இடிந்தகரையில் தொடரும் மக்கள் போராட்டம், உண்ணாவிரதம் நிறைவடைந்தது!!

44

 

மாநில அரசு அளித்த உறுதிகளை ஏற்று, இடிந்தகரையில் கடந்த 9 நாட்களாக உண்ணாவிரதம் இருந்து வந்த உதயகுமார், புஷ்பராயன் உள்பட 15 பேர் இன்று (செவ்வாய்க்கிழமை) தங்கள் போராட்டத்தை முடித்துக்கொண்டனர்.

அதேவேளையில், போராட்டக்கார்களை விடுதலை செய்யும் வரையிலும், போராட்டக்காரர்கள் மீதான வழக்குகள் வாபஸ் பெறும் வகையிலும், இடிந்தகரையில் போராட்டம் தொடரும் என்று உதயகுமாரன் அறிவித்தார்.

மேலும், கூடங்குளம் அணு உலைக்கு எதிரான அறப்போராட்டம் பல்வேறு வடிவங்களில் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என்று அவர் தெரிவித்தார்.

சிறையில் அடைக்கப்பட்டுள்ளவர்களை விடுவிப்பதற்காக, சட்ட ரீதியிலான நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளது என்றும், விரைவில் அவர்கள் வெளியே கொண்டுவரப்படுவார்கள் என்றும் போராட்டக்களத்தில் உள்ள மக்கள் மத்தியில் அவர் கூறினார்.

மேலும், இடிந்தகரையில் உண்ணாவிரதத்தை தவிர மற்ற வடிவங்களில் அதுவரை போராட்டம் நீடிக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

கூடங்குளம் போராட்டக்குழுவுடன் பேசுவதற்கு முன்வந்த நெல்லை மாவட்டக் கலெக்டர் செல்வராஜ், அதிகாரிகள் சிலரை இடிந்தகரைக்கு இன்று காலை அனுப்பினார்.

இதைத் தொடர்ந்து, போராட்டக்குழுவில் இருந்து யாரை பேச்சுக்கு அனுப்புவது, எந்தெந்த கோரிக்கைகளை முன்வைப்பது போன்றவை குறித்து ஆலோசிக்க, அவசர கூட்டம் நடந்தது. உடல் சோர்வடைந்த நிலையிலும் உதயகுமாரன், புஷ்பராயன் உள்ளிட்டோர் இந்த கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

xஇந்தக் கூட்டத்தின் முடிவில், கூடங்குளம் போராட்டக்குழு சார்பாக, அறிமாவளவன் தலைமையில் 10 பேர் குழுவை பேச்சுவார்த்தைக்கு அனுப்புவது என முடிவு செய்யப்பட்டது.

இதன் தொடர்ச்சியாக, ராதாபுரம் தாலுக்கா அலுவகத்தில் சுமார் 3 மணி நேரத்துக்கு பேச்சுவார்த்தை நீடித்தது.

போராட்டக்குழு முன்வைத்த 7 கோரிக்கைகள்:

இந்தப் பேச்சுவார்த்தையின்போது, போராட்டக்குழு சார்பில் அரசுக்கு 7 கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.

* போலீஸாரால் கைது செய்யப்பட்ட அணு உலை எதிர்ப்பாளர்களை விடுவிக்க வேண்டும்.

* போராட்டக்குழுவினர் மீதான வழக்குகள் அனைத்தையும் நிபந்தனையின்றி ரத்து செய்ய வேண்டும்

* நிலவியல், நீரியல், கடலியல் தொடர்பாக தமிழக மற்றும் இந்திய நிபுணர்கள் ஆய்வு செய்து அறிவித்த தகவல்களின்படி தங்களால் கேட்கப்பட்ட கேள்விகள் குறித்த உண்மைத் தன்மையை அறிய உண்மையான, நேர்மையான குழுவை நியமிக்க வேண்டும்; சர்வதேச தரத்தில் சுதந்திரமான முறையில் அந்தக் குழு ஆய்வினை மேற்கொள்ள வழிவகுக்க வேண்டும்;

* அணு உலை விபத்து காப்பீடு தொடர்பாக இந்தியா – ரஷியா இடையிலான ரகசிய ஒப்பந்தத்தை வெளியிட வேண்டும்;

* அணுக்கழிவு மேலாண்மை தொடர்பான அனைத்து தகவல்களையும் வெளியிட வேண்டும்.

