ஐ.நா.வில் போர்க்குற்ற விசாரணைத் தீர்மானத்தை ஆதரிக்குமாறு மத்திய அரசை தமிழக அரசு வலியுறுத்த வேண்டும்: நாம் தமிழர் கட்சி

13

இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக அந்நாட்டு அரசு நடத்திய போரில் தடை செய்யப்பட்ட ஆயுதங்களைப் பயன்படுத்தி ஒன்றே முக்கால் இலட்சம் தமிழர்களை அழித்தொழித்தது. போரின் இறுதி நாட்களில் முள்ளிவாய்க்கால்,வட்டுவாகல் ஆகிய இரண்டு கிராமங்களில் நெருக்கமாக தஞ்சமடைந்திருந்த தமிழர்களை சுற்றி வளைத்து இலங்கை இராணுவத்தினர் நடத்திய கொடூரமானத் தாக்குதலில் மட்டும் 50ஆயிரத்திற்கும் அதிகமானோர் கொன்றொழிக்கப்பட்டனர். அப்பட்டமான, திட்டமிட்ட இந்த இன அழித்தல் உலக நாடுகளையும் மக்களையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

இப்படிப்பட்ட ஒரு திட்டமிட்ட பெரும் இன அழிப்பை செய்த இலங்கை அரசுக்கு எதிராக போர்க்குற்ற விசாரணை நடத்த வேண்டும் என்று கோரி போர் முடிந்த ஒரு மாதத்திலேயே ஐ.நா. மனித உரிமை மன்றத்தில் ஐரோப்பிய நாடுகள் தீர்மானம் கொண்டு வந்தபோது அதனை எதிர்த்தது இந்திய அரசு. இந்திய அரசின் பிரதிநிதி கோபிநாத் அச்சங்குளங்கரே தீர்மானத்தை எதிர்த்தது மட்டுமின்றி, சீனா, தென் அமெரிக்க நாடுகளின் ஆதரவைப் பெற்று தீர்மானத்திற்கு எதிராக வாக்களிக்கச் செய்து தோற்கடிக்கவும் செய்தார். அதன் பிறகு இலங்கை அரசைப் பாராட்டி அந்நாடு கொண்டு வந்த தீர்மானத்தையும் இந்திய அரசு தனது செல்வாக்கைப் பயன்படுத்தி நிறைவேற்றிக் கொடுத்தது.

தங்கள் சொந்தங்களை இலட்சக்கணக்கில் கொன்றொழித்த சிங்கள இனவெறி அரசுக்கு ஆதாரவாக நின்ற இந்திய அரசின் இந்த நடவடிக்கை உலகத் தமிழர்களை அதிர்ச்சியிலும் சினத்திலும் ஆழ்த்தியது. மனித உரிமை அமைப்புகள் அனைத்தும் இந்திய அரசின் அநியாயமான நடவடிக்கையை கண்டித்தன. அதன் எதிர்வினையாகவே தமிழ்நாடு சட்டப் பேரவைக்கு நடந்த தேர்தலில் காங்கிரஸ் – திமுக அணி படுதோல்வியைச் சந்திக்க நேர்ந்தது.

ஆனால் இலங்கை அரசிற்கு எதிராக போர்க்குற்ற விசாரணை நடத்தப்பட வேண்டும் என்பதில் உலக நாடுகள் இன்று வரை உறுதியாக குரல் கொடுத்து வருகின்றன. இப்படிப்பட்ட சூழலில் இம்மாத இறுதியில் ஐ.நா.வின் மனித உரிமை மாமன்றம் ஜெனிவாவில் கூடுகிறது. ஒரு மாத காலத்திற்கு நடைபெறவுள்ள இக்கூட்டத்தில் இலங்கையில் நடந்த உள்நாட்டுப் போர் குறித்தும், அது குறித்து ஐ.நா. நிபுணர் குழு அளித்த அறிக்கை பற்றியும், போர்க்குற்றங்கள் மீது விசாரணை நடத்த பன்னாட்டுக் குழு அமைப்பது குறித்தும் விவாதிக்கப்படவுள்ளது.

இக்கூட்டத்தில் அமெரிக்க உள்ளிட்ட நாடுகள் போர்க்குற்ற விசாரணை நடத்த வலியுறுத்தி தீர்மானத்தை கொண்டுவர திட்டமிட்டுள்ளன. 2009ஆம் ஆண்டு நடந்துக்கொண்டதுபோல் இலங்கை அரசுக்கு ஆதரவாக நடந்து கொள்ளாமல், இந்திய அரசு நடுநிலையுடன் நடந்துகொள்ள வேண்டும் என்று மத்திய அரசை தமிழக அரசு வலியுறுத்த வேண்டும். இலங்கையில் நடந்த தமிழின அழிப்புப் போரின் பிரதிபலிப்பே கடந்த ஆண்டு நடந்த சட்டப் பேரவைத் தேர்தலில் அ.இ.அ.தி.மு.க. பெற்ற மாபெரும் வெற்றியாகும். அதனை கருத்தில்கொண்டே இலங்கை அரசுக்கு எதிராக போர்க்குற்ற விசாரணை நடத்த உலக நாடுகளுடன் இணைந்து மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக முதல்வரே முன்மொழிந்த தீர்மானம் தமிழக சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டு மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இப்போது மனித உரிமை மாமன்றக் கூட்டம் தொடங்கவுள்ள நிலையில், தமிழக சட்டப் பேரவையில் நிறைவேற்றிய தீர்மானத்தை நினைவூட்டி, போர்க்குற்ற விசாரணை நடத்த வலியுறுத்தும் தீர்மானத்திற்கு ஆதரவாக இந்திய அரசு செயல்பட வேண்டும் என்று பிரதமருக்கு தமிழக முதல்வர் வலியுறுத்த வேண்டும். தமிழக மக்களின் ஏகோபித்த குரலாக ஒலித்த சட்டப் பேரவைத் தீர்மானத்திற்கு எதிராக மத்திய அரசு நடந்துகொண்டால் அது தமிழக மக்களின் உணர்வுகளைப் புறக்கணிப்பதாகும் என்பதையும், அது இந்திய ஒற்றுமையின் மீது தமிழக மக்கள் கொண்டுள்ள நம்பிக்கையைத் தகர்த்துவிடும் என்பதையும் பிரதமருக்கு தமிழக முதல்வர் எடுத்துரைக்க வேண்டும் என்று நாம் தமிழர் கட்சி வேண்டுகோள் விடுக்கிறது.