கூடங்குளம் நோக்கி ஜனநாயக உரிமை காப்பு நடைபயணம் – சீமான் அழைப்பு

18

தங்களின் வாழ்விற்கும், வாழ்வாதரங்களுக்கும், எதிர்காலத்திற்கும் பெரும் அச்சுறுத்தலாக இருக்கும் கூடங்குளம் அணு உலைகளை எதிர்த்து அமைதி வழியில் அப்பகுதி மக்கள் நடத்திவரும் போராட்டத்தை ஒடுக்க காவல் துறையைக் கொண்டு மிகப் பெரிய அடக்குமுறையை மாநில அரசு கட்டவிழ்த்துவிட்டுள்ளது ஜனநாயக நெறிமுறைகளுக்கு எதிரான, கண்டனத்திற்குரிய நடவடிக்கையாகும்.

 

200 நாட்களுக்கு மேலாக அமைதி வழியில் போராடிவரும் அம்மக்களின் அச்சத்தைப் போக்குவோம் என்று உறுதியளித்த தமிழக அரசு, அவர்களின் அச்சத்தைப் போக்காமல் அணு உலைகளை இயக்குவதற்கான ஒத்துழைப்பை அளிப்போம் என்று அறிவித்தது மட்டுமின்றி, அவர்களுக்கு மேலும் அச்சுறுத்தும் வகையில் 5,000த்திற்கும் மேற்பட்ட ஆயுத காவல் படைகளை கொண்டு வந்து நிறுத்தியுள்ளது. போர்க் களத்தில் எதிரியின் படைகளை சுற்றி வளைத்து படைகளை நிறுத்துவதுபோல் இடிந்தகரையில் போராடுவரும் மக்களைச் சுற்றி காவற்படைகளை இறக்கிச் சுற்றி வளைத்துள்ளது மாநில அரசு நிர்வாகம். எவ்விதமான வன்செயலும் அங்கு நடைபெறாத நிலையில் 144 தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. செவ்வாய்க் கிழமை இரவு முதல் போராடும் மக்களுக்கு தண்ணீர், பால், தேநீர் உள்ளிட்ட சாதாரண உணவுப் பொருட்கள் கூட கிடைக்கவிடாமல் காவல் படைகள் தடுத்து வருகின்றன. போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் சிறு நீர் கழிக்கச் செல்ல விடாமல் தடுத்து நிறுத்தியுள்ளனர். அங்குள்ள கடைகள் அனைத்தையும் அடைக்கச் செய்து, போராடும் மக்களுக்கு எதுவும் கிடைக்கக் கூடாது என்று தடுத்துள்ளனர். உச்சக்கட்ட அராஜகமாக இடிந்தகரை பகுதியில் நிறுவப்பட்டுள்ள அலைபேசி தொடர்பு கோபுரங்கள் அனைத்தையும் செயலிழக்கச் செய்து, அவர்கள் வெளியில் எவருடனும் தொடர்பு கொள்ள முடியாமல் செய்துள்ளனர். இப்படிப்பட்ட நடவடிக்கைகள் அடிப்படை மனித உரிமைகளை பறிப்பதாகும். இது ஜனநாயக நாடுதானா என்கிற ஐயம் எழுகிறது. எங்களுக்கு வாக்களிப்பது மட்டும்தான் உங்கள் வேலை, மற்றது அனைத்தும் எங்களின் அதிகாரத்திற்கு உட்பட்டதே என்று கூறுவதுபோல் மாவட்ட காவல் நிர்வாகத்தின் நடவடிக்கைகள் உள்ளது.

 

மத்திய, மாநில அரசுகளின் இப்படிப்பட்ட ஜனநாயக, மக்கள் நலனுக்கு எதிரான நடவடிக்கைகளை கண்டிக்க நாளை காலை நெல்லையில் கடலென அணி திரள்வோம். அங்கிருந்து கூடங்குளம் நோக்கி ஜனநாயக உரிமை நடைபயணத்தைத் தொடங்குவோம். நியாயமான கோரிக்கைகளை முன்வைத்து போராடிவரும் கூடங்குளம் மக்களுக்கு ஆதரவாக அனைத்துக் கட்சியினரும், தமிழின உணர்வாளர்களும் அணி திரள்வோம். இதில் நாம் தமிழர் கட்சியினர் பெருமளவிற்கு பங்கேற்பார்கள்.

 

கூடங்குளத்தில் நடைபெறுவது அப்பகுதி மக்களின் வாழ்வுரிமைப் போராட்டம் மட்டுமல்ல, அது தமிழ்நாட்டு மக்களின் ஒட்டுமொத்த உரிமைப் போராட்டமே என்பதை கடலெனத் திரண்டு உலகத்தின் கவனத்தை ஈர்ப்போம். தமிழினத்தின் வாழ்விற்கு உலை வைக்கும் அணு உலைகள் எங்களுக்குத் தேவையில்லை என்பதை வலிமையாக பறைசாற்றுவோம்.

முந்தைய செய்திஅணிதிரள்வோம் ஜெனீவா ஐ.நா. முன்றலில்!
அடுத்த செய்திமத்திய அரசு ஐ.நா மன்றத்தில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா அரசு கொண்டு வந்த மனித உரிமை தீர்மானத்தினை எவ்வித நழுவலும் இன்றி தீர்க்கமாக ஆதரிக்க வேண்டும் என்று கோரி நாகையில் 18-03-2012 அன்று நடைப்பெற்ற பொதுக்கூட்டம் – நிழற்படங்கள் இணைப்பு !!