* கூடங்குளம் அணு மின் நிலையத்தை போராட்டக்காரர் முற்றுகையிடவோ, அதன் பணியாளர்களுக்கு இடையூறு செய்யவோ மாட்டார்கள். அதேவேளையில், ஜனநாயக முறைப்படி கருத்துப் பரப்புரைகளைச் செய்யவும், அறப் போராட்டங்களை நடத்தவும் அனுமதிக்க வேண்டும்.

* தங்களின் இந்தக் கோரிக்கைகள் அனைத்தையும் நிறைவேற்றித் தருவதோடு, மக்களின் உணர்வுகளை மத்திய அரசுக்கு மாநில அரசு தெரியப்படுத்த வேண்டும்.

போராட்டக்குழுவின் இந்தக் கோரிக்கைகள், மாவட்ட கலெக்டர் செல்வராஜ் மற்றும் அதிகாரிகளிடம் முன்வைக்கப்பட்டது.

அரசு உறுதி…

இவற்றைக் கேட்டறிந்த அரசு தரப்பு, கூடங்குளம் அணு உலைப் பகுதி தவிர மற்ற அனைத்து இடங்களிலும் பிறப்பிக்கப்பட்டிருந்த 144 தடை உத்தரவை விலக்கிக்கொள்ள உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தது.

சிறையில் இருப்பவர்களை விடுதலைச் செய்வது தொடர்பாகவும், வழக்குகளை வாபஸ் பெறுவது தொடர்பாகவும் நீதிமன்றத்தை அணுகி, அதன் ஒப்புதலைப் பெறுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று உறுதியளித்தது. மற்ற கோரிக்கைகளும் அரசால் பரிசீலிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

பின்னர் நிருபர்களிடம் பேசிய அறிமாவளவன், அரசுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தை திருப்திகரமாக இருப்பதாகவும், தங்களது முக்கிய கோரிக்கைகளை நிறைவேற்ற உறுதியளிப்பதாகவும் தெரிவித்தார்.

இதையடுத்து, அறிமாவளவன் உள்பட 10 பேர் இடிந்தகரைக்குத் திரும்பினர். பேச்சுவார்த்தையில் ஆலோசிக்கப்பட்ட தகவல்களை உதயகுமார், புஷ்பராயன் உள்ளிட்டோருடன் அறிமாவளவன் பகிர்ந்துகொண்டார். அதுதொடர்பாக ஆலோசனைகளில் போராட்டக்குழு ஈடுபட்டது.

முடிவுக்கு வந்தது உண்ணாவிரதம்...

இதைத் தொடர்ந்து, இடிந்தகரையில் காலவரையற்ற உண்ணாவிரதம் மேற்கொண்டிருந்தவர்கள் தங்கள் போராட்டத்தை முடித்துக்கொண்டனர்.

மதுரையில் இருந்து வந்திருந்த பேராயர் பீட்டர் ஃபெர்னாண்டோ, போராட்டக்காரர்களுக்கு பழச்சாறு கொடுத்து உண்ணாவிரதத்தை முடித்து வைத்தார்.

முன்னதாக, ராதாபுரம் அதிமுக வழக்கறிஞர் இன்பதுரையால், ,மதுரை பேராயர் பீட்டர் ஃபெர்னாண்டோ அழைத்து வரப்பட்டிருந்தார். இவரது சொந்த ஊர் இடிந்தகரை என்பதால், மதுரை பேராயரும் போராட்டக்களத்தில் மக்களைச் சந்திக்க வந்தார்.

– ஆண்டனிராஜ்
படங்கள்: எல்.ராஜேந்திரன், ஏ.சிதம்பரம், ரா.ராம்குமார், ஆர்.எம்.முத்துராஜ்

நன்றி : விகடன்

முந்தைய செய்திஈழத்தமிழர் பிரச்சனைக்கு சிலையாய் உள்ள தலைவர்களிடம் மனு கொடுக்கிறேன்: புதுச்சேரியை கலக்கிய ரவீந்திரன்!!
அடுத்த செய்தி21/04/2012 அன்று சேலம் கந்தநூரில் நாம் தமிழர் கட்சியின் கொடியேற்று விழா – துண்டறிக்கை இணைப்பு!!