயாகும். உலகிலேயே வேகமாக வளர்ந்துவரும் பொருளாதாரங்களில் இந்தியா இரண்டாவது இடத்தில் இருக்கிறது என்று நேற்று முன் தினம் பிரதமர் மன்மோகன் சிங் கூறியிருந்தார். ஒரு நாட்டின் பொருளாதாரம் வளர்கிறது என்றால் அதன் நாணய மதிப்பு உயர வேண்டுமே தவிர, இப்படி மூன்று மாதத்தில் 11 விழுக்காடு வரை குறையாது. ஆக இந்தியாவின் பொருளாதாரம் வளர்கிறது என்று மன்மோகன் சிங் கூறுவது வடிகட்டிய பொய் என்பது தெளிவாகிறது. ஆக ரூபாயின் மதிப்பு வீழ்ச்சியைக் காரணம் காட்டி பெட்ரோல் விலையை உயர்த்தியுள்ளது மன்மோகன் அரசு. இதே காரணத்தைக் கூறி டீசல் விலையையும் இந்த அரசு உயர்த்தலாம். ஆனால் இந்த விலையேற்றம் உண்மையில் நியாயம்தானா என்பதை பார்க்க வேண்டும்.

2008ஆம் ஆண்டில்தான் கச்சா எண்ணெணையின் விலை வரலாறு காணாத அளவிற்கு பீப்பாய் ஒன்றுக்கு 146 டாலர்களாக உயர்ந்தது. அப்போது பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.5 உயர்த்தப்பட்டு ரூ.45 ஆக உயர்ந்தது. அதன் பிறகு கச்சா எண்ணெய் விலை குறைந்தபோது மத்திய அரசு அந்த விலையுயர்வை திரும்பப் பெற்றது. ஆனால் இப்போது கச்சா எண்ணெணையின் விலை பீப்பாய்க்கு 100 டாலராக மட்டுமே இருக்கும்போது பெட்ரோல் விலையை கிட்டத்தட்ட இரண்டு மடங்காக ரூ.78 ஆக உயர்த்தியிருப்பது எந்த அடிப்படையில் என்று கேட்கிறோம். எனவே இந்த விலை உயர்வு மக்கள் மீது சுமத்தப்படும் அநியாயமான சுமையாகும். எனவேதான் இந்த விலையேற்றத்தை நாம் தமிழர் கட்சி மக்களின் மீதான பொருளாதார அராஜகம் என்று கூறுகிறது.

நியாயமற்ற இந்த விலையேற்றத்தை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும். கச்சா எண்ணெய் விலைக்கும், பெட்ரோல் விலைக்கும் உள்ள தொடர்பை ஒரு வெள்ளை அறிக்கை அளித்து விளக்க வேண்டும்.

முந்தைய செய்திவிருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பில் நடந்த பொதுகூட்டம் – புகைப்படங்கள் இணைப்பு!!
அடுத்த செய்திகோவை இன எழுச்சி பொதுக்கூட்டம்/மூன்றாம் ஆண்டு துவக்க விழா – புகைப்படங்கள் இணைப்பு!!