கூடங்குளம்-தமிழக அரசு முடிவு மக்களின் நலனை புறக்கணிக்கும் தவறான முடிவாகும்-நாம் தமிழர் கட்சி கண்டனம்

14

கூடங்குளம் அணு மின் நிலையம் தொடர்பாக அப்பகுதியில் வாழும் மக்களின் அச்சத்தை போக்காமல், அதனை இயக்குவதற்கான ஓத்துழைப்பை அளிப்பது என்று தமிழக அரசு எடுத்துள்ள முடிவு மக்களின் நலனை புறக்கணிக்கும் தவறான முடிவாகும். தமிழக அரசின் இம்முடிவை நாம் தமிழர் கட்சி கண்டிக்கிறது.

கூடங்குளம் அணு மின் நிலையம் இயங்கத் தொடங்கினால் அதனால் ஏற்படும் ஆபத்துகள் குறித்து அச்சம் கொண்ட அப்பகுதி மக்கள் கடந்த 6 மாதங்களாக அமைதி வழியில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களின் அச்சம் போக்கப்படும் வரை அணு உலை இயக்கத் தொடர்பான பணியை நிறுத்தி வைக்குமாறு தீர்மானம் நிறைவேற்றிய தமிழக அரசு, இப்போது மத்திய, மாநில அரசுகள் நியமித்த நிபுணர்கள் அளித்த அறிக்கைகளை மட்டும் சார்ந்து அணு உலையை இயக்க ஒத்துழைக்கும் முடிவை எடுத்துள்ளது நியாயமற்றது.

கூடங்குளம் அணு மின் நிலையம் அமைந்துள்ள பகுதியில் கடுமையான நில நடுக்கமோ, ஆழிப் பேரலைத் தாக்குதலோ ஏற்படுவதற்கு வாய்ப்பில்லை என்றும், எனவே அணு உலைக்கு இயற்கை பாதிப்பு ஏற்படாது என்கிற காரணத்தாலும், அணு உலையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் உரிய அளவிற்கு செய்யப்பட்டுள்ளன என்றும் நிபுணர்கள் குழு அளித்த அறிக்கையை சார்ந்து தமிழக அரசு இம்முடிவை எடுத்துள்ளதாக முதல்வர் கூறியுள்ளார். கூடங்குளம் பகுதியில் கடும் நில நடுக்கம் ஏற்படும் வாய்ப்பில்லை என்று எந்த அடிப்படையில் இந்த நிபுணர்கள் கூறினார்கள் என்று தெரியவில்லை. இந்தோனேசிய கடற் பகுதியில் 2004ஆம் ஆண்டு டிசம்பரில் ஏற்பட்ட கடுமையான பூகம்பம் காரணமாக உருவான ஆழிப்பேரலை, கன்னியாகுமரி கடற்கரையில் அமைந்துள்ள 133 அடி உயரம் கொண்ட திருவள்ளுவர் சிலை மூழ்கடித்ததை எல்லோரும் கண்டோம். அப்படியொரு ஆழிப்பேரலை எதிர்காலத்தில் ஏற்படும்போது கடல் மட்டத்தில் இருந்து 25 அடி உயரத்தில் மட்டுமே அமைக்கப்பட்டுள்ள கூடங்குளம் அணு உலைக்கு பாதிப்பு ஏற்படாது என்று எப்படி இந்த நிபுணர்கள் கூறினார்கள் என்று புரியவில்லை. போராடும் மக்களை மூடர்கள் என்று நினைத்து நிபுணர்கள் கூறிய கருத்துக்களின் அடிப்படையில் தமிழக அரசு முடிவெடுத்துள்ளது அறிவியல் பூர்வமாகவே தவறானதாகும்.

சங்கரன்கோயில் இடைத்தேர்தல் முடிந்த மறுநாளே தமிழக அமைச்சரவை கூடி கூடங்குளம் அணு உலை தொடர்பான முடிவை எடுத்து அறிவிக்கின்றதென்றால், இம்முடிவு ஏற்கனவே எடுக்கப்பட்ட முடிவு என்பது தெளிவாகிறது. மக்களின் வாக்குகள் மட்டுமே தேவை, அவர்களின் நலன் பற்றி அக்கறையில்லை என்பதே இம்முடிவில் இருந்து மேலும் புலனாகிறது. தமிழக முதலமைச்சரே நேரில் வந்து மக்களைச் சந்தித்து அவர்களின் அச்சத்தை போக்க வேண்டும் என்ற கோரிக்கை மதிக்கப்படவில்லை.

5,000க்கும் மேற்பட்ட காவல் படைகளை கொண்டு வந்த இறக்கி, போராட்டக் குழுவினர் 10 பேரைக் கைது செய்து சென்றது மட்டுமின்றி, அமைதியாக போராட்டம் நடைபெற்றுக்கொண்டிருக்கிற அப்பகுதியில் ஏப்ரல் 2ஆம் தேதிவரை 144 தடை உத்தரவை அரசு பிறப்பித்துள்ளது, போராடும் மக்களின் ஜனநாயக உரிமைகளை பறிப்பதாகும். கூடங்குளம் நோக்கி வந்த கூடப்புளி மக்கள் 183 பேரை வழியிலேயே தடுத்து கைது செய்து சிறை வைத்திருப்பது ஜனநாயக உரிமையை பறிக்கும் அராஜக நடவடிக்கையாகும். தங்கள் வாழ்விற்கும், வாழ்வுரிமைகளுக்கும் அச்சறுத்தலாக அமையும் அணு உலைக்கு எதிராக நியாயமான கோரிக்கைகளுடன் அமைதி வழியில் போராடிவரும் மக்களை காவல் துறையைக் கொண்டு ஒடுக்குவது மக்களின் உணர்வை அவமதிக்கும் ஜனநாயக நெறிமுறைகளுக்கு எதிரானதாகும்.

கூடங்குளம் மக்களுக்கு ரூ.500 கோடி செலவில் மேம்பாட்டுத் திட்டங்களை அறிவித்திருப்பது நேர்மை சிறிதுமற்ற மோசடியான அறிவிப்பாகும். சாலை விபத்தில் செத்தவர்களுக்கு அரசு வழங்கும் நிவாரணம் போன்று, உயிர் போவதற்கு முன்னரே அப்படியொரு நிவாரணம் வழங்கினால் எப்படியிருக்குமோ அதைப்போன்தொரு நடவடிக்கை இதுவாகும். தமிழக அரசின் முடிவும், அது மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் அனைத்தும் மக்களின் நிகழ்காலத்திற்கும், எதிகாலத்திற்கும் எதிரானது. எமது மக்களுக்கு எந்த பலமும் இல்லை, அதனால்தான் போராடி வருகிறார்கள். கூடங்குளம் அணு உலைகளுக்கு எதிரான போராட்டம் தொடரட்டும். அதனை நாம் தமிழர் கட்சி முழுமையாக ஆதரிக்கும், அவர்களுக்குத் துணை நிற்கும்.